ரஷிய தலைநகர் மாஸ்கோவின் டோமோடிடோவோ விமான நிலையத்தில் இருந்து ஒர்ஸ்க் நகருக்கு நேற்று முன்தினம் புறப்பட்ட விமானம் ஒன்று, கிளம்பிய சில நிமிடங்களிலேயே மாஸ்கோவுக்கு அருகே உள்ள ராமென்ஸ்கை மாவட்டத்தில் விழுந்து நொறுங்கியது. இந்த கோர விபத்தில் பயணிகள் மற்றும் ஊழியர்கள் என விமானத்தில் இருந்த 71 பேரும் உயிரிழந்தனர்.

இந்த விபத்து மீட்பு பணிகளுக்காக 400-க்கும் மேற்பட்ட ஊழியர்களும், 70 வாகனங்களும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. சம்பவ இடத்தில் கடும் பனிப்பொழிவு நிலவுவதால் மீட்பு பணிகள் மந்தமாகவே நடந்து வருகிறது. விபத்தில் பலியானவர்களின் உடல்கள் அடையாளம் காண முடியாதபடி கருகி உள்ளன. எனவே மரபணு சோதனை மூலமே அடையாளம் காண முடியும் எனவும், இதற்கு 2 அல்லது 3 மாதங்கள் ஆகும் என்றும் ரஷிய போக்குவரத்து மந்திரி மாக்சிம் சோகோலோவ் கூறினார்.

விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டு உள்ளதுடன், விபத்துக்கான காரணம் குறித்த விசாரணையும் தொடங்கி உள்ளது. இதை மேற்கொண்டு வரும் விசாரணைக்குழுவினர், தொழில்நுட்ப கோளாறு, மனித தவறு மற்றும் மோசமான வானிலை போன்றவற்றின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். எனினும் பயங்கரவாத சதிச்செயல் குறித்த பின்னணியில் விசாரணை மேற்கொள்ளப்படுமா? என்ற தகவல் வெளியிடப்படவில்லை.

(Visited 15 times, 1 visits today)