இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தற்போது டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடி வருகிறார்கள். கடந்த ஆண்டு ஜூன் மாதத்திற்கு பிறகு ஒரு நாள் போட்டி அணியில் இருந்து முழுமையாக ஒதுக்கப்பட்டு விட்டனர்.

ஒரு நாள் கிரிக்கெட்டில் யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோர் சுழலில் மிரட்டி வருவதால் இப்போதைக்கு அஸ்வின்ஜடேஜாவுக்கு குறுகிய வடிவிலான போட்டியில் இடம் கிடைக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. ‘சாஹலும், குல்தீப் யாதவும் 2019ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவின் துருப்பு சீட்டாக இருப்பார்கள்’ என்று இந்திய கேப்டன் கோலியும் கூறி விட்டார்.

இந்த நிலையில் அஸ்வின், ஜடேஜாவுக்கு ஒரு நாள் போட்டி கதவு இன்னும் அடைக்கப்படவில்லை என்று இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘சாஹலும், குல்தீப் யாதவும் ஒரு நாள் போட்டியில் அற்புதமாக பந்து வீசி வருகிறார்கள். அவர்களிடம் அபார திறமை இருக்கிறது. தைரியமாக மேல்வாக்கில் பந்தை தூக்கி வீசுகிறார்கள். உலகின் சிறந்த பேட்ஸ்மேன்களை திணறடிக்கிறார்கள். ஆனாலும் உலக கோப்பை போட்டியில் இவர்களுக்கு இடம் உறுதி என்று இப்போதே சொல்லமாட்டேன்.

எங்களிடம் சிறந்த பவுலர்கள் பலர் உள்ளனர். அவர்களுக்கு சுழற்சி அடிப்படையில் வாய்ப்பு அளிப்பது அவசியமாகும். அப்போது தான் பவுலர்கள் ஒவ்வொரு தொடருக்கும் புத்துணர்ச்சியுடன் இருப்பார்கள். உலக கோப்பை போட்டிக்கான வாய்ப்பில் அஸ்வின், ஜடேஜா இல்லை என்று சொல்ல முடியாது. உலக கோப்பை போட்டிக்கான அணியில் இடம் பிடிக்க அவர்களுக்கு இன்னும் வாய்ப்பு உள்ளது’ என்றார்.

(Visited 104 times, 1 visits today)