போதைப் பொருள் கடத்தல், பெண்கள் மீதான துன்புறுத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த முடியாமல் உள்ளது என சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரிடம் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எடுத்துரைத்தார்.

பொலிஸாருக்கும் குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கும் இடையே நெருங்கிய தொடர்புள்ளது என தன்னால் தெரிவிக்கப்பட்டதாகவும், அதனை பொலிஸ் மா அதிபர் ஏற்றுக்கொண்டதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்துக்கு 2 நாள் பயணமாக வருகை தந்த சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, பிரதி அமைச்சர் நளின் பண்டார மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்து பேச்சு நடத்தினர்.

இந்தச் சந்திப்பு கைதடியிலுள்ள வடக்கு மாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்றது. சந்திப்பின் நிறைவில் செய்தியாளர்களிடம் முதலமைச்சர் கருத்துத் தெரிவித்தார்.

குற்றச் செயல்கள் அதிகரிக்கின்றன. அவற்றை கட்டுப்படுத்த பொலிஸ் ஆளணிப் பற்றாக்குறை உள்ளது. தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படவேண்டும்.

பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் பற்றாக்குறை உள்ளது என்று பொலிஸ் மா அதிபரிடம் எடுத்துக் கூறியதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

(Visited 52 times, 1 visits today)