பேராசிரியர் எம்.ஏ.நுஃமான்

ஞானம் சஞ்சிகையின் அருள்வாக்கி அப்துல் காதிர் புலவர் நூற்றாண்டுச் சிறப்பிதழ் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் வெளியிடப்பட்டது . அதனையொட்டி இக்கட்டுரை பிரசுரிக்கப்படுகிறது .

ருள்வாக்கியின் நூல்களைப் படிக்கும்போது இடைக்காலத் தமிழ்ச் செய்யுள் மரபிலும், இஸ்லாமிய ஆன்ம ஞானத்திலும் அவருக்கு இருந்த ஆழமான புலமை பளிச்செனப் புலப்படுகின்றது. தமிழ்ச் செய்யுள் வடிவங்களையும், பல்வேறு பிரபந்த வடிவங்களையும் அவர் மிகத் திறமையாகக் கையாண்டுள்ளார்.

உதாரணமாக சந்தத் திருப்புகழை எடுத்துக்கொள்ளலாம். திருப்புகழ் என்று பேசும்போது முதலில் நமக்கு நினைவு வரும் பெயர் அருணகிரிநாதர். இவர் 14 அல்லது 15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். முருகனைப் புகழும் இவரது திருப்புகழில் 1307 சந்தப் பாடல்கள் உள்ளன.

இப்பாடல்களில் ஆயிரத்துக்கு அதிகமான சந்த வேறுபாடுகள் இருப்பதாக ஆய்வாளர் கூறுகின்றனர். இவரைப் பின்பற்றி 18 ஆம் நூற்றாண்டில் முகம்மது நபியை (ஸல்) புகழ்ந்து காசிம் புலவர் ஒரு திருப்புகழ் எழுதினார். இஸ்லாமிய இலக்கிய மரபில் இதுவே முதல் திருப்புகழாகலாம். இதன் தொடர்ச்சியாகவே அருள்வாக்கியின் சந்தத் திருப்புகழை நோக்கவேண்டும்.

இதுவும் முகம்மது நபியை (ஸல்) போற்றிப் புகழும் நூறு சந்தப் பாடல்களைக் கொண்டது. ஒவ்வொரு பாடலும் வெவ்வேறு சந்தத்தில் அமைந்துள்ளது. அவ் வகையில் நூறு சந்த விகற்பங்கள் இதில் உள்ளன. அருணகிரிநாதரின் திருப்புகழில் ‘முத்தைத்தரு பத்தித் திருநகை” என்ற சந்தப்பாடல் பிரபலமானது.

அதே சந்தத்தில் அருள்வாக்கியும் ஒரு பாடல் எழுதியுள்ளார். இரண்டையும் ஒப்புநோக்குவது அருள்வாக்கியின் திறனைப் புரிந்துகொள்ள உதவும் என்று நம்புகிறேன். முதலில் அருணகிரிநாதரின் பாடலைப் பார்க்கலாம்.

தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன தனதான
முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்

பின்வருவது அதே சந்தத்தில் அமைந்த அருள்வாக்கியின் திருப்புகழ்
கொத்துற்றம லர்த்துற் றியகுழ
லிச்சைக்கெழு பொட்டிட் டொளிர்நுதல்
கொட்டத்தினு ரைத்துப் பரிமள முயர்சேலை
கொற்றத்தினு டுத்துத் தெருவெளி
சுற்றிக்கவ லைக்குட் பொருவலை
கொப்பத்தின மிழ்த்தித் தவநெறி யுலைவாக

அருணகிரிநாதரின் திருப்புகழில் பெண் வெறுப்பு சற்று முனைப்பாக இருக்கும். காசிம் புலவரின் திருப்புகழிலும், அருள்வாக்கியின் சந்தத் திருப்புகழிலும் அதன் தாக்கத்தைக் காணலாம்.

15ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் தமிழில் மேலோங்கியிருந்த சிற்றிலக்கிய மரபிலும், தமிழ்ப் புலமை மரபிலும் ஆழ்ந்த ஞானமும் பயிற்சியும் பெற்றிருந்த அருள்வாக்கி அப்துல் காதிர் புலவர், இஸ்லாமியர் மத்தியில் அக்காலத்தில் மேலோங்கியிருந்த ஆன்ம நெறியிலும், குறிப்பாகக் காதிரியா தரீக்கா நெறியிலும் அதிக ஈடுபாடுகொண்டிருந்தார் என்று அறியமுடிகின்றது.

