மு.திருநாவுக்கரசு

”யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே’ என்பதற்கிணங்க எதிர்வரும் தேர்தல்களுக்கான தேர்தல் வியூகமாகவும் வாக்கு வேட்டைக்கான அச்சாரமாகவும் எதிர்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான ஆர்.சம்பந்தன் முதலமைச்சர் விக்னேஸ்வரனது நூல் வெளியீட்டு விழாவில் ஆற்றிய உரை அமைந்துள்ளது.

கடந்த 5ஆம் திகதி யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நிகழ்ந்த ”நீதியரசர் பேசுகிறார்’ என்ற தலைப்பிலான முதலமைச்சரின் நூல் வெளியீட்டு விழாவில் சம்பந்தன் பேசிய பேச்சின் ஒரு பகுதியை பி.பி.சி. தமிழோசை இணையத் தளம் பின்வருமாறு பதிவு செய்துள்ளது.

உலகின் வல்லரசு நாடுகள் நடத்திய கூட்டுச் சதியினாலேயே தமிழ் மக்களின் உரிமைக்காக நியாயமானதும், நீதியானதுமான தீவிர ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த விடுதலைப் புலிகளின் போராட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது, ”இந்தியா, அமெரிக்கா, ஜரோப்பிய ஒன்றியம், ஐக்கிய ராஜ்ஜியம், கனடா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளே இக்கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக சம்மந்தன் கூறியுள்ளார். தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வினை முன்வைப்பதாக இலங்கை அரசு, அவ்வல்லரசு நாடுகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையினாலேயே ஆயுதப் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது, ”தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தில் நீதியும், நியாயமும் உள்ளது. அதை எவரும் மறுக்க முடியாது” என்றார் அவர்.

யாழ்ப்பாணத்தில் பேசப்பட்ட இப்பேச்சு மிகப் புத்திசாலித்தனமான முறையில் கொழும்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது போல் தெரிகிறது.

முள்ளிவாய்க்காலின் பின்னான காலத்தில் குறிப்பாக நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் அரசியல் தீர்வுகாணத் தவறியதற்கான ஓர் ஒப்புதல் வாக்குமூலமாக இப்பேச்சு அமைந்துள்ளது. இப்பேச்சுக்குப் பின்னால் உள்ள அரசியல் உள்நோக்கங்கள் மிகவும் ஆழ்ந்த கவனத்திற்குரியவை.

ஒருபுறம் அரசியல் தோல்விக்கான ஒப்புதல் வாக்குமூலமாக இது இருக்கும் நிலையில், இந்தத் தோல்விக்கான பொறுப்பை யார் ஏற்பது என்ற கேள்வி பிரதானமானது. தோல்விக்குப் பொறுப்பேற்றலும் அதற்காகப் பொறுப்பு கூறலும் ஜனநாயகத்தின் உயிர்நாடிகளாகும். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறக் கூடாது என்ற கொள்கையை முன்வைத்து பிரித்தானியப் பிரதமராயிருந்த டேவிட் கெமரோன் அத்தேர்தலில் தனது கொள்கை தோல்வியடைந்தமைக்கான பொறுப்பை ஏற்று, அதற்குப் பொறுப்புறும் வகையில் பதவி விலகி தன் அரசாங்கத்தையும் கலைத்தார். இது ஜனநாயகத்தையும் சமூக முன்னேற்றத்தையும் வளர்த்தெடுப்பதற்கான ஒரு வழிமுறையாகும்.

ஆனால் ஆர்.சம்பந்தன் அரசியல் தீர்வைக் காண்பதற்கான தமது தோல்வியை ஒப்புக்கொண்டுள்ள விதத்திற்குப் பின்னால் அடுத்த தேர்தலில் மக்களைக் தம்வசப்படுத்தி வெற்றிபெறுவதற்கான உள்நோக்கம் பொதிந்திருக்கிறது.

கடந்த முக்கால் நுற்றாண்டுகால தமிழ் மக்களின் போராட்ட வரலாற்றில் அனுபவத்திற்கு ஊடாக தமிழ் மக்கள் நிறையவே பாடங்களைக் கற்றுள்ளனர். குறிப்பாக முள்ளிவாய்க்கால் யுத்த காலத்தில் ஆசானின்றி எதிர்மறை ஆசான்களிடம் இரத்தமும் தசையுமான, நீரும், நெருப்புமான பாடங்களைக் கற்றுள்ளனர். முள்ளிவாய்க்கால் ஒரு பல்கலைக் கழகமாக அமைந்து தமிழ் மக்களுக்குப் பெறுமதி மிக்க பாடங்களை புகட்டியுள்ளது.

