டாக்டர் ஆர்.பிரபாகரன்
பொதுநல மருத்துவர்

ரு காலத்தில் உயிரைப் பறிக்கும் நோயாகக் கருதப்பட்டது காசநோய். இந்த நோயால் பாதிக்கப்பட்டு, சதா இருமலோடு வேலைக்கும் போய், குடும்பத்தையும் காப்பாற்றிக் கரைசேர்த்து உயிரையும் விட்ட தமிழ் சினிமா கதாநாயகியைப் பார்த்து கண்ணீர் வடித்த ரசிகர்களெல்லாம் இங்கே இருக்கிறார்கள்.

புற்றுநோயைப்போல அவ்வளவு தீவிரமான நோய் அல்ல காச நோய். ஆனால், இதுகுறித்த பயம், எல்லோரையும் ஆட்டுவிக்கக் கூடிய ஒன்று. காச நோய்க்கு மருந்து உண்டு. அதை குணப்படுத்த முடியும். என்றாலும்கூட, இன்றைய டிஜிட்டல் உலகிலும் அதை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட முடியவில்லை என்பதுதான் உண்மை.

எனவே, காச நோய் ஏன் ஏற்படுகிறது, அதற்கான சிகிச்சைகள் என்னென்ன என்பது குறித்துப்பார்ப்போம்.
“காசநோய்’, “எலும்புருக்கி நோய்’ எனப் பல பெயர்களில் அழைக்கப்படும் டி.பி. நோய் பல ஆயிரக்கணக்கான வருடங்களாக மனித இனத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது.

3,000 வருடங்களுக்கு முந்தைய எகிப்திய மம்மிக்களில் இருந்த எலும்புகளைச் சோதித்துப் பார்த்தபோது, அவற்றில் காச நோய் பாதித்திருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன.

ஆபிரிக்கக் கண்டத்திலும் ஆசியக் கண்டத்திலும் வாழும் மக்கள் காலம் காலமாக காச நோயை எதிர்கொள்வதற்கு ஏற்ற எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்களாகவே இருந்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் மனிதன் காச நோய் என்கிற ஒன்றை நம்பவே இல்லை. சாபத்தாலும் பாவத்தாலும்தான் காச நோய் ஏற்படுகிறது என்ற எண்ணம் மனிதர்களுக்கு மேலோங்கி இருந்தது.

அப்போதுதான் ரொபர்ட் கொக் என்ற அறிவியல் அறிஞர் “காச நோய் பாவத்தால் வருவதல்ல. அது ஒரு பக்டீரியா வகையைச் சார்ந்த நுண்ணுயிரி தொற்றுவதால் ஏற்படுகிறது’ என்பதை நுண்ணோக்கியின் மூலம் கண்டறிந்தார். அந்த உண்மையை உலகுக்கும் எடுத்துச் சொன்னார்.

காச நோய் பற்றிய சில முக்கிய தகவல்கள்

* முடி மற்றும் நகம் தவிர உடலின் எந்த உறுப்பையும் தாக்கும் காச நோய்.

* நுரையீரல் காச நோய் மட்டுமே ஒருவரிடமிருந்து மற்றவருக்கு இருமல், தும்மல் போன்ற செய்கைகளால் பரவும். நுரையீரல் காச நோயை விரைவில் கண்டறிந்து குணப்படுத்த வேண்டியது சமூகத்தில் அதன் பரவலைத் தடுக்கும்.

* மேலும், நுரையீரல் காச நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் இருமும்போது கைக்குட்டை அல்லது துண்டால் முகத்தை மூடிக்கொண்டால், காச நோய் மற்றவருக்கு பரவும் வாய்ப்பு குறையும்.

* இரண்டு வாரங்களுக்கு மேல் இருமல் இருந்தால், காச நோய்க்கான சளிப் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.

* காச நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு மருந்து உட்கொண்டால் பூரண குணமடையலாம்.

(Visited 21 times, 1 visits today)