பொதுவாக அவரது எல்லா நூல்களும் இஸ்லாமிய ஆன்மீகம் பற்றியதாக, அல்லாஹ்வையும், றசூலையும் புகழ்வதாகவும், வலிமார்களைப் புகழ்வதாகவும் இருக்கக் காணலாம். அவ்வகையில் இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தின் முக்கியமான தூண்களுள் ஒருவராக அவர் என்றும் மதிக்கப்படுவார் என்பதில் ஐயம் இல்லை.

இறுதியாக, அவர்பற்றிய சர்ச்சைக்குரிய ஒரு விடயத்தையும் தெளிவுபடுத்த வேண்டும். தன்பீகுல் முரீதீன் என்ற ஒரு உரைநடை நூலை அருள்வாக்கி எழுதியதாகவும், அறிஞர் சித்திலெப்பை 1897 இல் எழுதி வெளியிட்ட அஸ்றாறுல் ஆலம் என்ற நூலுக்கு எதிராகப் பலராலும் முன்வைக்கப்பட்ட கருத்துகளை மறுத்து அருள்வாக்கி எழுதிய நூல் அது என்றும் அதுபற்றி எழுதிய பலரும் குறிப்பிட்டுள்ளார்கள். எஸ்.எம் .ஏ.ஹஸன்தான் அருள் வாக்கிபற்றிய தனது நூலில் இதுபற்றி முதலில் எழுதியுள்ளார். அவர் கூறுவது பின்வருமாறு:

முஸ்லிம் சமுதாயத்திலே பரவியிருந்த மூடப் பழக்கவழக்கங்களைக் களைந்தெறிவதற்கு அறிஞர் சித்திலெப்பை முன்னின்று உழைத்துவந்தார். பாரம்பரியப் போதனைகள் சிலவற்றினால் மக்களது சிந்தனைகள் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இருந்த சமுதாயம் முல்லாக்களால் வரையறுக்கப்பட்ட ஒருசில கட்டுக்கோப்புகளை மீறமுடியாமலிருந்தது.

அந்த நிலையைத் தகர்த்தெறிவதற்கு முன்வந்த சித்திலெப்பை ஞானதீபம், அஸ்ராருல் ஆலம் ஆகியவற்றின் மூலமாக இஸ்லாமியத் தத்துவங்களைக் காரண காரியத்தோடு விளக்க முற்பட்டார். இஸ்லாமிய தத்துவ விளக்கங்களையும் ஞானக் கோட்பாடுகளையும் காலத்துக்கேற்ற வகையில் ஒப்பியல் முறையில், கதைகளாகவும் உருவகங்களாகவும் விளக்கம் கொடுத்து வாழ்க்கையின் இரகசியங்களிற் காணப்படும் இஸ்லாமியக் கோட்பாட்டுச் சிறப்புகளை தெளிவுபடுத்தியுள்ளார்.

இத்தகைய தெளிவுப் பாடுகளை விளங்கிக்கொள்ளாத ஒரு சிலர் சித்திலெப்பையின் ஆக்கப்பணிகளையும் இலக்கியப் போக்குகளையும் கண்டிக்க முற்பட்டனர். எத்தகைய எதிர்ப்புகளுக்கும் அஞ்சாது தனது இலட்சிய வேட்கையைத் தொடர்ந்தும் இலக்கியப் பணிகளில் செவ்வனே செய்துமுடித்த சித்திலெப்பையின் ஆக்கங்கள் காலத்தால் சிதைவுறாது, சிறப்புப்பெற்று நிலைத்துவிட்டது.

இதனை ஆமோதிக்கும் வகையில் அருள்வாக்கி அப்துல் காதிர் புலவர் தன்பீகுல் முரீதீன் ஞானதீட்சை பெறுபவன் அறியவேண்டுவது என்ற வசனநடை நூலொன்றை 1911ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார். இதனைக் காயல் பட்டினம் காமிலொலி தைக்கா சாகிபு அப்பா அவர்தம் குமாரர் ஹலரத் செய்கு முஹம்மது ஒலியுல்லாவின் பிரதான கலீபாவாகிய ஹலரத் சாஹஈல் ஹமீது ஆலிமுல் காதிரியிற் பாடல்களிலிருந்து திரட்டி எழுதப்பட்டுள்ளது.

மூல நூலைப் படிக்க வாய்ப்பற்ற பலரும் இதையே வழிமொழிந்திருப்பதாகத் தோன்றுகின்றது. இப்போது இந்த நூல் முழுமையாக இங்கு (ஞானம் சிறப்பிதழில்) வெளியிடப்பட்டுள்ளது. இதை யாரும் படித்துப்பார்க்கலாம். இந்த நூலின் அட்டையில் இதை எழுதிய ஆசிரியர்பெயர் ஷாஹஈல் ஹமீது ஆலிமுல் காதிரிய்யி எனப் பெரிய எழுத்தில் தரப்பட்டுள்ளது.

