மகாவலி அதிகாரசபைக்கெதிராக முல்லைத்தீவில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த ஆர்ப்பாட்டம் அரசாங்கத்தை எவ்வளவு தூரத்திற்கு அசைக்குமோ தெரியவில்லை. ஆனால் 2009 மேக்குப் பின்னரான புதிய தமிழ் எதிர்ப்பு வடிவம் குறித்துச் சிந்திக்கும் எல்லாத் தரப்புக்கும் அதில் கற்றுக்கொள்வதற்கு முக்கிய பாடங்கள் உண்டு. சனச்செறிவுள்ள யாழ்ப்பாணத்தில் அப்படியோர் ஆர்ப்பாட்டத்தைச் செய்வது வேறு. முல்லைத்தீவில் அதைச் செய்வது வேறு.

மூவாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் அதில் கலந்துகெண்டார்கள். இந்த வகை ஆர்ப்பாட்டங்களில் முதலாவதும் பெரியதுமான ஓர் ஆர்ப்பாட்டம் 2015ம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ் பல்கலைக்கழகமும் தமிழ்ச் சிவில் சமூகங்களும் இணைந்து ஒரு பெரிய ஆர்ப்பாட்டத்தினை ஒழுங்குபடுத்தின. அதிலிருந்து தொடங்கி இரண்டு எழுக தமிழ்கள் ஒரு முழு அளவிலான கடையடைப்பு ஆண்டு தோறும் நிகழும் நினைவுகூர்தல் போன்ற அதிகரித்த அளவு பொதுமக்கள் பங்குபற்றும் நிகழ்வுகளில் ஆகப்பிந்தியதாக முல்லைத்தீவு ஆர்ப்பாட்டத்தைச் சொல்லலாம்.

இவ் எல்லா ஆர்ப்பாட்டங்களிலிருந்தும் பின்வரும் பொதுப் பண்புகளை அவதானிக்கலாம்.

1. இவை ஒரு கட்சி ஆர்ப்பாட்டங்கள் அல்ல. பல கட்சிகளும் இணைந்த ஒரு பொதுப்பரப்பில் இவை ஏற்பாடு செய்யப்படுகின்றன.

2. எல்லாக் கட்சிகளும் கட்சி வேறுபாடுகளுக்கப்பால் எதிர்ப்பைக் காட்ட வேண்டிய ஒரு பொது விவகாரத்தை முன்வைத்து ஒழுங்குபடுத்தப்பட்டவை.

3. அடுத்தடுத்து குறுகியகால இடைவெளிக்குள் நிகழாதவை.
ஆட்சிமாற்றத்திற்கு முன்னரும் ஆங்காங்கே எதிர்ப்புக்கள் காட்டப்பட்டதுண்டு. அவற்றில் பெரும்பாலானவை சிறுதிரள் எதிர்ப்புக்கள்தான். ஏதாவது ஒரு பிரதான தமிழ் நகரத்தில் சிலபத்துப்பேர் கூடி எதிர்ப்பைக் காட்டுவார்கள். ஆட்சி மாற்றத்திற்கு முன்பு இவ்வாறான எதிர்ப்புக்களின் போது குறைந்தளவு ஆர்ப்பாட்டக்காரர்களையும், கூடுதலான அளவு புலனாய்வாளர்களையும், ஊடகவியலாளர்களையும் காண முடியும். இவை பெரும்பாலும் கவனயீர்ப்புப் போராட்டங்கள்தான்.

ஆட்சி மாற்றத்தின் பின்னரும் இது போன்ற கவனயீர்ப்புப் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. அவற்றை பெரும்பாலும் ஏதாவதொரு கட்சி அல்லது ஒரு செயற்பாட்டியக்கம் அல்லது சிவில் அமைப்புக்கள் போன்றன ஒழுங்குபடுத்துகின்றன. இக்கவனயீர்ப்புப் போராட்டங்கள் அடுத்தநாள் பத்திரிகையில் செய்தியாக வருவதற்குமப்பால் பெரியளவு தாக்கத்தை ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை.

