எஸ்.ஹரியதர்ஷனி

1947 ஆம் ஆண்டு எஸ்.எம்.நாயகத்தின் இயக்கத்தில் உருவான கடவுனு பொருந்துவ எனும் திரைப்படத்துடன் ஆரம்பமான இலங்கையின் சினிமாத்துறையானது, ஆரம்ப காலத்தில் தென்னிந்திய சினிமாவை பின்பற்றி பல திரைப்படங்கள் வெளிவரத் தொடங்கின.

பெரும்பாலும் சிங்கள மொழியினாலான திரைப்படங்களே உள்ளூர் சினிமாவாக உள்ளதுடன், ஒரு சில படங்கள் தமிழிலும் வெளியிடப்படுகின்றன.

இன்று உள்ளூர் சினிமாவுக்கு என தனி வரலாறும் உண்டு. இலங்கை தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனமானது இலங்கையில் உருவாக்கப்படும் திரைப்படங்களின் தரம், அங்கீகாரம், எத்தினத்தில் ஒளிபரப்பப்படும்,

எந்தெந்த திரையரங்குகளில் திரையிடப்படும் என அனைத்து விடயங்களையும் தீர்மானிக்கின்றது.
இலங்கையின் திரைப்பட விநியோகம் ,திரைப்படம் சார்ந்த செயற்பாடுகளை அரசாங்கமானது முன்னெடுத்து வந்ததுடன், அதில் குறைபாடுகள் நிலவியதைத் தொடர்ந்து தனியார்மயப்படுத்தப்பட்டது.

அந்த வகையில் சினிமாத் துறையை தனியார் நிறுவனங்களான Cinema Entertainment Ltd (CEL), E.A.P. Films and Theatres Ltd (EAP), Movie producers and importers Ltd (MPL), Lanka Film Distributors Ltd (LFD) என 4 நிறுவனங்கள் முன்னெடுத்து வருகின்றன.

இலங்கையின் உள்ளூர் சினிமாவைப் பாதுகாக்கும் வகையில் அரசாங்கமானது தனியார் மயப்படுத்தப்பட்டுள்ள சினிமாத் துறையை மீண்டும் பொறுப்பேற்று முன்னெடுத்துச் செல்லவுள்ளதாக உயர்கல்வி மற்றும் கலாசார விவகார அமைச்சரான விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கையின் திரையரங்கு உரிமையாளர்கள், முகாமையாளர்கள்,திரைப்பட தயாரிப்பாளர்கள் ஆகியோர் இணைந்து இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அண்மையில் மாளிகாவத்தை ரூபி திரையரங்கில் ஊடக சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தனர்.

தனியார் மயப்படுத்தப்பட்டுள்ள சினிமாத்துறையானது அரச மயமாக்கப்படுவதால் உள்ளூர் திரைப்படங்களில் வீழ்ச்சியை ஏற்படுத்துவதுடன், திறந்த பொருளாதாரக் கொள்கையைக் கொண்ட நாட்டிற்கு இது முரணான செயற்பாடாக உள்ளதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

இவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுவதால் அரசாங்கமானது தாம் தீர்மானிக்கும் படங்களை மாத்திரம் திரையிடுவதுடன், இதனால் இலங்கையின் சினிமாத் துறை சார்ந்தவர்களும் அதிகளவு பாதிப்படைவதுடன், இலங்கையின் சினிமாவிற்கு பின்னடைவினை ஏற்படுத்தும் எனவும் அவர்கள் இதன் போது சுட்டிக்காட்டினர்.

(Visited 13 times, 1 visits today)