அதன் கீழே சிறிய எழுத்தில் இதனை திருப்புத்தூர் அருவாக்கி ஸ்ரீலஸ்ரீ அப்துல் காதிருப் புலவரால் இயற்றமிழ் வசனநடையால் எழுதப்பட்டது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக, இந்நூலின் ஆசிரியர் ஷாஹஈல் ஹமீது ஆலிமுல் காதிரிய்யி என்பதும் அதனை வசனநடையில் எழுதியவர் அப்துல்காதிர் புலவர் என்பதும் தெளிவாகின்றது.

ஆயினும், இயற்றமிழ் வசன நடையால் எழுதப்பட்டது” என்பதன் பொருள் என்ன என்பதில் தெளிவில்லை. அவர் மொழிபெயர்த்து எழுதினாரா அல்லது சொல்லச் சொல்ல எழுதினாரா என்று தெரியவில்லை. இந்நூலுக்கு அருள்வாக்கி அப்துல் காதிர் புலவரே சிறப்புப்பாயிரம் எழுதியுள்ளார். யாரும் தான் எழுதிய நூலுக்கு தானே சிறப்புப்பாயிரம் எழுதுவதில்லை.

தன் சிறப்புப் பாயிரத்தில் இமாம் கஸ்ஸாலியின் இஹ்யா வுலுமுத்தீன் போன்ற கிதாபுகளிலிருந்து திரட்டி இந்நூலைச் செய்தவர் ‘தன்மைநிலை கடைப்பிடித்து வாரீபாகிய பதவித்தலைமை பூண்ட சொன்னயத்தார் சாகுல் ஹமீதாலிமென வுலக மெல்லாந் துலங்கினோரே” எனக் குறிப்பிடுகின்றார். இந்நூலைத் தான் உரை நடையில் எழுதியது பற்றி அவர் இதில் எதுவும் குறிப்பிடவில்லை.

இந்நூலுக்கு முகவுரை எழுதிய நூலாசிரியர் ஷாஹஈல் ஹமீது இந்நூல் பற்றியும், அதை எழுதியதன் நோக்கம் பற்றியும், அதற்கு முதல் நூலாக அமைந்த இமாம் கஸ்ஸாலியின் நூல்பற்றியும் விரிவாகக் குறிப்பிடுகின்றார். அவ்வகையில் இது ஷாஹஈல் ஹமீது ஆலிமுல் காதிரிய்யி என்பவராலேயே எழுதப்பட்டது என்பதில் ஐயம் இல்லை. இந்த நூலின் இறுதியில் ஆசிரியர் குறிப்பிடுவது முக்கியமானது. அது பின்வருமாறு:

இதை உரைசெய்தவனாகிய சாகுல் ஹமீதென்னும் எனக்கும் மிகப் பிரயாசையோடு எழுதி முடிவுசெய்த அருள்வாக்கி அப்துல்காதிருப் புலவருக்கும், மன முவந்து வாசிக்கும் ஒவ்வொரு முஸ்லிம்களுக்கும், வாசிக்கச் சொல்லிச் செவிகொடுத்துக் கேட்டிருக்கும் கனவான்களுக்கும் அல்லாகுத் தஆலா சகல சௌபாக்கியங்களையும் கொடுத்து மென்மேலும் இரட்சிப்பானாக.

நூலின் அட்டையில் கொடுக்கப்பட்டுள்ள அதே தகவல் நூலின் இறுதியிலும் தரப்பட்டுள்ளது. ஹசன் குறிப்பிடுவதுபோல இந்நூல் ‘சாஹல் ஹமீது ஆலிமுல் காதிரியின் பாடல்களிலிருந்து திரட்டி எழுதப்பட்டுள்ளது” என்று கருதுவதற்கு இடம் இல்லை.

‘இதை உரை செய்தவனாகிய சாகுல் ஹமீதென்னும் எனக்கும்” என நூலாசிரியர் கூறுவது இதை உறுதிப்படுத்தும். இந்நூலுக்கு ஆசிரியர் எழுதிய முகவுரையைக் கூர்ந்து படிக்கும்போது, அரபு மூல நூல்களிலிருந்து நூலாசிரியரால் தொகுத்து அரபியில் எழுதப்பட்ட நூலை, நூலாசிரியரின் உதவியோடு அப்துல்காதிர் புலவர் தமிழ்ப்படுத்தி உதவியுள்ளார் என்றும், இது புலவரின் சொந்த ஆக்கம் அல்ல என்றும் நாம் கருதமுடியும்.

