இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவுச் செயலாளர் விஜய் கோகெல் ,தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா சம்பந்தன் தலைமையிலான குழுவினரை நேற்று கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினர்.

இச்சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட இரா சம்பந்தன்,

புதிய அரசியல் யாப்பானது மாகாணசபை தேர்தல்களுக்கு முன்பதாக நிறைவேற்றப்படவேண்டும் என்பதனை வலியுறுத்திய அதேவேளை பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றமையினால் இவ்வருட இறுதிக்குள் புதிய அரசியல் யாப்பு நிறைவேற்றப்படுவது மிக அவசியமானதாகும் என தெரிவித்தார்.

மேலும் இந்த சந்தர்ப்பத்தினை உதாசீனம் செய்ய முடியாது என தெரிவித்த இரா சம்பந்தன் அவர்கள்இ பிரிக்கபடாதஇ ஒன்றிணைந்த பிரிக்க முடியாத இலங்கை நாட்டிற்குள்ளேயே நாம் தீர்வொன்றினை நாம் எதிர்பார்க்கிறோம் எனவும் நீண்டகால தேசிய பிரச்சினைக்கு புதிய அரசியல் யாப்பினுடாகவே ஒரு தீர்வினை காண முடியும் என்பதனையும் வலியுறுத்தினார்.

புதிய அரசியல் யாப்பானது மக்கள் தமது நாளாந்த விடயங்கள் குறித்து தாமே நிர்ணயித்து முடிவெடுக்கும் வகையில் அமைவதன் அவசியத்தினையும் இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் உள்ளடங்கிய விடயங்கள் புதிய அரசியல் யாப்பில் இடம்பெறவேண்டியதன் அவசியத்தினையும் வலியுறுத்தினார் இரா சம்பந்தன் அவர்கள் வலியுறுத்தினார்

மேலும் இலங்கையில் விசேடமாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் இந்திய முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதனை இந்திய ஊக்குவிக்கவேண்டும் என வெளியுறவு செயலரை கேட்டுக்கொண்ட இரா சம்பந்தன் அவர்கள் வெளிநாட்டு முதலீடுகள் எமது மக்களின் பொருளாதார நிலைமையினை மேம்படுத்தும் என்பதனையும் விசேடமாக இளைஞர்கள் மத்தியில் பாரிய வேலைவாய்ப்புக்களை உருவாக்கும் எனவும் தெரிவித்தார்.

இந்தியாவில் இருந்து மீள வரும் அகதிகள் தொடர்பில் கருத்து வெளியிட்ட இந்திய வெளியுறவு செயலாளர் இந்திய அரசாங்கமானது இந்த அகதிகள் தொடர்பில் தங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இரா. சம்பந்தன் அவர்களோடு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரும் இந்திய வெளியுறவு செயலரோடு இலங்கைக்கான இந்திய தூதுவர் தரஞ்சித் சிங்க் அவர்களும் இந்திய தூதரகத்தின் பிரதானிகளும் இச்சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.

(Visited 23 times, 1 visits today)