உலகின் தலைசிறந்த ஆயிரம் வங்கிகள் வரிசையில் தொடர்ந்து எட்டாவது வருடமாகவும் கொமர்ஷல் வங்கி இடம் பிடித்துள்ளது. இந்த கீர்த்திமிக்க இடத்தை தொடர்ந்து எட்டு வருடங்களாக தக்கவைத்துள்ள இலங்கையின் ஒரேயொரு வங்கி என்ற பெருமையையும் அது பெற்றுள்ளது.

முதல் வரிசை மூலதனம், சொத்துகள், மூலதன சொத்து விகிதாசாரம், வரிக்கு முந்திய இலாபம், மூலதன மீள் வருமானம், சொத்துகள் மீதான மீள் வருமானம், BIS (Basel) மூலதன விகிதாசாரம், மொத்த கடன்களுக்கான NPL, சொத்து விகிதாசாரத்துக்கான கடன்கள், மொத்த சொத்துகளுக்கான விதாசார ஆபத்து எடை சொத்துகள் (RWA) செலவு வருமான விகிதாசாரம் என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டே ஐக்கிய இராச்சியத்தை தளமாகக் கொண்டு செயற்படும் ‘த பேங்கர்’ சஞ்சிகை இந்த தர வரிசையை பட்டியல் இடுகின்றது.

இந்த தர வரிசையில் கொமர்ஷல் வங்கி நீண்ட காலமாக இருந்து வருகின்றமை பற்றி கருத்து தெரிவித்த வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஜெகன் துரைரட்ணம் ‘ஆயிரம் முன்னணி வங்கிகள் வரிசையில் இடம் பிடிப்பதென்பது கிட்டத்தட்ட உலகில் உள்ள ஆறு வீதமான சிறந்த வங்கிகளின் இடத்தில் இருப்பதாகும்.

இது மிகவும் கௌரவத்துக்கு உரியதாகும். இந்த சிறப்புக்குழுவில் தொடர்ந்து எட்டு ஆண்டுகளாக இருப்பதென்பது நாம் தொடர்ந்து எமது வளர்ச்சி வேகத்தை தக்கவைத்து வருகின்றோம் அல்லது நாம் எதிர்கொள்ளும் சவால்களையும் மீறி ஏனைய சர்வதேச வங்கிகளின் வளர்ச்சி வேகத்தைத் தாண்டிச் செல்கின்றோம் என்பதையே குறிக்கின்றது’ என்று கூறினார்.

2018 இன் உலகளாவிய சிறந்த வங்கிகள் வரிசையில் முதல் நான்கு இடங்களையும் சீனாவின் கொமர்ஷல் வங்கி, சீன நிர்மாண வங்கி, சீனா வங்கி, சீன விவசாய வங்கி என்பன பெற்றுள்ளன.

2017 நிதி ஆண்டு முடிவில் கொமர்ஷல் வங்கி மொத்த சொத்துக்களாக 1.143 டிரில்லியன், மொத்த வருமானமாக 115.6 பில்லியன், தேறிய வருமானமாக 16.5 பில்லியன், வைப்புத் தளம் 850.1 பில்லியன், மொத்தக் கடன்களும் பெறுகைகளும் 754.7 பில்லியன் என தனது நிதிப் பதிவுகளைக் கொண்டுள்ளது.

மூலதன சம விகிதாசாரத்தை பொறுத்தமட்டில் வங்கியின் மொத்த வரிசை 1 மூலதன விகிதாசாரம் (மூலதனச் செறிவுகளுடன்) 2017 டிசம்பர் 31 இல் 12.11% மாக உள்ளது. இது Basel III இன் கீழ் வேண்டப்படும் 7.75% த்தை விட கணிசமான அதிகளவாகும். 2017 முடிவில் மொத்த மூலதன விகிதாசாரம் 15.75% மாக உள்ளது. இதுவும் Basel III இன் கீழ் வேண்டப்படும் 11.75% த்தை விட அதிகமானதாகும்.

(Visited 90 times, 1 visits today)