இலங்கை வீரர் தனஞ்ஜெய டி சில்வா முதல் முறையாக %வது துடுப்பாட்ட வரிசையில் களமிறங்கியது குறித்து தெரிவித்துள்ளார்.
தென் ஆபிரிக்காவுக்கு எதிரான 3 ஆவது ஒருநாள் போட்டியில், 78 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த இலங்கை அணி தொடரையும் இழந்தது. இந்தப் போட்டியில் தென் ஆபிரிக்கா 7 விக்கெட் இழப்புக்கு 363 ஓட்டங்கள் குவித்தது.

பின்னர் ஆடிய இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை ஆரம்பத்தில் இழந்தது. எனினும், அந்த அணியில் தனஞ்ஜெய டி சில்வா அதிகபட்சமாக 84 ஓட்டங்கள் எடுத்தார். இது இலங்கையின் தோல்வி வித்தியாசத்தை குறைக்க உதவியது.

வழக்கமாக டி சில்வா 6வது வரிசையில் தான் களமிறங்குவார். ஆனால், கடந்த போட்டியில் அவர் முதல் முறையாக 7 ஆவது வரிசையில் களமிறங்கினார். எனினும், அவர் அதிரடியாக 66 பந்துகளில் 8 பவுண்டரிகள் 3 சிக்ஸர்களுடன் 84 ஓட்டங்கள் குவித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘நான் 7 ஆவது வரிசையில் களமிறங்க வந்தபோது, எனது கவனம் தென் ஆபிரிக்கா நிர்ணயித்த இலக்கை எப்படி நெருங்குவது என்பது குறித்து தான் இருந்தது. நான் எப்போதும் 6 ஆவது வரிசையில் தான் களமிறங்குவேன்.

ஆனால், அணிக்கு அப்போது இடக்கை வீரர் வலக்கை வீரர் ஆகியோரது இணை முன்னதாகவே தேவைப்பட்டது. அதன் காரணமாக நான் 7 ஆவது வரிசையில் களமிறங்கினேன். நான் சதத்தை தவறவிட்டதை நினைத்து வருத்தப்பட்டேன்.

ஏனெனில், கீழ் நிலையில் இறங்கி விளையாடும் போது சதம் அடிக்கும் வாய்ப்புகள் அதிகமாக கிடைக்காது. ஆனால், அந்த சமயத்தில் நான் ஒரு ஓவருக்கு 15 ஓட்டங்கள் எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். அதுவும் ரபாடா மற்றும் நிகிடி ஆகியோரது தாக்குதல் பந்துவீச்சு வருவதற்கு முன்பு, விரைவாக ஓட்டங்களை குவிக்க வேண்டும் என்று நினைத்தேன்.

நான் ஒருநாள் போட்டிகளில் 6 ஆவது அல்லது 7 ஆவது வரிசையில் களமிறங்க வேண்டும் என்று கூறியிருந்தேன். எனவே அதற்கான பயிற்சியை எடுத்து விளையாட வேண்டும். கிரிக்கெட்டில் எதுவும் தவறில்லை. இந்த மைதானம் 350 ஓட்டங்களுக்கு மேல் குவிக்கக் கூடியதாகும்.

ஆனால், நாங்கள் விக்கெட்டுகளை விரைவாக இழந்ததால் எங்களுக்கு அது கடினமான இலக்காக அமைந்துவிட்டது. ஒருவேளை விக்கெட்டுகள் கையில் இருந்திருந்தால் நாங்கள் இந்த ஓட்டங்களை விரட்டிப் பிடித்திருப்போம்‘ என தெரிவித்துள்ளார்.

(Visited 38 times, 1 visits today)