இலங்கையில் முன்னணி வகிக்கும் பாரதநாட்டியக் கலைஞரும், அபிநயஷேத்ரா நடனப்பள்ளி இயக்குனருமான திவ்யா சுஜேன், அண்மையில் பெங்களூரில் ஆர்யபட்டா சர்வதேச விருதினைப் பெற்றுக்கொண்டார்.

எஸ் .பி பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி இன்னும் பெரியோர் பலருக்குக் கிடைத்த விருது எனக்கும் கிடைக்கப்பெற்றது. என் குரு பத்மபூஷன் பேராசிரியர் இ.ங சந்திரசேகரின் ஆசிகளும், சிவனருளும் என்று தான் நம்புகின்றேன்.
கலைஞர்களால் நிறைந்த கலை தேசம் இந்தியா. அங்கு இலங்கைக் கலைஞருக்கு அங்கீகாரம் கிடைப்பதென்பது சாதாரண விடயமும் அல்ல, பல வருடங்களின் உழைப்பும், முயற்சியும், நல்லோர் அன்புமே இவ்விருதிற்கான காரணமாகலாம் என்கிறார் திவ்யா.

20 வயதிலேயே நடன கலாவித்தகர், மிருதங்க கலாவித்தகர் பட்டத்தினைப் பெற்று 12 வருடங்களாய் அபிநய÷க்ஷத்ரா நடனப்பள்ளியினூடாக குருகுல கல்வி முறையையும் வழங்கி பல மாணவர்களை உருவாக்கி வரும் திறமைக்காய் ”சிறந்த நடனப் பயிற்றுவிப்பாளர்” விருதினையும் தன் வசம் கொண்டவர்.
22 வயதிலேயே நாட்டிய நாடகங்களைத் தயாரித்து வழங்குவதோடு இந்தியா இலங்கை கலைஞர்களின் நல்லுறவை மேம்படுத்தி இணைந்து பல நிகழ்வுகளை நடாத்தி உள்ளார். இற்றைக்கு 75 மேற்பட்ட இந்தியக் கலைஞர்களோடு நிகழ்வுகளில் பங்கேற்ற சிறப்பும் இவரைச் சாரும்.

2013 ஆம் ஆண்டு சிறந்த நாட்டிய ஆற்றுகைக்காக ”மயூர நாட்டிய தாரகை ” விருதினையும் இந்தியாவில் பெற்றுக்கொண்டதுடன், ”டாக்டர் பத்மா சுப்ரமண்யன் அகில உலக விருது, நாடிய காலா ரத்னா, கலை கோமகள், முத்தமிழ் செம்மல், நாட்டிய ஜோதி, சிறந்த நாட்டிய சேவைக்கான விருது, இளம் கலைஞர் விருது போன்ற கலாசார அமைச்சின் விருது, தந்தை செல்வா நற்பணி மன்ற விருது எனப் பல அவர் விருது பட்டியலில் அடங்கும்.

இசைஞானம் உள்ள நாட்டியக் கலைஞரான திவ்யா, நடன ஆக்கம், ஆற்றுகை செய்வதோடு மட்டும் இன்றி, ஜதியமைப்பு, நட்டுவாங்கம், பாடலாக்கம், இயலாக்கம் என்பவற்றிலும் தன் திறமையை நிலைநாட்டுவதோடு, தமிழ் மேல் உள்ள ஆர்வத்தினால் வெற்றிமணி, சிவத்தமிழ் போன்ற வெளிநாட்டு பத்திரிகைகளில் தொடர் கட்டுரை வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது. கடந்த 2 வருடங்களாய் ”நின்னைச் சரணடைந்தேன்” என்னும் பாரதியார் தொடர் கட்டுரையால் லண்டன், ஜேர்மன் நாடுகளில் பிரபலமானார். நாட்டிய நாடகங்கள் தயாரித்து வருவதில் கற்பனை கொண்ட இவர், சாய் நாதனே வருக வருக, தசக்ரீவன், குரு சரிதம், விவேகானந்த சரிதம், ஒளவையார் நாட்டிய நாடகம், அரன் புகழ் பாடும் அருமறை போன்ற நாடகங்களுக்கு இயலாக்கம் வழங்கி நெறியாள்கை செய்து பாராட்டுப் பெற்றுள்ளார்.

ஆர்யபட்டா சர்வதேச விருது நம் இலங்கையின் கலைத்துறைக்கு பெருமை சேர்ப்பதாய் உணர்கிறேன், ஆதலால் அத்தனை கலைஞர்களிற்கும் அன்பைத் தெரிவிப்பதுடன், மூத்த கலைஞர்கள் ஆசியையும் வேண்டி நிற்கிறேன். இனிவரும் காலங்களிலும் நம்நாட்டில் பல் துறையிலும் உள்ள சாதனையாளர்களை இனம் கண்டு ஆர்யபட்டா நிறுவனம் கௌரவம் வழங்க வேண்டும் என்று தன் எண்ணத்தை வெளிப்படுத்தினார் திவ்யா.
வணிக நிர்வாகத்துறை முதுநிலை கல்வியுடன், சந்தைப்படுத்தல் முகாமைத்துறையில் பணி புரிந்த திவ்யா, கலை பயிலும் இளையோர் எத்தகைய கல்வி துறையில் இருந்தாலும் கலைகளின் உன்னத தன்மையை உணர்ந்து சிரத்தையுடன் ஈடுபட்டு மேம்பட்டு வந்தால் நம் தேசத்து கலை செழித்து ஓங்கும் என்பதே என் அவா என்கிறார்.

(Visited 52 times, 1 visits today)