ள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு பின்னர் தென்னிலங்கையில் ஏற்பட்ட சில மாற்றங்களை வைத்துப் பார்க்கும் பொழுது அரசியலமைப்புப் பணி முழுமையடையும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை என்று தெரிவித்தார் வட மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா.

தினக்குரலுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கேள்வி : ஸ்தம்பிதமடைந்து நின்ற புதிய அரசியலமைப்புப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்தக் கருமத்துடன் நீங்களும் தொடர்புபட்டவர் என்ற அடிப்படையில் இந்த முயற்சி எந்தளவுக்கு சாத்தியமடையும் என நீங்கள் கருதுகிறீர்கள்?

பதில் : உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு பின்னர் தென்னிலங்கையில் ஏற்பட்ட சில மாற்றங்களை வைத்துப் பார்க்கும் பொழுது அரசியலமைப்புப் பணி முழுமையடையும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லாமல் போய்விட்டது.

கேள்வி : நம்பிக்கையில்லாமல் போனதற்குக் காரணம் என்ன?

பதில் : அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்காக இதுவரை தயாரிக்கப்பட்டு வந்த அரசியலமைப்பு மாற்ற ஆவணங்களின் அடிப்படையில் புதிய அரசியலமைப்பு உயிர் பெற வேண்டுமானால் பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையும் அதன் பின்னர் தேவையேற்படின் சர்வஜன வாக்கெடுப்பும் தேவை.

அந்த அடிப்படையில் இன்று பாராளுமன்றத்தின் நிலைமையை வைத்துப் பார்க்கும் பொழுது 2/3 பெரும்பான்மை கிடைக்கும் என்பது கேள்விக்குறியாக மாறிவிட்டது.

இன்று தென்னிலங்கை அரசியலில் ஏற்பட்டிருக்கின்ற, ஏற்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலைமைகளை வைத்துப் பார்க்கும் பொழுது புதிய அரசியலமைப்புப் பணியும் கடந்தகால கசப்பான வரலாறுகளுடன் இணையப் போகின்றது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

கேள்வி : ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமை இந்தப் பணியில் நம்பிக்கை வைத்து பயணிக்கிறதே?

பதில் : விடாமுயற்சி வெற்றியைத் தரும் என்ற நம்பிக்கையில் கூட்டமைப்பின் தலைமை பயணிக்கிறதோ, என்னவோ தெரியவில்லை. கிடைத்த சந்தர்ப்பத்தை தவறவிடாமல் அதில் ஒரு வெற்றி காண வேண்டும் என்ற நம்பிக்கையில் கூட்டமைப்பின் தலைமை பயணிக்கிறார்கள் என்றே நான் கருதுகிறேன். அடுத்த தேர்தலுக்கு இன்னும் சில காலங்கள் இருக்கின்றன. அந்தக் காலம் வரை எடுத்த முயற்சியை கைவிடாது இறுதிவரை செல்ல வேண்டுமென்பதில் கூட்டமைப்பு உறுதியாக இருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. எதுவும் செய்யாமல் இருப்பதற்கு கிடைத்த சந்தர்ப்பத்தில் தீவிரமாக ஈடுபடுவதில் எந்தத் தவறும் இருக்க முடியாது.

அந்த அடிப்படையில் கூட்டமைப்பு இறுதிவரை போராடும் என் நான் எதிர்பார்க்கிறேன். அவர்களுடைய அந்த முயற்சி பலனளிக்காவிட்டாலும் “நாங்கள் இறுதிவரை போராடினோம். இலங்கை அரசு தான் வழமை போல் எங்களை ஏமாற்றிவிட்டது” என்ற செய்தியை சர்வதேசத்தின் கவனத்துக்கு கொண்டுசெல்லும் வாய்ப்பை உருவாக்கும். எனவே சர்வதேசத்தின் அழுத்தத்தை மேலும் இலங்கைக்கு கொடுப்பதற்கும் தமிழர்கள் பக்கம் சர்வதேசத்தின் ஆதரவைத் திரட்டுவதற்கும் கூட்டமைப்பு இந்தக் கருமத்தில் இறுதிவரை பொறுமை காத்து பயணிப்பதே பொருத்தமான அரசியல் நகர்வாகும்.

