தமது காணிகளை விடுவிக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கேப்பாபுலவு மக்கள், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் தமது போராட்டத்தை தொடரலாமென, முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின்குமார் அனுமதியளித்துள்ளார்.

கேப்பாபுலவு பகுதியில் படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1ஆம் திகதி முதல் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், குறித்த பகுதியிலிருந்து பகுதியளவிலான காணிகள் விடுவிக்கப்பட்ட நிலையில், தமது காணிகளை முழுமையாக விடுவிக்கும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்த அம்மக்கள், போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த சுதந்திர தினத்தை துக்கதினமாக அனுஸ்டித்த மக்கள், விடுவிக்கப்பட்ட பகுதியிலுள்ள ஆலயம் ஒன்றுக்குச் செல்ல முற்பட்டவேளை, அம்மக்களை பொலிஸார் தடுத்தமையால் குழப்ப நிலை தோன்றியிருந்தது.

இதனையடுத்து, குழப்பத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்ட 5 பேருக்கு எதிராக பொலிஸார் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில், குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த வழக்கு மீதான விசாரணைகளையடுத்து, பொதுமக்களின் அமைதிக்கு பங்கம் ஏற்படாத வகையில், கேப்பாபுலவு மக்கள் தமது உரிமைக்காக போராடலாம் என தெரிவித்த நீதவான் போராட்டத்தை தொடர அனுமதியளித்தார்.

(Visited 23 times, 1 visits today)