ஆனால் முல்லைத்தீவில் நடந்தது போன்ற ஆர்ப்பாட்டங்கள் அப்படிப்பட்டவையல்ல. அவை அரசாங்கத்தையோ அனைத்துலக சமூகத்தையோ எந்தளவிற்கு அசைக்கும் என்பதற்குமப்பால் தமிழ் மக்கள் மத்தியில் அவை ஏற்படுத்தும் கிளர்ச்சியுணர்வு, கூட்டு மனோநிலை என்பன மிகவும் முக்கியமானவை. இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் ஒருகட்சி ஆர்ப்பாட்டங்கள் அல்ல. அவை பல கட்சி ஆர்ப்பாட்டங்கள். பெரும்பாலும் எல்லாக் கட்சிகளையும் அரவணைத்தும் ஒரு பொதுப்பரப்பில் இவை ஏற்பாடு செய்யப்படுகின்றன. இங்கு கட்சிக் குறுக்கங்களுக்கு இடமில்லை. கறுப்பு வெள்ளை அணுகுமுறைக்கும் இடமில்லை.

எதிரெதிரான போக்குகளைக் கொண்ட கட்சிகளும் இதில் ஒரு திரளாகின்றன. அரசியல் ரீதியாக பகைவர்களாகக் காணப்படும் தலைவர்கள் இங்கே ஒரு திரளாகின்றனர். அப்படிப் பார்த்தால் அதன் மெய்யான பொருளில் இவைதான் பெருந்திரள் மக்கள் மைய போராட்டங்களாகும். ஆனால் இவற்றை அடுத்தடுத்து தொடர்ச்சியாகச் செய்ய முடியாது. இடையில் எப்போதாவது அதிகம் உணர்ச்சிகரமான விவகாரத்தின் மீது ஏற்படும் கூட்டுக்கோபத்தை ஒன்று திரட்டும் பொழுது அது இவ்வாறு கூட்டு எதிர்ப்பாக மாறுகிறது. 2009 மேக்குப் பின்னரான தமிழ் எதிர்ப்பு என்று பார்க்கும் பொழுது இவற்றிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் பலவுண்டு.

2009 மே வரையிலும் தமிழ் எதிர்ப்பு எனப்படுவது ஒரு துலக்கமான இராணுவ வழிமுறையாக இருந்தது. விடுதலைப்புலிகள் இயக்கத்திடம் ஒரு தெளிவான இராணுவ மூலோபாயம் இருந்தது. 2009 மே வரையிலும் தமிழ் அரசியல் எனப்படுவது அதிகம் செயல்பூர்வமானதாக இருந்தது. அது எதிர்த்தரப்பையும், வெளித்தரப்புக்களையும் தனது செயல்களுக்கு எதிர்வினையாற்றத் தூண்டுமளவிற்கு தாக்கமுடையதாகவும் இருந்தது.

ஆனால் 2009 மேக்குப் பின் தமிழ் அரசியல் எனப்படுவது அதிகபட்சம் தேர்தல்மைய அரசியலாகவே சுருங்கி விட்டது. அரசாங்கம் மேற்கொள்ளும் நகர்வுகளுக்கு எதிர்வினையாற்றும் ஓர் அரசியலாகவும் சுருங்கி விட்டது. தனது நகர்வுகளின் மூலம் அரசாங்கத்தையும் வெளித்தரப்புக்களையும் பதில்வினையாற்றத் தூண்டும் அளவிற்கு சக்திமிக்கதாக அது இல்லை. இதை இன்னும் தெளிவாகச் சொன்னால் 2009 மேக்குப்பின்னரான தமிழ் எதிர்ப்பு எனப்படுவது இன்று வரையிலும் அதற்கேயான ஒரு புதிய செய்முறை வடிவத்தை கண்டுபிடிக்கவில்லை.

