பி.கபில்நாத்

”அமரர் சந்திரசேகரன் திரும்பவும் இ.தொ.காவுடன் கைகோர்த்ததும் என்ன நடந்தது என்பது மலையக மக்கள் முன்னணி உயர் பீட உறுப்பினர்களுக்கு நன்கு தெரியும். தவிரவும் ராதா அத்தகையதொரு தீர்மானத்தை எடுத்தாலும் அது நேரடியாக முதலில் மலையக மக்கள் முன்னணியிலேயே கேள்வியை உருவாக்கும்” எனத் தெரிவித்திருக்கின்றார் தமிழ் முற்போக்கு முன்னணியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ்.

பிரதி அமைச்சர் வீ.ராதாகிருஷ்ணன் தமிழ் முற்போக்குக் கூட்டணியிலிருந்து வெளியேறப்போவதாகவும், கூட்டணி பிளவுபடப்போவதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் குறித்து அவரிடம் கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பாக ஞாயிறு தினக்குரலுக்கு அவர் அளித்துள்ள பேட்டியின் விபரம்:

கேள்வி: தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவரும் கல்வி ராஜாங்க அமைச்சருமான வே.ராதாகிருஸ்ணனுக்கு இடம்பெற்ற பாராட்டு விழாவில் கலந்துகொள்வதில் இருந்து தமிழ் முற்போக்குக் கூட்டணி தவிர்த்துக்கொண்டதும் அதனால் ஏற்பட்ட சலசலப்புகளும் தமிழ் முற்போக்குக் கூட்டணி பிளவுக்கு வித்திடலாம் என ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டு இருக்கிறது. இதற்கான சாத்தியப்பாடுகள் உண்டா?

முதலில் முற்போக்குக் கூட்டணி உருவாக்கப்பட்டது பாராட்டு விழாக்கள் நடாத்துவதற்கோ அதில் பங்குபற்றுவதற்கோ அல்ல என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன். இதுவரை மலையகத்தில் உருவாக்கப்பட்ட அணிகளில் தமிழ் முற்போக்குக் கூட்டணியே உறுதியான அரசியல் இலக்குகளைக் கொண்டது என்பதை மறுப்பதற்கில்லை. கடந்த மூன்றாண்டு கால மலையக அரசியல் செல்நெறியை நடுநிலையில் நின்று ஆராயும் எவரும் இதனைப் புரிந்துகொள்வர்.

தமிழ் முற்போக்குக் கூட்டணியில் இணைந்திருக்கின்ற மூன்று பிரதான கட்சிகளுக்கும் தனித்துவமான வரலாறு உண்டு. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸில் இருந்து பிரிந்துசென்று 1960 களில் உருவான ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் (தற்போதைய ஜனநாயக மக்கள் முன்னணி), 1965 இல் உருவான தொழிலாளர் தேசிய சங்கம் (முன்னணி), 1988 இல் உருவான மலையக மக்கள் (தொழிலாளர்) முன்னணி ஆகியன என்ன நோக்கத்திற்காக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸில் இருந்து பிரிந்து வந்தனவோ அந்த நோக்கங்கள் தீர்க்கமாக ஆராயப்பட்டு அந்த அரசியல் இலக்குகளை அடையும் வகையிலேயே தமிழ் முற்போக்குக் கூட்டணி உருவாக்கப்பட்டது.

இது தேர்தல் கூட்டணியல்ல. இதற்கு முன்னர் இந்த கட்சிகள் தேர்தல் கூட்டணிகளை அமைத்து சேர்ந்தும் பின்னர் விலகியும் செயற்பட்டுள்ளன. ஆனாலும் அரசியல் ரீதியான இலக்குகளை முன்வைத்து மக்களின் பலத்தை ஒன்று சேர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு கூட்டணி தனிநபர் ஒருவரின் பாராட்டு விழா காரணத்தைக் காட்டி பிளவுறும் என எதிர்பார்ப்பது வேடிக்கையானது.

