டாக்டர் அப்துல்காதர்
சித்த மருத்துவர்

னித உடலானது மூன்று முறைகளால் நெறிப்படுத்தப்பட்டு இருக்கிறது. அது வாதம், பித்தம், கபம் ஆகும். வாதம், பித்தம், கபம் இம்மூன்றும் சரியாக நாடியில் 1: 1/2 : 1/4 (அதாவது வாதம் முழுபங்கும் பித்தம் அரைபங்கும், கபம் கால் பங்கும்) அளவினை ஒருவரின் இரண்டு கைகளையும் பிடித்து அவருடைய மணிக்கட்டு அருகில் சற்று கீழே நரம்புகளின் வழியாக கணிக்கப்படுகிறது.

வாதம், பித்தம், கபம் உடலில் இந்த அளவில் சரியாக நடைபெறுமேயானால் மனிதனுக்கு எந்தவித நோய்களும் இல்லாமல் நீண்டநாள் வாழ்வார்கள். அதுபோல வாதம், பித்தம், கபம் நாடியானது கூடி குறைந்து காணப்படுமேயானால் அதற்கு ஏற்ப மனித உடலில் பல நோய்கள் ஏற்படுகின்றன. இதை கண்டறிவதே சித்த மருத்துவத்தில் முக்கியமான பரிசோதனை ஆகும்.

ஒவ்வொரு மனிதனுக்கும் நாடி நடைபெறும் அளவைப் பொறுத்து அவர்களது தேக உடல் அமைப்பு, வாத உடம்பு, பித்த உடம்பு, கப உடம்பு என்று பிரிக்கப்பட்டு இருக்கிறது. சித்த மருத்துவர்கள் மனிதனின் கையில் நாடியின் அளவை முறையாக பரிசோதித்து எந்த நோயில் அவர் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை உறுதியாக உடனடியாகக் கூற முடியும். இந்த முறை இன்றளவும் கடைப்பிடிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

வாத நாடி

மூச்சு வெளிவிடுதல் மற்றும் மூச்சை உள்ளே இழுத்தல், தன்மையை உணர்த்துதல், சிந்தனை செய்தல், உடல் உறுப்புகள் செயற்படுதல் போன்றவை மனிதனுக்கு வாதத்தின் அடிப்படை செயற்பாடுகள்.வாத பாதிப்பு அறிகுறிவாத நாடியானது பாதிக்கப்படுமேயானால் உடல் உறுப்புகள் செயல் இழத்தல், உடல் முழுவதும் வலி, மூட்டுவலி, உணர்வு இழத்தல், தசைச்சுருங்கல், சரும வறட்சி, நாவில் ருசி குறைதல், மலக்கட்டு, உடலில் நீர் குறைந்து போதல், உடல் சோர்வு, தூக்கமின்மை, மயக்கம் போன்றவை உண்டாகும்.

பித்த நாடி

உடலுக்கு குளிர்ச்சி, உணரும் தன்மை, உணவு சரியான முறையில் செரிமானம்,சரும நிறம் இயற்கையாக இயல்பாக இருத்தல், கண் பார்வை துல்லியமாக இருத்தல், வியர்வை, ரத்தம், இதயம் சரியான முறையில் இயங்கச் செய்வது பித்த நாடியின் செயற்பாடுகளாகும்.

பித்த நாடி பாதிப்படைந்தால்…

முறையாக பித்த நாடியானது செயற்படாமல் கூடியோ அல்லது குறைந்தோ காணப்படுகிறபோது உடலில் மஞ்சள் காமாலை உண்டாதல், ஈரல் மற்றும் கல்லீரல் நோய் ஏற்படுதல், பார்வைத்திறன் குறைதல், கண்ணில் படலம் ஏற்படுதல், உடலின் தோல் சுருங்கி கறுப்பாக மாறுவது, அதேபோல் முடியின் கறுப்பு நிறம் மாறி வெள்ளை முடி தோன்றுதல், மூச்சுவாங்குதல், இதயம் சம்பந்தமான நோய்கள், மனிதனின் உடல் அமைப்பு வயோதிக நிலை போன்று காணப்படும்.

கபம்

கப நாடியானது உடலுக்கு இயல்பாக இருக்குமேயானால் உடலுக்கு குளிர்ச்சி, உடல் வலிமை, தோல் பளபளப்பாக இருத்தல், கண்கள் குளிர்ச்சியாகவும் எவ்வித கண்களுக்கு பாதிப்பு இல்லாமல் தெளிவான பார்வை இருத்தல், முடி சிறப்பாக அடர்த்தியாக வளர்தல், பேச்சில் குரல் தெளிவோடு இருத்தல், உடல் குளிர்ச்சி அடைந்து மென்மையாக இயல்பாக இருத்தல், நாக்கில் சுவைத்தன்மை சரியாக இருத்தல் போன்றவைகளோடு மனிதன் இயல்பாக இளமையோடு காட்சி தருவார்கள். இவை கப நாடியின் செயல்பாடுகள் ஆகும்.