முள்ளிவாய்க்காலின் பின்னான காலம் 10 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்தக் காலகட்டத்தில் முள்ளிவாய்க்கால் தனது கருப்பையிலிருந்து நிறையவே அறிவியல் நூல்களையும், அரசியல் வழிகாட்டி நூல்களையும் பிரசவித்திருக்க வேண்டும். அவை ஈழத் தமிழர்களுக்கு மட்டுமன்றி மனிதகுலத்திற்குப் பெறுமதியான பாடங்களைப் போதித்து நிற்கும் ஒரு துயர்தோய்ந்த களமாகும்.

இப்போதுதான் முள்ளிவாய்க்கால் கருப்பையில் இருந்து அறிவுசார் நூல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. அந்த வகையில் ஒரு தலைவர் என்ற ஸ்தானத்தில் இருந்து வடமாகாண சபை முதல்வர் விக்னேஸ்வரன் ஆற்றிய உரைகள் நூலாக வெளியிடப்படக் கூடிய அளவிற்கு அவை அறிவியல் தரத்துடன் காணப்பட்டன. அவ்வாறே அது நூலாகவும் வெளிவந்துள்ளது. முள்ளிவாய்க்கால் தமிழ் மக்களின் மத்தியில் நீதி, தர்மம், அறிவியல், கலை, இலக்கியம், பண்பாடு சார்ந்த விழிப்புணர்வையும் ஆர்வத்தையும் தூண்டியுள்ளது. இப்பின்னணியில் தமிழ் அறிவியல் வேகம் பெறும் என்பதில் சந்தேகமில்லை.

இத்தகைய அறிவியல் விழிப்பிற்கான களம் திறப்பட்டுள்ள மக்கள் மத்தியில் இனிமேலும் ஏமாற்றுகரமான அரசியலுக்கும் கருத்துக்களுக்கும் இடமிருப்பது சாத்தியமில்லை. அதாவது முள்ளிவாய்க்கால் பட்டதாரிகளை யாராலும் இனிமேல் ஏமாற்ற முடியாது என்பதே அறிவியல் கூறும் வளர்ச்சி விதியாகும்.

சம்பந்தனின் பேச்சுக்குள் புதைந்திருக்கும் உள்நோக்கங்களைத் தெளிவாகப் பரிசீலிக்க வேண்டியது அவசியம்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப் பின்னான அரசியலில் இனப்படுகொலைக்கான நீதி காணாமல் போனோரைக் கண்டுபிடித்தல், யுத்த அழிவிற்குட்பட்ட மக்களுக்கும் உடைமைகளுக்கும் நிவாரணம் காணுதல், யுத்தத்திற்குக் காரணமான தமிழ் மக்களின் மறுக்கப்பட்ட உரிமைக்கு அரசியல் தீர்வு காணுதல் என்ற அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் ஒத்துழைத்து இவற்றிற்கான தீர்வு காணப்போவதாக உறுதியளித்தது. ஆனால், அனைத்தும் தோல்வியில் முடிந்துவிட்டன என்பது கண்கூடு. இந்நிலையில் தோல்வியை ஓர் அப்பாவி போல் காட்சியளித்து சம்பந்தன் அதற்கான ஒப்புதல் வாக்கு மூலத்தை மேற்படி பேச்சின் மூலம் அளித்து மக்களின் ஆதரவைப் பெற்றுத் தொடர்ந்து பதவியில் அமர முனைகிறார்கள்.
முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் போது இந்த உலகம் தம்மைக் காப்பாற்ற தவறியதாகத் தமிழ் மக்கள் உணர்கிறார்கள். தமிழ் மக்களின் அத்தகைய மனப்பாங்கைப் புரிந்துகொண்ட நிலையில் முக்கிய சர்வதேச நாடுகளை பெயர் சொல்லி குறை கூறுவதன் மூலம் ஒருவகை ஒப்பாரி ஆறுதலை மக்களுக்கு வழங்கி மக்களின் வாக்குக்களை மீண்டும் பெறுவதற்கான ஒரு முயற்சியாக அது அமைந்துள்ளது.

கடந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஏற்பட்ட தோல்விகளுக்கு அப்பால் தமிழ் மக்கள் மத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது அதிருப்தியும் வெறுப்பும் இருப்பது பல இடங்களில் வெளிப்படுகிறது.

இப்பின்னணியில் முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் ஏற்பட்டிருக்கும் முறுகல் நிலைக்குத் தீர்வு கண்டு, அவரை மீண்டும் மாகாணசபை முதல்வர் நிலையில் வைத்துக் கொண்டு நாடாளுமன்ற ஆசனங்களைத் தாம் கைப்பற்றி கொழும்பில் இருக்கும் இன்றைய அரசாங்கத்தை செக்கு சுற்றுவதுபோல் மீண்டும் சுற்றி அதனைப் பாதுகாப்பதற்கான ஒரு வியூகத்திற்கான ஓர் அச்சாரம் இங்கு தென்படுகின்றது.