இரண்டாவது, இந்நூல் அறிஞர் சித்திலெப்பையின் அஸ்றாறுல் ஆலம் என்ற நூலுக்கு எதிராக அக்கால முஸ்லிம்கள் சிலரால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களை மறுத்து அவருக்கு ஆதரவாக எழுதப்பட்டது என்பதற்கும் இந்நூலில் ஆதாரங்கள் எவையும் இல்லை.

சித்திலெப்பை பற்றியோ, அவரது நூலான அஸ்றாறுல் ஆலம் பற்றியோ இந்நூலில் குறிப்புகள் எவையும் இல்லை. அக்காலகட்டத்தில் இஸ்லாமிய நம்பிக்கைகள் பற்றி முஸ்லீம்கள் மத்தியில் நிலவிய சில தவறான கருத்துகளையும் விளக்கங்களையும் மறுத்து, இஸ்லாமிய ஆன்மீக நோக்கில் சித்திலெப்பை தனது நூலில் முன்வைத்த கருத்துகளை ஒத்த பல கருத்துகள் தன்பீகுல் முரீதீன் நூலிலும் முன்வைக்கப்படுகின்றன.

இவ்விரு ஆசிரியர்களும் சில குறிப்பிட்ட மூல நூல்களையே, குறிப்பாக இமாம் கஸ் ஸாலியின் இஹ்யா உலூமுத்தீனை தம் கருத்துகளுக்கு ஆதாரமாகக் கொண்டது இதற்குக் காரணமாகலாம். அருள்வாக்கி அப்துல்காதிர் புலவர் சித்திலெப்பையுடன் தொடர்பு கொண்டிருந்தார் என்றும், இருவரும் ஒருவரில் ஒருவர் நன்மதிப்புக் கொண்டிருந்தனர் என்றும், அஸ்றாறுல் ஆலத்துக்கு எதிரான கருத்துகளை மறுத்து புலவர் பிரசங்கங்கள் செய்திருக்கிறார் என்றும் அறிகின்றோம்.

ஆயினும், தன்பீகுல் முரீதீன் அத்தகைய நோக்கத்தில் அருள்வாக்கி அப்துல்காதிர் புலவரால் எழுதப்பட்ட ஒரு நூல் அல்ல என்பது வெளிப்படை. ஆயினும், அதை ‘இயற்றமிழ் வசனநடையில்” எழுதி உதவியதை தமிழில் இஸ்லாமிய ஆன்மீகக் கருத்தாடலுக்கு அருள்வாக்கியின் பங்களிப்பாக நாம் கொள்ளலாம்.

இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்துக்குப் பெருந் தொண்டாற்றிய அருள்வாக்கி அப்துல் காதிர் புலவர் மறைந்த நூற்றாண்டை நினைவுகூரும் இச்சந்தர்ப்பத்தில் கிடைக்கக்கூடிய அவரது படைப்புகளைத் தேடி எடுத்து ஒன்றாகப் பதிப்பிக்கக் கிடைத்தமை ஒரு அதிர்ஷ்டம் என்றே கூறவேண்டும்.

அரிதில் முயன்றால் அவரது இன்னும் சில நூல்கள் கிடைக்கக்கூடும். எல்லாவற்றையும் தொகுத்து வேண்டிய இடத்து சந்தி, சீர்பிரித்து உரைக் குறிப்புகளுடன் ஒரு செம்பதிப்பாக வெளியிடுவது அவசியமாகும். இப்போதிருக்கும் நிலையில் அவரது படைப்புகளை இன்றைய வாசகர் எளிதில் படித்துப் புரிந்துகொள்ளமுடியாது. நான் அறிந்தவரை புலவரின் சந்தத் திருப்புகழுக்கு மட்டுமே உரையுடன் கூடிய ஒரு பதிப்பு தமிழகத்தில் வெளிவந்திருக்கின்றது. அவரது ஏனைய படைப்புகளுக்கும் அவ்வாறு உரைகள் எழுதப்படவேண்டும்.

இனிவரும் ஆண்டுகளிலாவது இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் இதில் அக்கறைகாட்ட வேண்டும். இலட்சக்கணக்கில் பணம் செலவழித்து ஆடம்பரமாக இஸ்லாமிய இலக்கிய மாநாடுகள் நடத்துவதைவிட இதுபோன்ற ஆக்கபூர்வமான செயற்பாடுகளே நீடித்தபயன் தருவன என்பதை அழுத்திக் கூறலாம்.

(Visited 63 times, 1 visits today)