தேங்காய் எண்ணெய் உடலுக்கு நல்லது என்று பல ஆய்வுகள் தெரிவித்துள்ள நிலையில், தேங்காய் எண்ணெய் முழுக்க முழுக்க விஷம் போன்றது என்று ஹார்வர்டு பேராசிரியர் ஒருவர் தெரிவித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பான வீடியோ யூடியூபில் வெளியாகி பல லட்சம் பேர் பார்த்துள்ளனர். கடந்த 2011ஆம் ஆண்டுவாக்கில் தேங்காய் எண்ணெய் உடம்புக்கு நல்லது என்ற ஆய்வின் அடிப்படையில் மேற்கத்திய நாடுகளில் பிரபலமானது. ஆனால், அமெரிக்காவில் மட்டும் கொழுப்பு நிறைந்த எண்ணெய் என்றே பார்க்கப்படுகிறது.

ஹார்வர்டு பல்கலையில் பேராசிரியராக இருக்கும் கரின் மிச்செல் சமீபத்தில் ஜெர்மன் நாட்டில் வீடியோ உரையாடல் ஒன்றை நிகழ்த்தி இருந்தார். அதில், ”தேங்காய் எண்ணெய் குறித்து உங்களுடன் ஒன்று பகிர்ந்து கொள்ள உள்ளேன். இது மிகவும் மோசமான உணவு வகைகளில் ஒன்று. இது முழுக்க முழுக்க விஷம் நிறைந்தது” என்று தெரிவித்துள்ளார். ஒரு முறை அல்ல மூன்று முறை அவரது கருத்தை அழுத்தம் திருத்தமாக தெரிவித்துள்ளார். இவர் கூறிய இந்தக் கருத்துக்களை சயின்ஸ் அலர்ட் டாட் காம் வெளியிட்டுள்ளது.

தேங்காய் எண்ணெய் பொதுவாக அதிகளவில் தென்னிந்தியர்களால் பயன்படுத்தப்படுகிறது. அதுவும் கேரளாவில் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். இதில் அதிகளவில் கொழுப்பு இருக்கிறது என்பது கரினின் கருத்தாக உள்ளது. இதை அதிகமாக எடுத்துக் கொண்டால், இருதய குறைபாடு மற்றும் கொழுப்பு அதிகரிப்பு போன்ற சிக்கல்களுக்கு இழுத்து செல்லும் என்று கரின் தெரிவித்துள்ளார்.

ஆனால் அமெரிக்காவின் இருதய அசோசியேஷன் தன்னுடைய ஆய்வில், தேங்காய் எண்ணெயில் இருக்கும் கொழுப்பு 80 சதவீதம் கரையக் கூடியது என்று தெரிவித்துள்ளது.

”உணவில் அதிகளவில் கரையக் கூடிய கொழுப்பு இருப்பதும் தவறானது. இது கெட்ட கொழுப்பு என்று கூறப்படும் எல்டிஎல் கொழுப்பை அதிகரிக்கும். இது இருதய நோய்க்கு இட்டுச் செல்லும்” என்று ஹார்வர்டு ஹெல்த் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேங்காய் எண்ணெய் மட்டும் அல்ல, நெய்யில் அதிகளவில் கொழுப்பு இருக்கிறது என்ற பொதுவான கருத்து நிலவி வருகிறது. ஆனால், இதுகுறித்து கடந்த ஜனவரியில் லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் ஒரு செய்தி வெளியிட்டு இருந்தது. அந்த செய்தியில், ”வெண்ணெயுடன் ஒப்பிடுகையில் நெய்யில் சர்க்கரை இல்லை. கொழுப்பும் மிகவும் குறைவாக இருக்கிறது. இதில் கொழுப்பு இல்லாத வைட்டமின் ஏ, டி, இ, கே ஆகிய சத்துக்கள் உள்ளன. இவையெல்லாம் நோய் எதிப்பு சக்தி கொடுக்கும் வைட்டமின்கள்” என்று தெரிவித்து இருந்தது.

(Visited 155 times, 1 visits today)