கேள்வி: அப்படியாயினும் ராஜாங்க அமைச்சர் ராதாகிருஸ்ணனுக்கு நடாத்தப்பட்ட பாராட்டு விழாவில் வேலுகுமார் தவிர்ந்த ஏனைய உறுப்பினர்கள் கலந்துகொள்ளாமை, குறிப்பாக நீங்கள் இறுதி நேரத்தில் அதில் கலந்துகொள்ளாமை குறித்தும் அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதேஇதில் அரசியல் இல்லையா?

உண்மைதான். அந்த விழா அமைப்பு ரீதியாக ஒழுங்கமைப்பு செய்யப்பட்டதாக நான் நினைக்கவில்லை. எனக்கு அது பற்றிய விபரமும் தெரியாது. எனக்கு எவ்வித அழைப்பும் விடுக்கப்படவில்லை. அதற்காக நான் வருத்தப்படவும் இல்லை. அத்தகைய ஒரு விழா ஏற்பாடு செய்த காலத்தில் நான் வெளிநாட்டில் இருந்தேன். எனவே ஏற்பாட்டாளர்கள் என்னை அணுக முடியாது இருந்திருக்கலாம். அதேநேரம் நான் கல்வி ராஜாங்க அமைச்சர் ராதாகிருஸ்ணன் அவர்களைப் பாராட்டுவதில் தயக்கம் காட்டுபவனும் அல்ல. தனிப்பட்ட முறையில் அவர் எனக்கு மிகவும் நெருக்கமானவர்.

அவர் இ.தொ.கா வில் இருந்த காலத்தில் கூட நான் அவருடன் நெருக்கமாக பழகியுள்ளவன். இப்போதும் அந்த உறவு அப்படியே தொடர்கிறது. ஆனால், அவரது பாராட்டு விழாவுக்கு பிரதம அதிதியாக அழைக்கப்பட்டிருந்த எமது கூட்டணியின் பிரதித் தலைவரும் எமது கட்சியின் தலைவருமான பழனி திகாம்பரம் கலந்துகொள்ள முடியாத நிலையில் அவரை பிரதிநிதித்துவம் செய்து கட்சியின் செயலாளர் என்ற வகையில் என்னைக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டதற்கு இணங்க நான் சென்றேன்.

இறுதி நேரத்தில் எமது கட்சித் தலைமை எடுத்த முடிவின் காரணமாக நான் அதில் கலந்துகொள்ளவில்லை. நான் மட்டுமல்ல மலையக மக்கள் முன்னணியின் அரசியல்துறை இணைத் தலைவர் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமாரும் தேசிய அமைப்பாளர் மத்திய மாகாகண சபை உறுப்பினர் அமைச்சர் ராதாகிருஸ்ணனின் புதல்வர் ராஜாராமும் கூட குறித்த விழாவில் கலந்துகொள்ளவில்லை என அறிகிறோம். எனவே நாங்கள் கலந்துகொள்ளாததது கூட்டணியில் பிளவு என்பது வேடிக்கையானது.

எம்மைப் பொறுத்தவரைக்கும் நாம் கலந்துகொள்ளாததது எந்த விதத்திலும் தனிப்பட்ட ராதாகிருஸ்ணன் மீதான எதிர்ப்புணர்வல்ல. அந்த விழா ஒழுங்கமைப்பில் ஏற்பட்ட குளறுபடிகளே காரணம். அது அரசியல் காரணம் என்பதை மறுப்பதற்கில்லை.

கேள்வி: அது என்ன அரசியல் காரணம்?

