இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்ய முடியாது என்று மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

மேலும், இந்தக் கொலை வழக்கை விசாரித்த சிபீஐ, குற்றவாளிகளை விடுதலை செய்ய சம்மதம் தெரிவிக்கவில்லை என்றும் அரசு, நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் குறித்து, தமிழக அரசுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 17 ஆம் திகதியே தெரிவிக்கப்பட்டு விட்டதாக நீதிமன்றத்தில் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் ராஜிவ் காந்தி கொலை குற்றவாளிகளை விடுவிக்க கோரி மனு செய்திருந்தது. இது குறித்து நீதிமன்றம், மத்திய அரசிடம் கருத்து கேட்டிருந்தது.

கடந்த 2015 ஆம் ஆண்டு இது குறித்து கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், ´மத்திய அரசின் கருத்தைக் கேட்காமல் குற்றவாளிகளை விடுதலை செய்ய முடியாது´ என்று குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(Visited 37 times, 1 visits today)