பாகிஸ்தானின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள இம்ரான் கான், பிரதமருக்கு வழங்கப்படும் சலுகைகள் எதுவுமே வேண்டாம் என மறுத்து எளிமையாக வாழ விருப்பம் தெரிவித்துள்ளார்.

மொத்தம் 272 தொகுதிகள் கொண்ட பாகிஸ்தான் மக்களவைக்கு கடந்த மாதம் 25-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதன் முடிவுகளில் இம்ரான்கானின் தெஹ்ரிக் – இ – இன்சாப் கட்சி 115 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

பாகிஸ்தானில் ஆட்சி அமைக்க பெரும்பான்மை பலத்திற்கு 137 இடங்கள் தேவை என்ற நிலையில், அங்கு எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத சூழல் உருவானது.

இம்ரான் கானின் பிடிஐ கட்சி வெற்றி பெற்ற இடங்களுக்கு ஒதுக்கப்பட்ட நியமன உறுப்பினர்கள் எண்ணிக்கை ஆகியவற்றைச் சேர்க்கும் போது அந்தக் கட்சி ஆட்சி அமைக்கும் தகுதி பெற்றது. இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் 22-வது பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றார்

இந்நிலையில், பிரதமருக்காக ஒதுக்கப்படும் இல்லத்தில் தங்க இம்ரான் கான் மறுப்பு தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இல்லத்தில் பணியாற்ற 524 ஊழியர்கள் உள்ளனர். 80 கார்கள் உள்ளன.

அதில், 33 கார்கள் குண்டு துளைக்காதவை. ஆனால், இவை எதுவுமே வேண்டாம் என மறுத்துள்ள இம்ரான் கான், தன்னுடைய பனிகலா இல்லத்தில் தங்கவே விருப்பம் தெரிவித்துள்ளார்.

ஆனால், பாதுகாப்பு காரணங்களை அதிகாரிகள் சுட்டிக் காட்டியதால், ராணுவ செயலாளரின் 3 படுக்கையறைகளைக் கொண்ட வீட்டில் வசிக்க அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.

மேலும், தனக்கு உதவுவதற்கு இரண்டு ஊழியர்களும், இரண்டு கார்களும் போதும்
எனவும் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

(Visited 85 times, 1 visits today)