கேள்வி : புதிய அரசியலமைப்புக்கான பணியில் தங்களுக்கு நம்பிக்கையில்லை என்று கூறி 20 ஆவது திருத்தச் சட்டமூலத்தை ஜே.வி.பி. கொண்டுவந்திருக்கிறது. இதனை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?

பதில் : ஜே.வி.பி. 20 க்கு கொடுக்கின்ற முக்கியத்துவத்தை புதிய அரசியலமைப்பு விடயத்தில் அரசாங்கத்துக்கு வழங்கி ஒரு அழுத்தத்தை கொடுத்திருக்குமேயானால் சில நேரங்களில் அரசியலமைப்புப் பணிகள் சற்று விரைவாக நடந்தேறியிருக்கக்கூடிய சூழல் உருவாகியிருக்கலாம். ஆனால் அவர்களும் (ஜே.வி.பி.) அதனைச் செய்யவில்லை. அரசியலமைப்புப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், அதிலிருந்து தனியாக விலகிச் சென்று 20 ஐ தூக்கிப்பிடிப்பதில் நியாயம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

20 க்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து முனைப்பாக செயற்படுகிறார்களோ, அதே முனைப்புடன் புதிய அரசியலமைப்புக்கு முக்கியத்துவம் வழங்கி முனைப்பாக செயற்படுவார்களேயானால் அந்த பணி சாத்தியமடையக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாகவே நான் கருதுகிறேன்.

கேள்வி : அப்படியென்றால் அரசியலமைப்பு சீர்திருத்தத்துக்கு ஜே.வி.பி. எதிர்ப்பு என்று கூறுகிறீர்களா?

பதில் : ஜனாதிபதி முறைமையை மாற்ற கொடுக்கும் அக்கறையை ஏன் அரசியலமைப்பு மாற்றத்துக்கு கொடுக்க அவர்கள் முன்வரவில்லை என்பதுதான் என்னுடைய கேள்வி. தமிழ் மக்கள் மீது அக்கறையுள்ளவர்களாக இருந்தால்; இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்ற அக்கறையுள்ளவர்களாக இருந்தால்; இந்த நாடு சுபீட்சமாக , பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைய வேண்டும் என்ற அக்கறை கொண்டவர்களாக இருந்தால் அரசியலமைப்பு மாற்றத்துக்கு அவர்கள் முழுமையாக தங்களை அர்ப்பணித்திருக்க வேண்டும்.

ஆனால் இன்று அவர்கள் அதிலிருந்து விலகி ஜனாதிபதி முறைமையை ஒழிக்கும் 20 ஐ கையிலெடுத்து அதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்றால் அவர்களுடைய அரசியல் நிகழ்ச்சி நிரல் ; அவர்களுடைய உள்நோக்கம் என்னவென்பதை அறிவது கடினமான விடயமல்ல.

கேள்வி : வடக்கில் இடம்பெற்று முடிந்த முள்ளிவாய்க்கால் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் தொடர்பில் வடமாகாண சபைக்கும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்குமிடையில் ஏற்பட்ட முரண்பாடு, அதன் பின்னர் ஏற்பட்ட சுமுக நிலைமைகளை எதிர்க்கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?

பதில் : முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை யார் வேண்டுமானாலும் நடத்தலாம். அதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. ஆனால், நினைவேந்தல் நடந்த குறிப்பிட்ட நிலப்பரப்பில் முதல்முறையாக மாகாண சபை உறுப்பினர் ரவிகரன் உட்பட சிலர் சென்று தான் அந்த இடத்தை தெரிவு செய்து நினைவேந்தல் நிகழ்வை கடந்த காலங்களில் செய்துவந்தார்கள்.

அந்த அடிப்படையில் இந்த வருடமும் மாகாண சபை முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்தவுள்ளது என்று கூறி உறுப்பினர்களுக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டதுடன், அந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளுக்கு மாகாண சபை உறுப்பினர்களிடமிருந்து 7000 ரூபாவை சம்பளத்திலிருந்து கழிப்பதற்கு விருப்பம் கேட்டிருந்தார்கள். அதற்கிணங்க நான் உட்பட அனைத்து உறுப்பினர்களும் சம்மதம் தெரிவித்திருந்தோம்.

