ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்கி அரசியலில் ஈடுபட தயாராகி வருகிறார். இந்த நிலையில் மீண்டும் அவர் நடிப்பாரா? அல்லது சினிமாவை விட்டு விலகி விடுவாரா? என்ற கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. ஏற்கனவே ‘2.0,’ ‘காலா’ ஆகிய இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ளார். அந்த படங்களுக்கு ‘ரீரிக்கார்டிங்,’ ‘டப்பிங்’ உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகள் நடந்து வருகின்றன.

2.0 ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு கிராபிக்ஸ் பணிகள் முடியாததால் தள்ளிப்போகலாம் என்று பேசப்படுகிறது. காலா படமும் திரைக்கு வர தயாராக உள்ளது. தற்போது அரசியல் பணிகளில் ரஜினிகாந்த் தீவிரமாகி இருக்கிறார். ரஜினி மக்கள் மன்றத்துக்கு உறுப்பினர்கள் சேர்ப்பு, நிர்வாகிகள் நியமனம் ஆகிய பணிகளிலும் ஈடுபட்டுள்ளார். டைரக்டர்களிடம் கதைகள் கேட்கவில்லை.

இதனால் அவர் மீண்டும் நடிக்க மாட்டார் என்று பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது டைரக்டர் அட்லியை ரஜினிகாந்த் சந்தித்து பேசியதாகவும், அவர் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிப்பது குறித்து அவர் யோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. விஜய் நடித்த தெறி, மெர்சல் மற்றும் ராஜாராணி படங்களை அட்லி இயக்கி உள்ளார்.

ஏற்கனவே ரசிகர்களை சந்தித்தபோது உள்ளாட்சி, பாராளுமன்ற தேர்தல்களில் நிற்க மாட்டோம் என்றும், வருகிற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என்றும் ரஜினி அறிவித்து இருந்தார். சட்டமன்ற தேர்தலுக்கு அதிக காலம் இருப்பதால் அதற்கு முன்பாக அரசியல் படமொன்றில் நடிக்கலாமா? என்று அவர் ஆலோசிப்பதாக கூறப்படுகிறது.

(Visited 84 times, 1 visits today)