எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் என்றால் மனித எலும்புக்கூடுகள் அகழ்வு செய்யப்படுகின்றதல்லவா?? என்கின்ற வினா பலரிடம் எழுந்துள்ளது.

மன்னார் மாவட்டத்தில் திருக்கேதீஸ்வரம் மாந்தை மனித புதைகுழியில் தொடர்ச்சியாக இடம் பெற்று வந்த மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணிகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் நிலையான எந்த ஒரு தீர்வும் கிடைக்கவில்லை.

மாந்தை மனித புதை குழி மக்கள் மத்தியில் இருந்து அகன்று செல்லாத நிலையில்,மன்னார் நகரின் மத்தியில் மேலும் ஒரு மனித புதை குழி என்பது மக்கள் மத்தியில் அச்சத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளதோடு, மக்களை ஒரு கனம் சிந்திக்கவும் வைத்துள்ளது.

மன்னார் எமில் நகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கொட்டப்பட்ட மண்ணில் மனித எலும்புகள் காணப்பட்ட நிலையிலே மன்னார் நகரில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் அகழ்வுகளின் போது மனித எலும்புக்கூடுகள் வெளி வருகின்றமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 27 திகதி மன்னார் எமில் நகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கொட்டப்பட்ட மண்ணில் மனித எலும்புகள் காணப்பட்ட நிலையில் குறித்த வீட்டின் உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் வழங்கிய முறைபாட்டைத் தொடர்ந்து மண்ணில் உள்ள எலும்புகள் சம்மந்தப்பட்ட அகழ்வு பணிகள் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டது.

குறித்த அகழ்வு பணிகள் தொடர்ந்த போது மேலும் சந்தேகத்தையும் கேள்விகளை தோற்று விக்கக்கூடிய வகையில் மேற்படி வீட்டில் கொட்டப்பட்ட மண்ணில் இருந்து சந்தோகத்திற்கிடமான மனித எலும்புத்துண்டுகள், பற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டன.
அகழ்ந்து எடுக்கப்பட்ட எலும்புகள் அணைத்தும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

குறித்த மண் அகழ்ந்தெடுக்கப்பட்ட மன்னார் நகர நுழைவாயிலில் அமைந்திருந்து உடைக்கப்பட்டு புதிய கட்டிடம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் ‘லங்கா சதொச’ விற்பனை நிலையத்தின் பக்கம் திருப்பியுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஒட்டு மொத்தமான சமூகத்தினுடைய பார்வை உடைக்கப்பட்டு புதிய கட்டிடம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தின் பக்கம் திரும்பியது.

குறித்த வளாகத்தில் இருந்து அகழ்வு செய்யப்பட்ட மண் மன்னாரில் உள்ள பல பகுதிகளுக்கு விற்பனை செய்யப்பட்டிருந்த காரணத்தினால் இவ் அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதில் பாரிய சிக்கல் தோற்றம் பெற்றது.

இந்த நிலையில் விற்பனை செய்யப்பட்ட மண்ணை கொள்வனவு செய்த மக்களையும் ‘சதொச’ வளாகத்தில் இருந்து மண்ணை ஏற்றி விநியோகித்த வாகன சாரதிகளையும் உடனடியாக பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்து குறித்த விடயம் தொடர்பான தகவல்களை வழங்குமாறு மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா தெரிவித்திருந்தார்.

இச் செயற்பாடுகளைத் தொடர்ந்து ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்திலும் குறித்த வளாகத்தில் இருந்த அகழ்ந்து எடுக்கப்பட்ட மேலதிக மண்ணைப் பராமரித்து வைத்திருந்த மன்னார் பொது மயானத்திற்கு பின் பகுதி பிரதேசத்திலும் உள்ள மண் ஆகியவற்றை ஒரே நேரத்தில் அகழ்வு செய்யும் பணிகள் ஆரம்பமானது.

அச்சத்தையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தும் வகையில் ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகம் மற்றும் மன்னார் பொது மயானத்திற்குப் பின் பகுதியில் கொட்டப்பட்ட மண் குவியல்களில் இருந்து தொடர்ச்சியாக மனித எச்சங்கள் மீட்கப்பட்டன.

குறித்த அகழ்வுப் பணிகள் ஒரு புறம் இடம் பெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் குறித்த வளாகப் பகுதியானது ஒரு மயானம் என கதை ஒன்று ஆதாரங்கள் இன்றி பரவ விடப்பட்டிருந்தது.