ஆனால், நினைவேந்தல் நிகழ்வுக்குச் சென்று பார்த்தால் அங்கு வடமாகாண சபையினுடைய எந்தப் பங்களிப்பையும் காணக்கிடைக்கவில்லை.

அந்த நிகழ்வில் முதலமைச்சர் மாத்திரம் தான் நின்றாரே தவிர, மாகாண சபை உறுப்பினர்களையோ, முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்காக நியமிக்கப்பட்ட குழுவின் அங்கத்தவர்களையோ அந்த இடத்தில் காணக்கிடைக்கவில்லை. காணக்கிடைக்கவில்லை என்று கூறுவதை விட இவர்கள் யாரும் குறிப்பிட்ட இடத்துக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

யார் என்று தெரியாதவர்களுடன் சேர்ந்து முதலமைச்சர் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்திக் கொண்டிருந்தார். அவர்களை எனக்கு யாரென்று தெரியாது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை மாகாண சபை செய்வதாகக் கூறித்தான் எங்களிடமிருந்து 7,000 ரூபா பணத்தை அறவிட்டிருந்தார்கள். ஆனால் முள்ளிவாய்க்காலில் நினைவேந்தலை நடத்தியவர்கள் மாகாண சபையினர் அல்ல, வேறு நபர்கள். எனவே என்னிடமிருந்து பெறப்பட்ட பணத்தை திருப்பித் தருமாறு கேட்டு நான் கடிதம் அனுப்பியிருக்கிறேன்.

மாகாண சபை முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்தியிருக்குமானால் நான் இன்னும் அதிகளவான பணத்தை வழங்கியிருப்பேன். அந்த நிகழ்வு மாகாண சபையால் நடத்தப்படாத பட்சத்தில் அந்த பணத்தை திருப்பித் தருமாறு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளேன்.

கேள்வி : யார் என்று தெரியாதவர்கள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்தியதாகக் கூறினீர்கள். அந்த நபர்கள் யார் என்பதை இனங்கண்டு விட்டீர்களா?

பதில் : இதுவரை அந்த நிகழ்வை யார் நடத்தினார்கள் என்று எனக்குத் தெரியாது. மாகாண சபையினுடைய முழுமையான பங்களிப்பு இருக்கவில்லை என்பது மாத்திரம் தான் எனக்குத் தெரியும்.

கறுத்த உடை தரித்தவர்கள்தான் அந்த இடத்திலிருந்தார்கள். ஈகைச் சுடரேற்றிய பெண்மணி கூட கறுத்த உடையில் இருக்கவில்லை.

கேள்வி : வடமாகாண சபையினுடைய ஆட்சிக்காலம் முடிவடைவதற்கு இன்னும் சில மாதங்கள் மாத்திரமே இருக்கிறது. இந்நிலையில், கடந்த 5 வருட பயணம் எவ்வாறு இருந்தது?

பதில் : வடமாகாண சபை இதுவரை காலமும் மாகாண சபைக்குரிய விடயங்களை கையாளாமல் மாகாண சபையினுடைய அதிகாரத்துக்கு அப்பாற்பட்ட விடயங்களுக்கு குரல் கொடுத்துக் கொண்டிருந்தது .
இதுவரைகாலமும் ஒரு வினைத்திறனாக, ஆக்கபூர்வமாக, மக்களுக்கு பயனளிக்கக்கூடியதாக எந்தவொரு விடயத்திலும் வட மாகாண சபை அக்கறை செலுத்தியிருக்கவில்லை.

வட மாகாண சபை வருவதற்கு முன் ஆளுநருக்கு கீழ் நடந்த விடயங்கள் மாத்திரமே நடந்தனவே தவிர , வேறு எந்தவொரு ஆக்கபூர்வமான விடயமும் இந்த ஐந்து வருடங்களில் நடைபெறவில்லை.

