கணபதி சர்வானந்தா

கார் என்பது ஏழைகளால் எண்ணிப்பார்க்க முடியாத ஆடம்பரமானதொன்று என்று இருந்த நிலமையை மாற்றி யாரும் வாங்கலாம் என அதை நடைமுறைச் சாத்தியமாக்கியவர் ஹென்றி போஃர்ட். ஏதாவது ஒன்றினைத் தயாரிக்க வேண்டும் என்ற ஆர்வமும், கனவும் உறங்கவிடாது அவரை அலையவைத்ததாக, அவர் தனது வாழ்க்கை வரலாற்றிலே குறிப்பிட்டிருக்கிறார்.

ஆரம்பத்திலே பல நாட்களைச் செலவழித்து ஒரு காரை உற்பத்தி செய்தவர். நாளடைவில் ஒரு நாளில் பல கார்களை உற்பத்தி செய்கின்ற பாரிய தொழில் நிறுவனத்துக்குச் சொந்தக்காரனானார். அத்தகைய கனவானைப்போல சிறுவயதிலிருந்தே கார்கள் பற்றிக் கனவு கண்டவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பேராசிரியர் சரவணபவ ஐயர்.

தன்துறை சாராத விடயத்தில் ஈடுபட்டு வெற்றி பெற்றதற்குத் தன்னிடமுள்ள தன்னார்வமும், முயற்சியும் தான் முக்கிய காரணம். இதனை நான் முன்பே செய்திருக்க வேண்டும். அப்போது எனக்கு நேரமும் , பொருளாதாரமும் உகந்ததாக இருக்கவில்லை என்றும் பேராசிரியர் குறிப்பிட்டார்.இவர் தற்போது யாழ். பல்கலைக் கழகக் கலைப் பீடத்தில் உள்ள ஆங்கில மொழி கற்பித்தல் நிலையத்தில் பேராசிரியராகக் கடமையாற்றுகின்றார்.

பொதுவாக யாழ்ப்பாணத்தவர்கள் மோட்டார் வாகனப்பிரியர்கள் என்றது யாவரும் அறிந்த விடயம். 1950 80 களில் பல பிரித்தானிய தயாரிப்புக்களே யாழ்ப்பாணத்தில் அதிகம் காணப்பட்டன. பிரித்தானிய தயாரிப்பான ஏ 40, சோமர்செற்,மொரிஸ் மைனர் ஆகிய மோட்டார் வண்டிகளே அதிகம் புழக்கத்தில் இருந்தன. பாடசாலைச் சவாரிகள் முதல் சந்தைச் சவாரிகள், பொருட்களைக் கொண்டு செல்லுதல், குடும்ப விழாக்கள் என்று எல்லாவற்றிற்கும் என ஏ 40 வண்டிகளே அதிகம் உபயோகப் படுத்தப்பட்டன.

யாழ்ப்பாணத்தவர்கள் மிக்க கவனத்துடன் கார்களைப் பராமரித்து வைத்திருந்து அடுத்த தலைமுறையினருக்கும் பயன்பட வேண்டும் என்ற எண்ணத்தில் பிள்ளைகளுக்குச் சீதனமாகக்கூடக் கார்களை கொடுத்ததை நான் பார்த்திருக்கிறேன்.

எனவே ஒரு யாழ்ப்பாணக் குடிமகன் என்ற வகையில் பேராசிரியர் சரவணபவ ஐயருக்கும் மோட்டார் கார்களில் மேல் விருப்பம் மட்டுமல்ல அதன் பொறிமுறை இயக்கத்தை அறிவதிலும் ஆர்வம் இருந்திருக்கிறது. ஒரு ஆங்கிலப் பேராசிரியருக்குள் ஒரு பொறியியலாளரும் ஒழிந்திருப்பதை இக்கார்களின் உருவாக்கம் எமக்குக் காட்டியிருக்கிறது.

ஒரு துறைசார நிபுணத்துவம் உங்களுக்குள் வந்ததெப்படி? அதற்கு என்ன, எது தூண்டு கோலாய் அமைந்ததென்று சொல்வீர்களானால், உங்களைப் போன்ற ஆர்வத்திலும், முயற்சியிலும் இருக்கின்ற இளைஞர்களுக்கு அது ஒரு வழிகாட்டியாக இருக்கும்.

இது பற்றி என்ன சொல்லுகிறீர்கள் என அவரிடம் கேட்டேன்.