ஆனாலும் அகழ்வுப் பணிகளில் புலப்பட்ட மனித எச்சங்கள் சந்தேகத்தை வேறு திசைக்கு கொண்டு சென்றது.

இதனால் குறித்த அகழ்வுப் பணியானது அனைவராலும் உற்று நோக்கப்பட்டது.

மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்ட அகழ்வு பணியின் போது விசேட சட்ட வைத்திய நிபுணர் டபிள்யூ.ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர்,களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோம தேவா தலைமையிலான குழுவினர், காணாமல் போனவர்களின் குடும்பங்கள் சார்பாக சட்டத்தரணிகளான வி.எஸ்.நிரஞ்சன், திருமதி.ரணித்தா ஞானராஜ், விசேட தடவியல் நிபுணத்துவ பொலிஸார், மற்றும் அழைக்கப்பட்ட திணைக்களங்கள் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் போது முதலில் நில மட்டத்தில் இருந்து சுமார் 4 தொடக்கம் 6 அடி ஆழத்தில் மனித எச்சங்கள் பரவலாக காணப்பட்டமை கண்டு பிடிக்கப்பட்டது.

தொடர்ச்சியாக குறித்த வளாகத்தில் இடம் பெற்று வருகின்ற அகழ்வுப் பணிகளின் போது மனித எச்சங்கள்,மனித தலை மற்றும் முழுமையான மனித எலும்புக்கூடுகளும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதோடு,பல்வேறு தடய பொருட்களும் அகழ்வின் போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்தும் விசேட குழுவினர் தமது அகழ்வு நடவடிக்கைகளை மேற்கொண்ட போது மனித எச்சங்கள் என சந்தேகிக்கும் பல்வேறு எலும்புத்துண்டுகள் மீட்கப்பட்டுள்ளதோடு,பிஸ்கட் பக்கட்டின் பொலித்தீன் பை மற்றும் உடைந்த பானைத் துண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டன.

குறித்த பிஸ்கட் பக்கட்டின் பொலித்தீன் பையில் அதன் உற்பத்தித் திகதியைக் கண்டு பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது ஒரு புறம் சான்றாக கருதப்பட்ட போது நீதிபதிகளுக்கு இடமாற்றம் ஏற்பட்ட நிலையில் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா இடமாற்றம் பெற்றுச் சென்றார். பின்பு,மன்னார் நீதவானாக ரி.ஜே.பிரபாகரன் நியமிக்கப்பட்ட நிலையில் தற்போது அவர் முன்னிலையில் அகழ்வுகள் இடம் பெற்று வருகின்றது.

பல்வேறு தரப்பினரும் குறித்த அகழ்வு தொடர்பாக கவனம் செலுத்தி வருகின்ற நிலையில், குறித்த அகழ்வுப் பணிகள் சர்வதேசத்தின் பக்கம் திரும்பியுள்ளது.

தற்போது வரை 20 தடவைகள் அகழ்வு பணிகள் இடம் பெற்றுள்ளது. தொடர்ந்தும் மனித எலும்புக்கூடுகள் வெளிவந்த வண்ணமே உள்ளன.

இதன் உண்மை நிலையை கண்டறிய வேண்டிய நிலை உள்ளது. குறித்த பகுதி கடந்த காலங்களில் மயானமாக காணப்பட்டதாக ஒரு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

காணாமல் போன,கடத்தப்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் என ஒரு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
எனினும் உண்மை விபரங்கள் தெரியாத நிலையில் மக்கள் மத்தியில் அச்ச நிலை ஏற்பட்டுள்ளது.

அகழ்வுப் பணிகள் இடம் பெற்று வரும் வளாகத்தைச் சூழ்ந்த பகுதிகளில் கடந்த காலங்களில் இராணுவம் மற்றும் கடற்படையினர் நிலை கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த காலங்களில் மன்னார் நுழைவாயிலில் காவலரண் அமைத்திருந்த இராணுவத்தின் கடும் சோதனைக்கு பின்னரே மக்கள் மன்னாரை விட்டு வெளியே செல்லவும் முடியும். உள்ளே வரவும் முடியும் என்ற ஒரு அச்சமான காலம் காணப்பட்டது.

இந்த நிலையில், மன்னார் நகர மத்தில் எப்படி மனித புதை குழி காணப்பட்டுள்ளது என்கின்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

மக்கள் நீதியை நட்டுமே நம்பியுள்ள இக்கால கட்டத்தில் மக்களின் நம்பிக்கைக்கு அமைவாக உண்மைகள் வெளிப்பட வேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.

(Visited 71 times, 1 visits today)