அதாவது காணப்படும் அரசியல் தீர்வற்ற அரசியல் தோல்விகளின் பின்னணியில் எதிர்வரும் தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறுதிப் பெரும்பான்மை பெறுவதற்கான வாய்ப்புக்கள் மிகவும் அரிதானவை. இந்நிலையில் முதலமைச்சருடன் போர் தொடுத்தால் அவர் மீது தமிழ் மக்களுக்கு இருக்கும் நன்மதிப்பின் பின்னணியில் தமது நாடாளுமன்ற ஆசனங்களைக் கூடக் காப்பாற்ற முடியாது என்பதும், தமது கொழும்பு எஜமானர்களை காப்பாற்ற முடியாது என்பதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்குத் தெரியாத ஒன்றல்ல.

இப்பின்னணியிற்தான் முதலமைச்சருடன் சமரசம் செய்வதற்கான முயற்சியாகவும், தமிழ் மக்களை ஏமாற்றி வாக்குக்களை பெறுவதற்கான முயற்சியாகவும் மேற்படி வெளியீட்டு விழாவைப் பயன்படுத்தி மேற்படி உரையை நிகழ்த்தியுள்ளார் எனத் தெரிகிறது.

ஒருபுறம் சர்வதேச சமூகத்தின் மீது முள்ளிவாய்க்காலில் ஏற்பட்ட வெறுப்பிற்குப் பின்னால் கடந்த தேர்தல்கால வாக்குறுதிகளின் பின்னணியில் சர்வதேசம் மீண்டும் தம்மை ஏமாற்றிவிட்டது என்ற மன உணர்வைத் தமிழ் மக்கள் கொண்டுள்ளனர். இதற்காக அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீதும் வெறுப்படைந்துள்ளனர். அத்துடன் முதலமைச்சர் நீதியின் குரலாக உள்ளார் என்கின்ற எண்ணம் மக்கள் மத்தியில் பரவலாக உண்டு. மேலும் விடுதலைப் புலிகள் இலட்சியத்திற்காகத் தியாகம் செய்தவர்கள் என்ற எண்ணமும் தமிழ் மக்களிடம் உண்டு. இவை அத்தனையும் பயன்படுத்தி தமக்கான வாக்கு வேட்டையை ஆடுவதற்கான ஒரு வியூகமாகவே இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், கனடா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளை விரல் சுட்டி சம்பந்தன் குற்றம் சுமத்தியதும் புலிகளைப் பாராட்டியதும் அரசாங்கத்தின் மீது குறை கூறியிருப்பதும் வாக்கு வேட்டைக்கான வியூகம் என்பதில் சந்தேகமில்லை.

இந்நிலையில் முதலமைச்சர் விக்னேஸ்வரனை அரவணைத்து தமது இருப்பை பாதுகாப்பதற்கான முயற்சியையும் சம்பந்தனின் பேச்சு ஒன்றிணைத்துள்ளது.
தனது நூல் வெளியீட்டு விழாவில் உரிமைப் பிரகடனமாக தமது பேச்சை ஆற்றியுள்ள முதலமைச்சர் இத்தகைய வியூகங்களுக்குள் சிக்குப்படக்டியவராக இருக்க முடியாது. தமிழ் மக்களும் மேற்படி சம்பந்தனது பேச்சின் உட்பொருளை புரிந்து கொள்ள முடியாதவர்களாக இருக்க மாட்டார்கள்.

எப்படியோ வரவிருக்கும் தேர்தல்கள் பெரும் சோதனைக் களம் என்பதில் சந்தேகமில்லை. ஒரு பலமான ட்டு முன்னணியை அறிவார்ந்த வகையிலும், கொள்கை சார்ந்த வகையிலும் அமைக்காமல் நிலமைகளை எதிர்கொள்வது இலகுவான காரியமும் அல்ல. தமிழ் மக்களின் விமோசனம் சர்வதேச அரசியலையும் சிங்கள அரசியல் பொறிமுறையையும் சரியாகப் புரிந்து கொண்டு இராஜதந்திர மெருகுடன் எழுச்சி பெறக்கூடிய ஒரு கூட்டு முன்னணியாற்தான் நிலைமைகளை எதிர்கொள்ள முடியும். அனைத்திற்கும் அடிப்படையான நடைமுறைச் சாத்தியமிக்க ஒரு வெளியுறவுக் கொள்கையை வகுக்காமல் தமிழ் மக்கள் முன்னேற முடியாது என்பதே முதல்நிலை உண்மையாகும்.

(Visited 84 times, 1 visits today)