இலங்கையிலுள்ள பெண் தொழில் முயற்சியாளர்களுக்கு நிதியியல் முன் முயற்சிகளை வழங்கும் வகையில் அரசாங்கமானது ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து (ADB) 9.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனுதவியாக பெற்றுள்ளது.

நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளரான ஆர்.எச்.எஸ். சமரதுங்க, ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பணிப்பாள ரான ஸ்ரீ விடோவதா ஆகியோரினால் இக்கடனுதவி தொடர்பான உடன்படிக்கையானது அண்மையில் நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சில் கைச்சாத்திடப்பட்டது.

பெண் தொழில்முயற்சியாளர்களுக்கு கடன்களை வழங்கல், அவர்களது செயற்பாடுகளை ஊக்குவித்தல் என்பவற்றை முதல்நிலைப்படுத்தி இக் கடனுதவியானது வழங்கப்படுகின்றது. மேலும் இத்திட்டத்தினூடாக பெண் தொழில்முயற்சியாளர்களுக்கு தொழில் நுட்ப உதவிகளும் வழங்கப்படவுள்ளன.

மேலும் ஊவா, சப்ரகமுவ, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை சேர்ந்த பெண் தொழில்முயற்சியாளர்களுக்கு வர்த்தக திறன் பயிற்சிகள் வழங்கப் படவுள்ளதுடன் இவர்களுக்கு சலுகை அடிப்படையில் கடன்களும் பெற்றுக் கொடுக்கப்படவுள்ளன.

அரசாங்கமானது சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளை ஊக்குவிப்பதனூடாக ஏற்றுமதியை அதிகரித்தல், தொழில்வாய்ப்புகளை உருவாக்குதல், மூலதன வருமானத்தை அதிகரித்தல் போன்றவைகளை அபிவிருத்திச் செய் யவுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு அரசாங்கமானது ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு நிதி வழங்கும் வகையில் பெற்றுக் கொண்டுள்ளதுடன் அதனை வெற்றிகரமான முறையில் விநியோகித்துள்ளது.

இதேவேளை நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சானது இலங்கையின்
சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

(Visited 106 times, 1 visits today)