கபம் உடலில் நாடி நடை பாதிக்கப்படுகிறபோது இருமல் மற்றும் சளி உண்டாதல், தொண்டை வறட்சி, ஆஸ்துமா, சைனஸ், தலைவலி, தலைச்சுற்றல், மயக்கம், ரத்த அழுத்தம் அதிகமாதல், சருமம் வறண்டு காணப்படுதல், அதிகத் தூக்கம், நடந்தால் மேல் மூச்சு வாங்குதல், நெஞ்சு படபடப்பு, வேலை பார்ப்பதில் உற்சாகம் குறைந்து காணப்படுதல், பசி இல்லாது இருத்தல், உமிழ்நீர் சுரப்பு அதிகரித்து காணுதல், மலம் வெள்ளை நிறமாக வெளுத்துச் செல்லுதல், சிறுநீர் அதிகமாக செல்லுதல் போன்றவைகள் காணப்படும்.

ஆகவே உடல்நிலையில் வாதநாடி, பித்தநாடி, கபநாடி இயல்பாக இருக்கும் வரை எந்த நோயும் இல்லாது, ஆயுள் அதிகரித்து வாழ முடியும். அதேபோல், ஏதேனும் ஒரு நாடி பாதிக்கப்பட்டிருந்தால் அதனை அறிந்த பிறகு சிகிச்சை எடுத்துக் கொள்ளும்போது மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியும். ஆரோக்கியம் தொடரும்.
வாதம், பித்தம், கபம் சீராக இருக்க என்ன செய்யலாம்?

இவை மூன்றும் உங்கள் உடலில் சரியான அளவில் இயங்க நீங்கள் உணவியல் முறையையும் வாழ்வியல் முறையையும் மாற்றியமைக்க வேண்டும்.

* எண்ணெயில் பொரித்த உணவை தினமும் எடுத்துக் கொள்வதை முழுவதும் தவிர்க்க வேண்டும். எண்ணெயில் பொரித்த உணவுகளில் எல்லா சத்துக்களும் எண்ணெயோடு போய்விடுகிறது. வெறும் மொறுமொறுப்பு சுவை மட்டும்தான் நமக்கு கிடைக்கிறது. மேலும் அது நமது செரிமான சக்திக்கு இடைஞ்சலாக இருக்கிறது.

* தினமும் ஒரு பழம் சாப்பிடுவதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள், வேக வைத்த உணவு, நீராவியில் வெந்த உணவு வகைகளை தினமும் எடுத்துக்கொள்ளுங்கள்.

* சிறுதானிய வகை உணவுகள், கொட்டை உணவுகள், பருப்பு வகைகள் போன்ற உணவுகளை அன்றாட உணவில் தேவையான அளவு எடுத்துக் கொள்ளுங்கள்.

* உங்களுடைய சரியான தூக்கமும் வாதம் பித்தம் கபத்தை சீராக வைத்துக்கொள்ள உதவும். அதனால் உங்களின் தூக்கத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுங்கள். அதிகபட்சம் 8 மணி நேரம் தூங்கி அதிகாலை எழும் பழக்கத்தை கடைப்பிடியுங்கள்.

* அதிகாலை எழுவது வாதம் பித்தம் கபத்தை சீராக்க உதவும். மேலும் அது பாதிப்படைந்திருந்தால் அதிகாலை விழிக்கும் பழக்கம் இருப்பவர்களுக்கு அது சரியான நிலைக்கு வரும்.

* உண்பதன் மூலம் உங்களின் வயிறுக்கு வேலை கொடுப்பது போல உங்களின் உடலுக்கும் வேலை கொடுங்கள். அதாவது உங்கள் உடல் தினமும் உடல் உழைப்பால் கொஞ்சமாவது வியர்க்க வேண்டும். அதற்காக உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள்.

* யோகா, மூச்சுப்பயிற்சி போன்றவையும் மேற்கொள்ளுங்கள். இது உங்களின் மனத்தூய்மைக்கு உதவும்.

* அடிக்கடி கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் குடியுங்கள்.

* மது, புகை பழக்கமிருந்தால் அதை உடனே கைவிடுங்கள்.

* கேரட், பீட்ருட், இஞ்சி, பூண்டு, மணத்தக்காளி கீரை, மாதுளம்பழம், வில்வம் பழம், அப்பிள் போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளும்போது உங்களுடைய வாதம், பித்தம், கபத்தை சீராக வைத்துக் கொள்ள முடியும்.

* முறையான உணவுப் பழக்கவழக்கங்களோடு மனமும் தூய்மையாக இருக்க வேண்டும், அத்தோடு செய்கிற செயற்பாடுகளிலும் இனிதாக அமையப் பெறுமேயானால் அதுவே நீடித்த ஆயுள் உண்டாக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

(Visited 78 times, 1 visits today)