கீதா அசோக்
அரோமா தெரபிஸ்ட்

த்தனை காலமாக, ‘வெயில் காலம் வந்துவிட்டாலே தலையெல்லாம் வியர்க்கும். அழுக்கு, பிசுக்கு அதிகமாகி முடியெல்லாம் கொத்துக் கொத்தாக உதிரும்’ என்று நினைத்து வந்திருக்கிறோம். அனுபவித்தும் வந்திருக்கிறோம்.

ஆனால், ” வெயில் காலம்தான் கூந்தல் வளர்ச்சிக்கு அருமையான காலம்’.
தலையெல்லாம் வியர்த்து வழிந்து, எண்ணெய்ப் பிசுக்காக உணரும் போது, தலையை ஷாம்பூ அல்லது சீயக்காய்த்தூளால் வோஷ் பண்ணிவிடுங்கள். உடனே முடியவில்லை என்றாலும், மறுநாளாவது வோஷ் செய்துவிடுங்கள்.

வெயில் காலத்தில், கிழமை மற்றும் விசேஷம் எனப் பார்த்துக்கொண்டிருக்காமல், அடிக்கடி தலைக்குக் குளிப்பது சிறப்பு. இல்லையென்றால், தலையின் எண்ணெய்ப் பிசுக்கினால், ஸ்கால்ப்பில் இருக்கும் துளைகளை அடைபட்டு, தலைச் சருமத்தை சுவாசிக்கவிடாமல் செய்துவிடும். இதுதான் தலைமுடி கொத்து கொத்தாக உதிர்வதற்குக் காரணம்.

கோடையில் தினமும் அல்லது ஒருநாள் விட்டு ஒருநாள் தலையை வோஷ் செய்கிறீர்கள் என்றால், பின்னங்கழுத்துப் பகுதி முடியை நன்கு உலர வையுங்கள். இதனால், தலைவலி மற்றும் கழுத்து வலியைத் தவிர்க்கலாம். தேவைப்பட்டால், ஹேர்டிரையரைப் பயன்படுத்தி, முடியைக் காய வையுங்கள்.

வெயில் காலத்தில், தேங்காய் எண்ணெய்யுடன் விளக்கெண்ணெய் கலந்து வைத்துக்கொள்ளுங்கள். தலைமுடியின் ஆரம்பம் முதல் நுனி வரை தடவி, அரை மணி நேரம் ஊறவைத்துக் குளியுங்கள். ஒருநாள் விட்டு ஹேர் வோஷ் செய்யுங்கள். உடம்பு சூட்டைத் தவிர்க்கலாம். தேங்காய் எண்ணெய் நான்கு பங்கு என்றால், விளக்கெண்ணெய் ஒரு பங்கு கலக்கலாம்.

வெயில் காலத்தில்தான் முடியில் நரைத்தன்மை அதிகம் உண்டாகும். இந்தப் பிரச்சினையையும் தேங்காய் எண்ணெய் விளக்கெண்ணெய் இணைப்பு வராமல் தடுத்துவிடும்.

இரவில் ஒரு பாத்திரம் நிறைய தண்ணீர் எடுத்துக்கொண்டு, கைப்பிடி அளவுக்கு விளாமிச்சை வேர் மற்றும் நன்னாரி வேரைப் போட்டு ஊறவையுங்கள். காலையில் இந்த நீரால் தலையை அலசினால், தலைமுடியிலிருந்து துர்நாற்றம் வராது. இதைச் செய்ய முடியாதவர்கள், தண்ணீரில் 10 சொட்டு லெமன் ஒயில் கலந்து முடியை அலசலாம்.

கோடையில் முகத்துக்கும் கை, கால்களுக்கும் மட்டுமன்றி ஸ்கால்ப்புக்கும் தலைமுடிக்கும்கூட சன்ஸ்கிரீன் தேவைப்படுகிறது. அது என்ன பிராண்ட், எந்தக் கடையில் கிடைக்கும் என்கிறீர்களா ? உங்கள் வீட்டு கிச்சனிலும், ஃபிரிட்ஜிலுமே இருக்கிறது.

ஆம், ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய்யுடன் கால் தேக்கரண்டி அப்பிள் சிடர் வினிகர் கலந்து, ஸ்கால்ப்பில் ஆரம்பித்து முடியின் நுனி வரை தடவுங்கள். அரை மணி நேரம் ஊறவைத்துக் குளித்தால், எவ்வளவு வெயில் அடித்தாலும் உங்கள் கூந்தல் கவலைப்படாது.

முடியின் நரையை மறைப்பதற்கு ஹென்னா பயன்படுத்துபவர்கள், அது போட்ட இரண்டு நாட்கள் கழித்து, எண்ணெய்க் குளியல் செய்யுங்கள். இல்லையென்றால், தலைமுடி வறண்டு, கொத்துக் கொத்தாக உதிர ஆரம்பித்துவிடும்.

2 தேக்கரண்டி சுத்தமான தேன், 2 தேக்கரண்டி விளக்கெண்ணெய், பனைவெல்லம் 2 தேக்கரண்டி ஆகியவற்றை நன்கு கனிந்த ஒரு வாழைப்பழத்தில் சேர்த்துப் பிசைந்து, தலைமுடியின் வேர் முதல் நுனி வரை அப்ளை செய்யுங்கள். ஒரு மணி நேரம் ஊறவிட்டு, வோஷ் செய்தால், பட்டுப்போன்ற தலைமுடி என்பதை அனுபவத்தில் உணர்வீர்கள்.

(Visited 62 times, 1 visits today)