டாக்டர் ஜீவா சேகர்
இயற்கை மருத்துவர்

மழை, பனி போன்ற குளிர்ச்சியான தட்பவெப்பம், வெயில் நேரத்தில் குளிர்பானங்கள், ஐஸ்வோட்டர் குடிப்பது, இரவு தூங்கப்போவதற்குமுன் குளிர்ச்சியான உணவுகளை உட்கொள்வது போன்ற பல காரணங்களால் தொண்டையில் கரகரப்பு, தொண்டைக்கட்டு, வலி ஏற்படும். தொண்டையில் சளி கட்டிக்கொண்டு பாடாகப்படுத்தும்.இதுபோன்ற பாதிப்புகளுக்கு எளிய வைத்தியங்கள் மூலம் தீர்வு காணலாம்.

* வெற்றிலைக் கொடியின் தண்டுப்பகுதியை மட்டும் எடுத்து வாயில் போட்டுச் சுவைத்தால் தொண்டை கரகரப்பு நீங்கும். வெற்றிலைச் சாறு அல்லது மையாக அரைத்த வெற்றிலையுடன் சுண்ணாம்பு சேர்த்து தொண்டையில் தடவினால் தொண்டைக் கட்டு விலகும்.

* 10 கிராம் மஞ்சளை பசும்பாலுடன் கலந்து காய்ச்சி குடித்துவந்தால் தொண்டை தொடர்பான நோய்கள் விலகும். பசும்பாலுடன் பூண்டுப்பற்கள், மிளகுத்தூள், மஞ்சள்தூள், பனங்கற்கண்டு சேர்த்துக் காய்ச்சி நன்றாகக் கடைந்து குடித்துவந்தால் சளித் தொந்தரவுகளில் இருந்து விடுபடலாம்.

* சுக்கு, திப்பிலியுடன் மிளகு அல்லது வால்மிளகு சேர்த்து நெய் விட்டு வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். அதில் இரண்டு சிட்டிகை எடுத்து தேனுடன் சேர்த்து காலை, மாலை எனச் சாப்பிட்டு வந்தால் தொண்டை கரகரப்பு நீங்கும்.

* முருங்கை இலைச் சாறு அல்லது குப்பைமேனி இலைச்சாற்றுடன் சுண்ணாம்பு சேர்த்துப் பிசைந்து தொண்டையில் பூசினால் தொண்டைக்கட்டு, தொண்டை கரகரப்பு விலகுவதுடன் சளி தொடர்பான பிரச்சினைகள் நீங்கும்.

* அதிமதுரத்துடன் வால்மிளகு, பனங்கற்கண்டு சேர்த்துக் காய்ச்சி இதமான சூட்டில் குடித்து வந்தால் தொண்டைப்புண் சரியாகும். வெறுமனே அதிமதுரத்தை மட்டும் வாயில் போட்டுச் சுவைத்தாலும் தொண்டை கரகரப்பு நீங்கும்.

* துளசியுடன் தூதுவளை, ஓமவல்லி, ஆடாதோடை, மிளகு, சீரகம் சேர்த்துக் காய்ச்சிக் குடித்து வந்தாலும் சளித்தொல்லை, தொண்டை நோய்கள் குணமாகும்.

* வால்மிளகு 10, கிராம்பு 5, ஏலக்காய் 5, சுக்குப்பொடி அரை தேக்கரண்டி எடுத்து 2 டம்ளர் நீர்விட்டுக் கொதிக்கவைத்து ஃப்ளாஸ்க்கில் வைத்துக் கொள்ளுங்கள். இதை காலை, மதியம், மாலை அரை டம்ளர் வீதம் தேன் சேர்த்துக் குடித்தால் தொண்டைக்கட்டு நீங்கும். குரலில் நல்ல மாற்றம் தெரியும்.

* கற்பூரவல்லி இலைச்சாற்றுடன் தேன் கலந்து குடிப்பது, இஞ்சியை நசுக்கிப்போட்டு நீர் விட்டுக் கொதிக்க வைத்துக் குடிப்பது, துளசி இலை ஊறிய நீரைக் குடித்துவருவதும் தொண்டை தொடர்பான பிரச்சினைகள் நீங்க உதவும்.

(Visited 46 times, 1 visits today)