அரசியல் பிரச்சினைகள் பற்றி பேசுவதற்கு பாராளுமன்றம் இருக்கிறது. அதனை பாராளுமன்ற உறுப்பினர்கள் கவனித்துக் கொள்வார்கள். ஆனால் இங்கு மாறாக மாகாண சபையில் அரசியல் பேசுபவர்கள் அதிகரித்தமையால் மாகாண சபைக்குரிய விடயங்கள் நடைபெறாமல் போய்விட்டன.

அரசியல் செல்வாக்கை வளர்ப்பதற்காக மாகாண சபைக்கு மக்கள் அவர்களுடைய பிரதிநிதிகளை அனுப்பவில்லை. ஆனால் வடக்கு மாகாண சபையில் நடந்தது, ஒவ்வொருவரும் அவர்களுடைய அரசியல் செல்வாக்கை அதிகரிப்பதற்காக சபையை பயன்படுத்தியதுதான் .

எனவே எதிர்வரும் தேர்தலில் மக்கள் அவதானமாக, நிதானமாக சிந்தித்து அவர்களுடைய பிரதிநிதிகளை, மாகாண சபைக்குரியவர்களை இனங்கண்டு அனுப்ப வேண்டும் என்பதே என்னுடைய எதிர்பார்ப்பு.

கேள்வி: ஈ.பி.டி.பி. யினுடைய தலைவர் டக்ளஸ் தேவானந்தா அடுத்த மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கவுள்ளதாகக் கூறியிருக்கிறார். இதனை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள் ?

பதில்: கடந்த மாகாண சபைத் தேர்தலில் கூட முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்க அவர் தயாராக இருந்தார் . ஆனால் அன்று அவர் அரசாங்கத்தின் ஒரு அமைச்சராக இருந்த காரணத்தினால் அரசாங்கம் ஒரு தமிழ் அமைச்சரை இழக்க விரும்பாததால் அவரால் அன்று போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டிருந்தது. ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது அவர் களமிறங்குவதில் எந்தவிதத் தவறுமில்லை.

கேள்வி: தேசியக் கட்சிகள் இரண்டும் இணைந்திருக்கும் காலகட்டத்திற்குள் தமிழ் மக்களுக்கான தீர்வைப் பெற வேண்டும் என்ற நம்பிக்கையை கூட்டமைப்பு மக்களிடம் தெரிவித்துவந்த நிலையில் , இன்று மகிந்த ராஜபக்ஷவின் எழுச்சி அந்த நம்பிக்கையை சிதைவடையச் செய்திருப்பதாக தோன்றுகிறது. இந்தப் போக்கை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள் ? அப்படியென்றால் மீண்டும் தமிழர்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்களா?

பதில் : இலங்கையினுடைய வரலாற்றில் இரு பெரும்பான்மைக் கட்சிகளும் ஒன்றிணைந்து ஆட்சியமைத்த சூழ்நிலையில், அரசியலமைப்பினூடாக தமிழ் மக்கள் ஒரு தீர்வை பெற்றுக் கொள்ளக்கூடிய ஒரு வாய்ப்பு இருந்தது உண்மை தான். அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழ்த்தலைமைகள் விரும்பியதும் உண்மைதான்.

ஆனால் இன்று அந்த வாய்ப்பை இழந்து நிற்பதற்கு தமிழ்த் தலைமைகளிலும் பிழை இருக்கத்தான் செய்கிறது.
கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை படிக்கற்களாக எடுத்துக்கொண்டு அடிப்படைக் கொள்கைகளை விட்டுக்கொடுக்காது சில விட்டுக் கொடுப்புகளுடன் பயணிக்கத் தவறிய வரலாறுகள் பல தமிழ்த் தலைமைகளிடம் இருக்கின்றன. அதனால் பல சந்தர்ப்பங்களை தவறவிட்டிருக்கிறோம்.

அதேபோல் ஒற்றுமையின்மை என்பது எங்களுடைய சமூகத்தின் சாபக்கேடு என்றுகூட கூறலாம். ஒற்றுமையுடன் ஒரே நிலைப்பாட்டில் எங்களுடைய நகர்வுகளை முன்னெடுக்காவிட்டால் இந்த முயற்சியும் கடந்தகால கசப்பான வரலாறுகளுடன் இணையும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

(Visited 91 times, 1 visits today)