பலராலும் கேட்கப்படுகின்ற கேள்வி இது.பிறக்கும்போது எல்லாவித மனிதர்களுக்கும் எல்லாவிதத் தகுதிகளும் இருக்கும். முதலில் பெற்றோர்களின் ஊக்கம். அவர்கள் ஊக்கப்படுத்துவது மிகமுக்கியம்.பாடசாலையில் ஆசிரியர்களால் தரப்படுகின்ற ஊக்கம். பின்னர் நண்பர்கள் தரும் மானசீகமான ஊக்கம் என்று பலவழிகளிலும் அவர்களது முயற்சியை ஊக்குவிக்க வேண்டும்.

அடுத்தது எமக்குள் இதனைச் சாதிக்க வேண்டுமென்ற வெறியும், மனதின் ஒரு நிலைப்பாடும், பயிற்சியும், முயற்சியும் மிகவும் முக்கியம். தொடர்ச்சியான சிந்தனையும், இடையாறாத முயற்சியும், என்னால் இதனைச் சாதிக்க முடியும் என்ற மனத் துணிவும் எமக்குள் இருக்க வேண்டும். ஒருவருக்குள் இவைகள் அனைத்தும் ஒருங்கிணையப் பெற்றால் எவரையும் நாங்கள் திறமைமிக்கவராக்க முடியும் என்று சொல்லுகிறார் அவர்.

இவர் தான் உருவாக்கியிருக்கும் கார்களுக்குக் கழிவு இரும்புப் பொருட்களையே அதிகம் பயன்படுத்தி இருக்கிறார். அந்தவகையில் இவர் தான் ஒரு சூழலை நேசிக்கின்றவர் என்றதையும் நிரூபித்திருக்கிறார். கார் உற்பத்திக்குத் தேவையான பொருட்களைத் தான் யாழ்ப்பாணம் ஐந்து சந்தியிலுள்ள பழைய இரும்புக் கடைகளிலேயே சென்று வாங்கியதாகக் குறிப்பிட்டார்.

இவருடன் இவர் குடும்பத்தவர்களான பாஸ்கரன் மற்றும் விக்னராஜ சர்மா ஆகியோர் இணைந்து இக்கார்த் தயாரிப்புகளில் பணியாற்றியிருக்கிறார்கள். இந்த ஐந்துவகைக் கார்களையும் தயார்செய்து எடுக்க மொத்தம் 14 மாதங்கள் தங்களுக்குத் தேவைப்பட்டதாகவும், தன்னுடன் இணைந்து பணியாற்றிய இத்தகைய ஆர்வமுள்ளவர்களுக்கு முறையான ஊக்குவிப்பும், சரியான வளங்கள் மற்றும் தளங்கள் என்பன அமைத்துக் கொடுக்கப்படுமாயின் அவர்கள், இது போன்ற கார்களை உற்பத்தி செய்கின்ற தொழிற்சாலைகளை உருவாக்கிப் பலருக்கு வேலைவாய்ப்பினைக் கொடுப்பதோடு தொழிலதிபர்களாகித் தேசிய வருமானத்திற்குத் தங்களாலான பங்களிப்பையும் அவர்கள் செய்வார்கள். அத்துடன் இதை ஒரு கல்விசார்ந்த முயற்சியாகவும் முன்னெடுக்கலாம் என உறுதியாகக் கூறமுடியும் என்கிறார் பேராசிரியர் சரவணபவ ஐயர்.

அவர் கண்டு பிடிப்புகளில் முதன்மையான அல்ரா லைற் பிக்அப் (Ultra Light Pickup) என்ற இந்தக்கார், மோட்டார் வாகனச் சாரதிப் பத்திரம் பெற முடியாத சிறு வயதினரும் மிகவும் குறைவான விலைகளில் வாங்கக் கூடியதாக வடிவமைத்து இருக்கிறோம்.

இதனைச் செலுத்தும்போது பெரிய கார்களைச் செலுத்திய அனுபவத்தை அவர்கள் பெற்றுக் கொள்ளலாம். பெரிய கார்களிலே காணப்படும் அத்தனை வசதிகளையும் சிறிய அளவிலே இதில் இணைத்திருக்கிறோம். இதில் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. கடந்த மே 13 அன்று யாழ். பல்கலைக் கழக மைதானத்தில் நடைபெற்ற காட்சிப்படுத்தலில் எனது குடும்பத்தில் உள்ள எட்டு வயது நிரம்பிய இரு சிறுவர்களே இந்தக்கார்களை ஓட்டி மகிழ்ந்தனர்.

எனவே இத்தகைய கார்களை சிறுவர் பொழுது போக்கிற்காக அமைத்துள்ள விளையாட்டுப் பூங்காக்களில் அவர்களை மகிழ்விக்கப் பயன்படுத்துகின்ற அதே வேளை அவர்களுக்கு , மோட்டார் வாகனங்களை வீதி ஒழுங்குமுறைப்படி செலுத்துவதற்கும் கற்றும் கொடுக்கலாம் என்கிறார் பேராசிரியர்.