அரசாங்க பொதுமேடைகள் தவிர்ந்த ஏனைய அரசியல் மேடைகளில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் உடன் ஒன்றாக அமர்வதில்லை என்பது தொழிலாளர் தேசிய சங்கம் , தொழிலாளர் தேசிய முன்னணியின் அரசியல் நிலைப்பாடு. அந்த நிலைப்பாடு முரண்படும் விதத்தில் குறித்த நிகழ்ச்சி அமைந்திருந்ததன் காரணமாக இறுதி நேரத்தில் கட்சியாக தொழிலாளர் தேசிய முன்னணி அந்த விழாவினை தவிர்க்க முடிவெடுத்தது. எமது கட்சியின் தலைவர் திகாம்பரத்தை பிரதம அதிதியாக அழைத்த அதே விழாவில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்களும் கலந்துகொள்வது, கருத்துக் கூறுவது எம்மிடையே அரசியல் முறுகலை ஏற்படுத்தக் கூடியது என்கின்றதன் அடிப்படையில்
இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

கேள்வி: இந்தளவு தூரத்திற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் உடன் முரண்பட காரணம் என்ன?

இதனை மேலே சொல்லி இருக்கிறேன். எமது கட்சிகள் ஐம்பது அறுபது வருடங்களுக்கு முன்னரே பல்வேறு அரசியல் காரணங்களின் அடிப்படையில் எடுத்த தீர்மானங்கள் அவை. அதற்கு பின்னர் பல சந்தர்ப்பங்களில் அவர்களுடன் கூட்டணி அமைத்தும் அதில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் இத்தகைய தீர்க்கமான தீர்மானத்தை எடுக்கச் செய்துள்ளன.

கேள்வி: ராதாகிருஸ்ணன் இ.தொ.காவில் இருந்து வந்தவர்தானே?

நிச்சயமாக. மலையக மக்கள் முன்னணி ஸ்தாபகத் தலைவரும் அமரர் பெ.சந்திரசேகரன் கூட அப்படித்தான். அவரது எழுச்சி இ.தொ.காவில் இருந்து வெளியேறி வந்ததனால் ஏற்பட்டது. அதேபோல வீழ்ச்சி இ.தொ.கா வுடன் மல்லியப்புசந்தி சத்தியாக்கிரக போராட்டத்தில் கைகோர்த்ததனால் ஏற்பட்டது என்கின்ற உண்மையை பலரும் அறிவார்கள். அந்த தவறினை நாங்கள் மீண்டும் செய்ய தயார் இல்லை.

கேள்வி: கிழக்கில் தமிழ் கட்சிகள் எல்லாம் ஒன்றாக கூடி கதைக்கின்றனவே . மலையகத்தில் இது ஏன் சாத்தியமில்லை?

கூடி கதைப்பதில் தவறில்லை. கூடி கவிழ்ப்பதில்தான் சிக்கல் இருக்கிறது. அத்தகயை கவிழ்ப்புகளை இந்திய வம்சவாளி மக்களின் பேரணியின்போதும், மல்லியப்புசந்தி சத்தியாக்கிரக போராட்டத்தின்போதும் கடந்த சப்ரகமுவ மாகாணசபைத் தேர்தலின் போதும் நாம் கண்டிருக்கிறோம். அந்த அனுபவப்பாடங்களே இத்தகைய முடிவினை எடுக்கக் காரணம்.

கேள்வி: தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் தானும் இந்த கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட முடியாதா?

சம்பள விடயத்தில் நாங்கள் வேறுபட்டு நிற்கவில்லையே. எல்லோரும் நியாயமான சம்பள உயர்வுக்காகத்தானே குரல் கொடுக்கின்றோம். ஓரிரு தொழிற்சங்கங்கள் கம்பனிகளுடன் ரகசியமாக பேச்சுவார்த்தை நடாத்தும். என்ன பேசினார்கள் என்று சொல்ல மாட்டார்கள். ஆனால், தோல்வி என்பார்கள். முதலில் அவர்கள் என்ன கோரிக்கை வைத்தார்கள் என்பதையும் அதில் எதனை கம்பனிகள் மறுத்தார்கள் என்பதையும் தெளிவாக எழுத்து மூலமாகச் சொல்லட்டும் பார்க்கலாம். அவர்கள் தோல்வி அடைகிற பட்சத்தில் ஏனைய அமைப்புகளை அழைக்கவும் பின்னர் கைகழுவி விடவும் எடுக்கும் பிரயத்தனங்கள் மக்கள் நலன் சார்ந்தது அல்ல.