எல்லாக்கட்சித் தலைவர்களும் மக்கள் பிரதிநிதிகளும் போராடுவோம் போராடுவோம் என்று கூவுகிறார்கள். வன்முறையற்ற வழிகளில் அகிம்சைப் போராட்டம் வெடிக்குமென்று பிரகடனம் செய்கிறார்கள். ஆனால் யாராலும் இதுவரையிலும் புதிய எதிர்ப்பு வடிவத்தைக் கண்டுபிடிக்கமுடியவில்லை. இவ்வாறான ஒரு வெற்றிடத்தில்தான் காணாமலாக்கப்பட்டவர்களுக்கான போராட்டமும், காணிக்காக நடாத்தப்படும் போராட்டங்களும் 500 நாட்களைக்கடந்து தேங்கி நிற்கின்றன. வீதியோரங்களில் வெயிலில், மழையில், பனியில் கிடந்து போராடும் அந்த மக்களால் அரசாங்கத்தையோ வெளியுலகத்தையோ தீர்க்கமான வழிகளில் தம்மை நோக்கித் திருப்ப முடியவில்லை.

கடந்த வியாழக்கிழமை அனைத்துலக காணாமல் போனவர்களின் தினம் அனுஷ்டிக்கப்பட்டது. வழமையாக இவ்வாறான நிகழ்வுகளில் பங்குபற்றும் ஒரு மதகுரு இம்முறை இது தொடர்பான நிகழ்வுகளில் பங்குபற்றவில்லை. ஏனென்று கேட்ட போது அவர் சலிப்போடு சொன்னார் சம்பந்தப்பட்டவர்கள் மத்தியில் ஒற்றுமையில்லை. ஒவ்வொரு பகுதியும் மற்றைய பகுதியை வெட்டிக்கொண்டோட முயற்சிக்கின்றது. வெவ்வேறு தரப்புக்கள் பின்னாலிருந்து கொண்டு போராடும் மக்களை வழிநடத்த முயற்சிக்கின்றன. ஜெனீவாவிற்குப் போவதுதான் போராடும் மக்களின் இறுதி இலட்சியமா? என்று கேட்கத் தோன்றுகிறது. இதில் ஒரு பொம்மை போல வந்து நின்று முகம் காட்டுவதை விடவும் வராமலே விடுவது என்று தீர்மானித்தேன் என்று.

இது காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டத்திற்கு மட்டுமல்ல ஏனைய எல்லாப் போராட்டங்களுக்கும் பொருந்தும். 2009 மேக்குப் பின்னரான தமிழ்ப் போராட்டக்களத்தின் பரிதாபகரமான ஒரு குறுக்குவெட்டுமுகத் தோற்றம் இது. ஒரு புதிய தமிழ் எதிர்ப்பு வடிவத்தைக் கண்டு பிடிக்கும் வரை இந்த நிலமையே தொடரும். கடந்த 9 ஆண்டுகளாக தமிழ் மக்களின் எதிர்ப்பு நடவடிக்கைகள் ஏன் போதிய வெற்றியைப் பெறவில்லை என்பது தொடர்பாக ஒரு முறையான ஆய்வு முக்கியம்.

செல்ஃபி யுகத்திற்குப் பொருத்தமான புதிய போராட்ட வடிவங்களைக் குறித்து கருத்துருவாக்கிகளும், புத்திஜீவிகளும், செயற்பாட்டாளர்களும் ஆழமாகச் சிந்திக்க வேண்டும். தமிழ் எதிர்ப்பை ஏன் அரசாங்கமும், வெளியுலகமும் பொருட்படுத்தவில்லை என்ற கேள்விக்கு விக்னேஸ்வரனும், கஜேந்திரகுமாரும், சுரேஸ் பிரேமச்சந்திரனும் ஏனைய தலைவர்களும், பேரவையும், செயற்பாட்டியக்கங்களும் பதில் கண்டுபிடிக்க வேண்டும்.

