தேயிலை இலைச் சாற்றின் துணையுடன் பெறப்பட்ட மிகச்சிறிய நானோ அளவிலான ”குவாண்டம் துகள்கள்” (Quantum Dots நுரையீரல் புற்று நோய் செல்களை அழிக்கும் திறன் உடையது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பிரித்தானியாவின் சுவான்சி பல்கலைக் கழகமும் (Swansea University), இந்தியாவில் உள்ள ஆராய்ச்சியாளர்களும் இணைந்து ”குவாண்டம் துகள்”களைக் கொண்டு புற்று நோய் செல்களை எவ்வாறு அடையாளம் காண்பது என்று மேற்கொண்ட ஆய்வில், குவாண்டம் துகள்கள் புற்று நோய் செல்களை அழிக்கும் திறனையும் கூடுதலாகக் கொண்டிருக்கிறது என்று தற்செயலாக கண்டறிந்துள்ளனர்.

குறிப்பாக, தேயிலை சாற்றினை பரப்பு மாற்றியாக (surfactant) பயன்படுத்தி பெறப்பட்ட காட்மியம் சல்பைடு குவாண்டம் துகள்கள் புற்று நோய் கிருமிகளை 80 சதவிகிதம் அழிக்கவல்லது என்ற ஆச்சரியமூட்டும் முடிவுகளை ஆய்வக அளவில் கண்டுபிடித்துள்ளனர். அதே நேரம், இந்த குவாண்டம் துகள்களை மேலும் முறையாக அடுத்த பல நிலைகளில் ஆய்வு செய்து, மேம்படுத்தி மனிதர்களின் சிகிச்சைக்கு பயன்படுத்துவதற்கு இன்னும் பல வருடங்கள் ஆகும் என்று இந்த ஆராய்ச்சிக் குழு தெரிவிக்கிறது.

இக்கண்டுபிடிப்பின் முக்கிய ஆய்வுக் குழுவினர் (இடது புறம் இருந்து வலது புறம்) முனைவர் கேத்ரின் டி காஸ்ட்ரோ, முனைவர் மாத்யூ டேவிஸ், முனைவர் சுதாகர் பிச்சைமுத்து.இவ்வாராய்ச்சிக் குழுவில் இந்தியாவில் தமிழகத்தில் உள்ள கே. எஸ். ரெங்கசாமி நுட்பக் கல்லூரியின் உயிரி நுட்பத் துறை மற்றும் பாரதியார் பல்கலைக் கழகத்தின் தாவரவியல் துறையில் உள்ள ஆய்வாளர்களும் பங்கு பற்றியுள்ளனர்.

”தேயிலை இலைகளின் பயன்பாட்டினைப் பொறுத்த வரை மூன்றில் ஒரு பங்கு அவை தேநீர் அருந்தும் சுவைக்கு ஏற்றதாக இல்லாமல் இருப்பதால் அவை பெரும்பாலும் குப்பைகளாக வீணாகிறது. இவ்வாறு வீணாகும் தேயிலை இலைகளை பக்க விளைவுகளற்ற, பரப்பு மாற்றிகளாக குவாண்டம் துகள்கள் தயாரிப்பில் பயன்படுத்துவதன் மூலம் ஒட்டுமொத்த குவாண்டம் துகள்களின் தயாரிப்பு விலையினை பன்மடங்கு குறைக்க முடியும்” என்று இந்த ஆராய்ச்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் முனைவர் சுதாகர் பிச்சைமுத்து தெரிவிக்கிறார்.

”தற்போது வர்த்தக சந்தையில் குவாண்டம் துகள்களின் விலை ஒரு மில்லி கிராம் அளவானது 250 ல் இருந்து 500 பவுண்ட (1 பவுண்ட் 90 ரூபாய்) வரை விற்கப்படுகிறது. ஆனால், தேயிலை இலைச் சாற்றின் துணையுடன் தயாரிக்கப்பட்ட குவாண்டம் துகளானது மில்லிகிராம் ஒன்றிற்கு 10 பவுண்ட்கள் மட்டுமே உற்பத்தி செலவாகும். அத்தோடு இவை நல்ல ஆரோக்கியமான செல்களை அழிக்காமல், புற்று நோய் செல்களை மட்டும் தெரிவு செய்து குவாண்டம் துகள்கள் துணையுடன் அழிக்க முடியும்” என முனைவர் சுதாகர் கூறுகிறார்.

மேலும் இக்குவாண்டம் துகள்கள் அதிக ஒளி உமிழ்வு திறன் (florescence) கொண்டவையாக இருப்பதால் இவற்றின் துணையுடன் புற்று நோய் கிருமிகளை மிக எளிதாக அடையாளம் காண இயலும் என இக்குழு தெரிவிக்கிறது.

இந்திய ஆய்வுக் குழுவில் முக்கிய பங்காற்றியவர்கள், முனைவர் மைதிலி ஞானமங்கை பாலசுப்ரமணியம் (இடமிருந்து மூன்றாவது), மற்றும் கவிதா சிவாஜி (இடமிருந்து நான்காவது)

இவ்வாராய்ச்சியில் மற்றுமொறு குறிப்பிட்டத்தக்க கண்டுபிடிப்பானது புற்று நோய் செல்களின் சுவற்றில் உள்ள துளைகள்(nanopores வாயிலாக குவாண்டம் துகள்கள் மிக எளிதாக ஊடுருவும் திறனுடையது என்று நிரூபித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பானது குவாண்டம் துகள்களைக் கொண்டு புற்று நோய் கிருமிகளை அழிக்கும் ஆராய்ச்சியை அடுத்த நிலைக்கும் எடுத்துச் செல்லும் என இக்குழு நம்புகிறது.

தேயிலை இலையில் உள்ள பாலிபீனால், அமினோ அமிலம், விட்டமின்கள், மற்றும் ஆக்சிஜனேற்றம் செய்யும் மூலக்கூறுகள் புற்று நோய் செல்கள் தீவிரமாக பரவுவதற்கு முக்கிய காரணமான டி.என்.ஏ தகவல்களை பலபடியாக்கம் செய்ய விடாமல் அபோப்டோசிஸ் (apoptosis) என்னும் நிகழ்வின் மூலம் தடுத்து அழிக்கிறது.

வேல்ஸ் புற்று நோய் நுண்ணறிவு மற்றும் கண்காணிப்பு பிரிவின் அறிக்கைப்படி நுரையீரல் புற்று நோய் என்பது வேல்ஸ் மற்றும் உலக அளவில் அதிக அளவில் காணப்படும் நான்கு வகை புற்று நோய்களில் ஒன்றாகும்.

(Visited 88 times, 1 visits today)