பொல்கஹவெல, பனலிய பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்து தொடர்பில் விசாரணை செய்ய விஷேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

ரயில் விபத்து தொடர்பான ஆரம்பக்கட்ட விசாரணைகளுக்காகவே இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக ரயில் பொது முகாமையாளர் விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று திங்கள் மாலை கண்டி நோக்கி பயணித்த ரயில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தப் போது, பின்னால் வந்த மற்றுமொரு ரயில் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது. இந்த விபத்தில் 32 ​பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பயணித்தவர்களுக்கு பலத்த காயங்கள் எதுவும் இல்லை எனவும் சிலர் சிகிச்சைகளை பெற்று வைத்தியசாலையை விட்டு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக, மலையகத்துக்கான ரயில்  போக்குவரத்தில் தடைகள் ஏற்பட்டிருந்ததுடன், நேற்று இரவு பதுளை தபால் ரயில் சேவையும் இரத்து செய்யப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் தற்போது மலையகத்திற்கான ஒருவழி ரயில் பாதையில் மாத்திரம் புகையிரத போக்குவரத்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

(Visited 12 times, 1 visits today)