கடந்த மாதம் விக்னேஸ்வரன் வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதியின் செயலணி தொடர்பாக சம்பந்தருக்கு அனுப்பிய ஒரு மடலோடு தமிழ் அரசியலானது இரண்டு போக்குகளைப் பிரதிபலிக்கும் ஒரு திட்டவட்டமான வளர்ச்சியை அடையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் சம்பந்தரும், விக்னேஸ்வரனும் இருவேறு செயல் வழிகளைப் பிரதிநிதிப்படுத்துகிறார்கள். சம்பந்தர் கூறுகிறார் (ஞுணஞ்ச்ஞ்ஞு) பங்கேற்பதன் மூலம் எதிர்த்தரப்பை கனியச்செய்யலாமென்று. அவருடைய அணுகு முறையில் எதிர்ப்பை விட பங்கேற்பே தூக்கலாகத் தெரிகிறது.

விக்னேஸ்வரனும் குறிப்பிடத்தக்களவிற்கு பங்கேற்பு அணுகுமுறை கொண்டவர்தான். ஆனால் அவரிடம் எதிர்ப்பே தூக்கலாகத் தெரிகிறது. இந்த இரு வேறு போக்குகளும் தமிழ் அரசியலுக்குப் புதியவையல்ல. ஏற்கெனவே இருந்தவைதான். ஆனால் ஓர் ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டிருக்கும் பின்னணியில் இனப்படுகொலைக்கு எதிரான நீதியைப் பெறத் துடிக்கும் மக்கள் மத்தியில் இவ்விரு போக்குகளுக்கும் புதிய பரிமாணங்கள் உண்டு.

சம்பந்தரின் கூடுதலான பட்சம் பங்கேற்பு அணுகுமுறையானது கடந்த ஒன்பதாண்டுகளில் எவ்வாறான வெற்றிகளைப் பெற்றிருக்கிறது? விக்னேஸ்வரனின் கூடுதலான பட்சம் எதிர்ப்பு அணுகு முறையானது கடந்த 4 ஆண்டுகளில் எவ்வாறான வெற்றிகளைப் பெற்றிருக்கிறது? 2015ம் ஆண்டு நிகழ்ந்த ஆட்சி மாற்றத்தில் கூட்டமைப்பு பங்காளியாகியதோடு சம்பந்தரின் பங்கேற்பு அணுகு முறையானது துலக்கமான ஒரு வடிவத்தைப் பெற்றது. கடந்த 4 ஆண்டுகளாக இவ் அணுகுமுறை மூலம் மேலோட்டமான மாற்றங்களே ஏற்பட்டன. அடிப்படையான மாற்றங்கள் எவையும் ஏற்படவில்லை.

அடிப்படையான மாற்றம் எனப்படுவது இனப்பிரச்சினைக்கான ஒரு தீர்வையும் உள்ளடக்கிய புதிய யாப்பை உருவாக்குவதுதான். நாடாளுமன்றத்தில் எதிரும் புதிருமாக நின்ற இரண்டு பெரிய சிங்களக்கட்சிகளும் மகிந்தவைத் தோற்கடிப்பதற்காக இணைந்து உருவாக்கிய கூட்டரசாங்கம் இது. இப்புதிய தோற்றப்பாடு காரணமாக நாடாளுமன்றத்தில் நிலவிய மூன்றில் இரண்டு பெரும்பான்மையை சம்பந்தர் ஒரு பெரிய அடைவாகக் கருதினார்.