எமது தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிலைப்பாடு முதலில் கூட்டு ஒப்பந்த செயன்முறையில் இருந்து தாங்கள் எழுத்து மூலமாக அறிவித்து விலகிக் கொண்டு புதிய முறை ஒன்றைப் பற்றி பேசுவதற்கு எல்லோரும் ஒன்று கூடிப் பேசுவோம் என அழைப்பு விடுத்தால் அதனை பரிசீலிக்கத்தயார். 25 வருடகாலமாக ஒவ்வொரு முறையும் பேச்சுவார்த்தை தோல்வி என அறிவிப்பதும் பின்னர் இரண்டொரு வாரங்களில் வெற்றி என பட்டாசு கொழுத்தி கொண்டாடுவதுமான வேடிக்கைக்காக நாம் கைகோர்க்க முடியாது. நாங்கள் எந்த விதத்திலும் நியாயமான சம்பளவுயர்வுக்கு குரல் கொடுப்பவர்களே. இவர்களைக் காட்டிலும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் பிரேரணை மூலமாகவும் கோரிக்கைகள் மூலமாகவும் ஜனாதிபதியின் தலையீட்டைக் கோரியும் குரல் கொடுப்பவர்கள் நாங்கள் என்பதை மறந்துவிடக்கூடாது.

அப்படியாயின் ராதா வெளியேறினால் கூட்டணி பிளவுறாது என்கிறீர்களா?

முதலில் அவர் வெளியேறும் செய்தி வதந்தியாக வருவது இது முதல் தடவையல்ல என்பதை வலியுறுத்தி கூற விரும்புகிறேன். கடந்த இரண்டாண்டு காலமாகவே காலத்திற்குக் காலம் சம்பவத்திற்குச் சம்பவம் இப்படியான கதைகள் வந்துகொண்டே இருக்கின்றன. அவரும் இ.தொ.காவின் பாசறையில் இருந்து வந்தவர் என்றவகையில் இ.தொ.கா பாசத்தை அவ்வப்போது காட்டி வந்துள்ளார் என்பதையும் மறுப்பதற்கில்லை. அதற்காக அவர் அங்கு போய் சேர்ந்துவிடுவார் என்பது அர்த்தமல்ல. அவருக்கு அங்குள்ள நிலைமைகள் நன்கு தெரியும்.

அமரர் சந்திரசேகரன் திரும்பவும் இ.தொ.காவுடன் கைகோர்த்ததும் என்ன நடந்தது என்பது மலையக மக்கள் முன்னணி உயர் பீட உறுப்பினர்களுக்கு நன்கு தெரியும். தவிரவும் ராதா அத்தகையதொரு தீர்மானத்தை எடுத்தாலும் அது நேரடியாக முதலில் மலையக மக்கள் முன்னணியிலேயே கேள்வியை உருவாக்கும். அதற்கு பின்னரே தமிழ் முற்போக்குக் கூட்டணியுடன் தொடர்புபடும். தமிழ் முற்போக்குக் கூட்டணியில் மலையக மக்கள் முன்னணி அங்கத்துவக் கட்சி என்கின்ற அடிப்படையில் அந்த கட்சியே அது தொடர்பான தீர்மானத்தை எடுக்கும்.

‘ராதாகிருஸ்ணன் விலகல். கூட்டணியில் பிளவு’ எனும் செய்தியை எழுத, கேட்க ஆசைப்படும் சிலரின் ஆவல் அது. அப்படி ஒன்று நடப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதே எனது நிலைப்பாடு. மலையக மக்கள் முன்னணி ஒரு அரசியல் கட்சியாகவும் அதன் தலைவர் ராதாகிருஸ்ணன் தனது அனுபவங்களின் ஊடாகவும் எத்தகைய தீர்மானங்களை எடுப்பார்கள் என்பது தொடர்பில் எனக்கு ஒரு கணிப்பு உண்டு. அவர்கள் கடந்த கால அனுபவங்களை இலகுவாக மறக்க மாட்டார்கள் என எண்ணுகிறேன்.

(Visited 21 times, 1 visits today)