மோட்டார் வாகனங்கள் பெருகி வருகின்ற தற்போதைய சூழலில், பலர் வீதி ஒழுங்குகளைப் பின்பற்றாமல் வாகனங்களைச் செலுத்துவதை பார்த்திருக்கிறோம். விபத்துகள் எப்போதாவதொன்று நடைபெற்ற காலம்போய், தற்போது தினம் இரண்டு, மூன்று என விபத்துகள் நடைபெறுகின்றன.

எனவே, சிறுவர் பொழுது போக்காக சாரதிப் பயிற்சிகளைப் பெற்றுக் கொள்வதற்கான சிறுவர் சாரதி பயிற்சிப் பள்ளிகளை அமைத்து வீதி ஒழுங்குமுறையின் கீழ் இவ்வகை வாகனங்களைச் செலுத்தக் கற்றுக் கொடுப்போமாயின் சிறுவர்களும் மகிழ்வர். அதே சமயம் நாளை உலகில் நடக்கவிருக்கும் பலவீதி விபத்துக்களையும் தவிர்க்க ஏதுவாக இருக்கும். இதுவும் ஒரு காலத்தின் தேவை என்பது எனது கருத்து.

உருவாக்கப்பட்டிருக்கும் ஐந்து கார்களும் ஐந்து வெவ்வேறு வடிவிலானது. 1.Ultra Light Pickup 2.Jaffna Style Go-Kart 3. Solar Powered Baby Car 4. Pedal Powered Car 5.Micro Mini Motor Bike என ஐந்து வகைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

அதில் இரண்டு மட்டும் இயந்திரம் பொருத்தப்பட்டவை. அதில் ஒன்று Solar Powered Baby Car என்ற சூரிய ஒளிக்கதிரினால் சக்தியூட்டப்பட்ட பற்றரிகளின் உதவியுடன் செலுத்தக் கூடியது. இதனைப் பெருந்தெருக்களில் செலுத்துவதற்கு அரசாங்க அனுமதி தேவை இல்லை. ஒரு பத்து வயது நிரம்பிய சிறுவன் இதனைச் செலுத்தலாம். இந்தக் காரின் உருவாக்கம் மிகவும் முக்கியமானது மட்டுமல்ல மிகவும் பயனுள்ளதாக அமையப்போகின்றது.

ஏனெனில் இதன் வடிவமைப்பானது வலுவிழந்த அல்லது மாற்றுத்திறனாளி எனக் கருதப்படும் ஒருவருக்கு மிகவும் பயனுள்ளதாக அமையக் கூடிய வாய்ப்புகள் நிறைய உண்டு என்பது எனது கருத்து. ஒரு சக்கர நாற்காலியை விடக் குறைந்த விலையில் செய்து எடுக்கக் கூடியதான இந்தக் காரை மாத வருமான அடிப்படையில் பணியிலுள்ள ஒரு மாற்றுத் திறனாளி பிறர் உதவியில்லாமல் தனது ஊதியத்துக்குள் பெற்றுக் கொள்ள முடியும்.

அத்துடன் அவர்கள் இவ்வகை வாகனத்தில் ஏதாவது பொருட்களை எடுத்துச் சென்று விற்பனை செய்வதன் மூலம் தமது வாழ்வாதாரத்தைப் பெருக்கிக் கொள்ள முடியும். இதன் பயன்பாட்டை அறிந்த நல்லூரில் அமைந்துள்ள கருவி மாற்றுத் திறனாளிகள் சமூகவள நிலையத்தின் தலைவர் தர்மசேகரம் இதனை வாங்கித் தமது நிறுவனப் பயனாளிகளுக்குக் கொடுக்க ஆர்வமுடன் இருப்பதாகத் தெரிவித்தார்.அத்துடன் ஆரோட் நிறுவனமும் இவரது உற்பத்தியில் ஆர்வமாக இருப்பதாக அறிந்தோம்.

பேராசிரியரின் இவ்வகைக் கார்களின் கண்டுபிடிப்பு ஒரு சமூக மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது. சூழலை மாசு படுத்தாத மிகவும் மலிவான, இலகுவில் செலுத்தக் கூடிய, வயது குறைந்தவர்களால் இயக்கக் கூடிய, எமது சூழலுக்கு ஏற்றது என்று பல நன்மைகள் இருக்கின்ற இவ்வகைத் தயாரிப்புகளை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு பயணிக்கும் பேராசிரியர் சரவணபவ ஐயர் போன்றவர்கள் பலர் இன்னும் இலை மறை காய்கள் போல எமது சமூகத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை வெளிக் கொண்டுவருவது ஒரு காலத்தின் கட்டாயம் என்று எண்ணுகிறேன்.

(Visited 83 times, 1 visits today)