அதைப் பலமுறை சுட்டிக்காட்டிப் பேசியுமிருக்கிறார். அம்மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வைத்துக்கொண்டு ஒரு புதிய யாப்பை உருவாக்கலாமென்று அவர் நம்பியதால் ஓர் ஆவிக்குரிய சபை பாஸ்ரரைப் போல அரசியல்தீர்வைக்குறித்து தீர்க்கதரிசனங்களையும் உரைத்திருக்கிறார். ஆனால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மட்டும் ஒரு தீர்வைப் பெற்றுத் தந்துவிடாது என்பதே கடந்த நான்கு ஆண்டுகால அனுபவமாகக் கிடைத்திருக்கிறது. மாறாக ஓர் அரசியல்தீர்வைக் கண்டுபிடிப்பதற்கு ஓர் அரசியல் திடசித்தம் வேண்டும். அது இப்போதுள்ள கூட்டரசாங்கத்திடமுமில்லை. எனவே சம்பந்தரின் பங்கேற்பு அணுகு முறையானது அடிப்படையான மாற்றங்களைத் தரத்தவறியது.

இவ்வாறு தீர்வற்ற ஒரு வெற்றிடத்தில் அபிவிருத்தியை முன்னெடுக்கும் கட்டமைப்புக்களை உருவாக்குவது ஒரு தீர்வுக்கான தமிழ் மக்களின் வேட்கையை தணியச்செய்து விடுமென்று விக்னேஸ்வரன் நம்புகிறார்.

உரிமையில்லாமல் அபிவிருத்தி என்று ஒன்று கிடையாது. அபிவிருத்தி எனப்படுவது சாராம்சத்தில் ஒரு கூட்டுரிமை அக்கூட்டுரிமையை ஏற்றுக்கொண்டு ஒரு தீர்வைத் தருவதற்கு வேண்டிய அரசியல் திடசித்தத்தைக் கொண்டிராத ஓர் அரசாங்கம் எப்படிப்பட்ட அபிவிருத்தியை முன்னெடுக்கும்? அது முழுக்க முழுக்க தேர்தல் நோக்கு நிலையிலிருந்தும் ஜெனீவாவிற்கான வீட்டு வேலையை செய்து முடித்தல் என்ற நோக்கு நிலையிலிருந்தும் முன்னெடுக்கப்படும் ஓர் அபிவிருத்திதான்.

இவ்வபிவிருத்தியில் பங்காளிகளாக மாறும் தமிழ்த் தலைவர்கள், அரசாங்கம் கட்டிக்கொடுத்த பாலங்களையும், கட்டிடங்களையும் திருத்தப்பட்ட வீதிகளையும் காட்டி எதிர்காலத் தேர்தல்களில் வாக்குக் கேட்பார்கள். இது வாக்காளர்களை வேலை வாய்ப்புக்களுக்காகவும் சலுகைகளுக்காகவும் தலைவர்களின் பின் திரியும் மந்த வாக்காளர்களாக மாற்றிவிடும். இது அதன் இறுதியிலும் இறுதியாக தமிழ் மக்களை இலட்சிய நீக்கம் செய்து விடும். அரசியல் நீக்கம் செய்து விடும்.

இப்படிப் பார்த்தால் தீர்விற்கு முதலில் அபிவிருத்தி அல்லது அபிவிருத்தியின் மூலம் தீர்வு என்ற உபாயத்தை விக்னேஸ்வரன் எதிர்ப்பது சரியானதே. ஆனால் இங்கேயுள்ள அடிப்படைப் பிரச்சினை என்னவென்றால் விக்னேஸ்வரனிடம் தனது அரசியல் செயல்வழிக்குரிய பிரயோக வழிவரைபடம் இல்லையென்பதுதான். தமிழ் எதிர்ப்பை தாக்கமுடைய ஒரு புதிய வடிவத்தில் படைப்புத்திறனோடு வெளிப்படுத்தும் எதிர்ப்பு வடிவம் எதுவும் விக்னேஸ்வரனிடமோ அல்லது பேரவையிடமோ இருப்பதாகத் தெரியவில்லை.

விக்னேஸ்வரன் முந்த நாள் நடந்த பேரவைக்கூட்டத்தில் பின்வருமாறு கூறுகிறார்.கட்சி அரசியலை விட்டு எமது தமிழ் மக்கள் பேரவையை ஒரு உண்மையான மக்கள் பேரியக்கமாக மாற்றி உள்நாட்டு வெளிநாட்டு தமிழ் மக்களை ஒன்றிணைத்து அரசாங்கத்துடன் எமக்கேற்ற தீர்வொன்றை முன் வைத்துப் பெற முயற்சிப்பது என்று.அனால் அவரிடம் அதற்குரிய செயல் வடிவம் எதும் உண்டா?

சம்பந்தரைப் போலவே விக்கியும் ஒரு தேர்தல் மைய அரசியல்வாதிதான். தேர்தல் மூலம் மக்கள் அதிகாரத்தைக் கைப்பற்ற விளையும் ஒரு தலைவர்தான். 2009ற்குப் பின்னரான தமிழ் எதிர்ப்பை அவர் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

ஆனால் செயலுக்குப் போகாத பிரகடனங்களோடும், தீர்மானங்களோடும் காணப்படுகிறார். புலிகள் இயக்கத்திற்குப் பின்னரான தமிழ் எதிர்ப்பின் புதிய போராட்ட வடிவமொன்று கண்டுபிடிக்கப்படாத வரையிலும் விக்னேஸ்வரனின் மீது இக்குற்றச்சாட்டு இருக்கும்.

எனினும் ஒரு தேர்தல் மைய அரசியல்வாதி என்ற அடிப்படையில் அவருக்கு இருக்கக்கூடிய வரையறைகளோடும் தமிழ் எதிர்ப்பின் ஒப்பீட்டளவில் பெரிய திரளுக்கு தலைமை தாங்கக் கூடியவராக அவரே காணப்படுகிறார். முல்லைத்தீவில் நடந்த போராட்டத்தை ஒத்த போராட்டங்களிலிருந்து பாடங்களைக்கற்றுக்கொள்ளும் எவரும் இப்படியொரு முடிவிற்கே வரமுடியும்.

குறைந்தபட்சம் தேர்தல் மைய அரசியலிலாவது ஆகக்கூடியபட்சம் பொதுமக்களை அணிதிரட்டக்கூடிய ஒரு பரந்த பொதுத்தளத்திற்கு தலைமை தாங்குவதற்கு விக்னேஸ்வரனைப் போல ஒருவரே தேவை. கட்சிக் குறுக்கங்களுக்கப்பால் எதிரும் புதிருமாக நிற்கும் எல்லாத் தரப்புக்களையும் அரவணைக்கத் தக்க தலைமைகள் தமிழ் மக்களுக்குத் தேவை. 2009 மேக்குப் பின்னரான ஒரு புதிய எதிர்ப்பு வடிவம் கண்டு பிடிக்கப்பட்டிராத ஒரு வெற்றிடத்தில் குறைந்த பட்சம் தேர்தல் மைய அரசியலிலாவது ஒரு பரந்த பொது எதிர்ப்புத் தளத்தை உருவாக்க வேண்டும். ஆகக்குறைந்த பட்சம் அடிப்படை இலட்சியத்தோடு ஒத்துப் போகும் எல்லாத்தரப்புக்களையும் ஒரு பொதுத் தளத்தில் திரட்ட வேண்டும்.

இல்லையென்றால் மேற்கத்தைய நாடுகளில் பயிலப்படுவது போன்ற இருகட்சியோட்டமானது தமிழ் வாக்குகளை சிதறிடித்து விடும். அது யாழ்ப்பாணத்திற்கு அதிகம் சேதாரத்தைத் தராது. ஆனால் வவுனியா முல்லைத்தீவின் எல்லைப்புறங்களிலும் கிழக்கிலும் அது தமிழ் மக்களைப் பலவீனப்படுத்தி விடும். எனவே தமிழ் மக்களுக்கு இப்பொழுது தேவையாக இருப்பது ஒப்பீட்டளவில் ஆகப்பெரிய ஓர் எதிர்ப்பு அரசியல் தளத்திற்கு தலைமை தாங்கவல்ல ஒரு சிறப்பாளுமைதான்.

(Visited 1 times, 1 visits today)