டாக்டர் செல்வி
பொதுநல மருத்துவர்

ழைக்காலம் புதிதாக எலிக்காய்ச்சலையும் கொண்டு வர வாய்ப்பு இருக்கிறது. அதனால், முன் எச்சரிக்கை நடவடிக்கை தேவை என்கிறார் பொதுநல மருத்துவரான செல்வி.

எலிக்காய்ச்சல் பற்றியும் அதனை எதிர்கொள்வதற்கான வழிமுறைகள் பற்றியும் தொடர்ந்து விளக்குகிறார்.
”மழை, காற்று, பனி என காலநிலை மாற்றம் அடையும்போது மனித சமூகத்தை அச்சுறுத்தும் நோய்கள் பரவுவதும் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுவதும் பாதிப்புகள் விஸ்வரூபம் எடுப்பதும் தொடர்கதையாக அரங்கேறிக்கொண்டுதான் இருக்கிறது.

எலிக்காய்ச்சல், டெங்கு காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் போன்ற நோய்கள் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக நகரம், கிராமம் என பல பகுதிகளிலும் மக்களை அச்சுறுத்தும் ஒன்றாகவே இருக்கிறது.

இந்த வருடம் டெங்குவின் தீவிரம் பல மடங்கு அதிகரித்திருக்கிறது. வடகிழக்குப் பருவமழை காலம் தொடங்க இருப்பதால் இந்த காய்ச்சல்களின் எண்ணிக்கையும் தாக்கமும் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. அதனால், மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியது கட்டாயமாகி விட்டது.

பன்றிக் காய்ச்சல், டெங்கு காய்ச்சல்கள் பற்றிப் பலருக்கும் தெரிந்திருக்கிறது. ஆனால், எலிக்காய்ச்சல் பற்றி இன்னும் போதுமான விழிப்புணர்வு இல்லை. எனவே, இது பற்றியும் தெரிந்துகொள்வோம்” என்றவரிடம், இந்த எலிக்காய்ச்சல் எப்படி பரவுகிறது என்று கேட்போது;

”வீதிகளில் தேங்கும் மழைநீர் மற்றும் கழிவுநீரில் எலியின் சிறுநீர், மலம் கலந்துவிடுவதால் வரும் காய்ச்சல்தான் எலிக்காய்ச்சல்.

எலியின் கழிவுகள் கலந்த இந்த தண்ணீரை மனிதர்கள் மிதிக்கும்போதோ, தெரியாமல் புழங்கிவிடும்போதோ அது எலிக் காய்ச்சலாக நம்மைத் தாக்குகிறது. இது எலி என்று மட்டும் அல்லாமல் நாய், பூனை போன்ற வளர்ப்பு பிராணிகளின் கழிவுகளாலும் ஏற்படலாம்.

இதுபோன்ற பிராணிகளின் கழிவுகள் கலந்த தண்ணீரை சமையலுக்குப் பயன்படுத்துவது, குடிப்பது, உடலைச் சுத்தம் செய்வது போன்ற சூழல்களினால் இந்த நோய் பரவ வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

குறிப்பாக, முகம் கழுவும்போதும் குளிக்கும்போதும் எலிக்காய்ச்சலை உருவாக்குகிற பக்டீரியாக்கள் கண்களின் மூலமாக பரவிவிடுகின்றன.

அதேபோல் வீதிகளில் தேங்கும் மழைநீர், கழிவுநீர் ஆகியவற்றில் நடந்து செல்லும்போது கை, கால்களில் உள்ள காயங்கள், பாதங்களின் அடிப்பகுதியில் உள்ள வெடிப்புகள் வழியாகவும் இந்த வகை கிருமிகள் பரவி எலிக் காய்ச்சலை உண்டாக்குகின்றன.

எலிக்காய்ச்சலின் ஆரம்ப நிலையில் சாதாரண காய்ச்சலைப் போன்றுதான் தென்படும். தலைவலி, வாந்தி ஏற்படலாம். உடல் மற்றும் தசைப்பகுதிகளில் தாங்க முடியாத வலி தென்படும். எனவே, சாதாரண காய்ச்சல் என்று இருந்துவிடாமல், இரத்தப் பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.

அந்த பரிசோதனை முடிவில் எலிக் காய்ச்சலுக்கு காரணமான பக்டீரியாக்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டால் முதல் கட்டமாக மருத்துவரின் ஆலோசனைப்படி அன்டிபயோடிக் மாத்திரைகள் சாப்பிட்டு வரலாம். நோயின் தீவிரத்தைப் பொறுத்து, ஊசி அல்லது மாத்திரைகள் வழியாக, இதற்கான மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம். இந்த நோயால் அவதிப்படுபவர்களுக்கு உணவு கட்டுப்பாடு தேவையில்லை.”

எலிக்காய்ச்சலின் தீவிரமான தன்மை என்ன?

”ஒருவர் எலிக் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தால் அந்த நபருக்கு நுரையீரல், சிறுநீரகம் ஆகிய உறுப்புகள் பாதிப்படையும். மேலும் இரத்தக்கசிவு உண்டாகும். 2 இலிருந்து 10 சதவீதம் மூளைக்காய்ச்சல் வரலாம். எனவே, எலிக் காய்ச்சல் அறிகுறி தென்பட்டால், டயாலிசிஸ் செய்ய வேண்டியிருக்கும். எலிக்காய்ச்சல் ஒருவரிடம் இருந்து அடுத்தவருக்கு அரிதாகவே பரவும்.

அதேவேளையில், தாய்மை அடைந்த பெண்களுக்கு எலிக் காய்ச்சல் இருக்கும் பட்சத்தில், அவர் மூலமாக முதல் 3 மாதங்கள் வரை சிசுவுக்கு எலிக்காய்ச்சல் பரவ வாய்ப்பு உள்ளது. ஆகவே, 10 நாட்களுக்கு அன்டி பயோடிக் மாத்திரைகளைக் கருவுற்ற பெண்கள் தவறாமல் குடிக்க வேண்டும்.

மழைக்காலங்களில் வெளியே சென்று வந்தால் ஒவ்வொருவரும் கண்டிப்பாக கை, கால்களை சுத்தமாகக் கழுவ வேண்டும். குளிக்க வேண்டும். கழிவு நீரை வெளியேற்றுதல், அந்நீர் செல்லும் வழியில் உள்ள அடைப்பை சரி செய்தல் போன்ற வேலைகளில் ஈடுபடுவோர், வயல்வெளிகளில் வேலை செய்பவர்கள் பாதுகாப்பு சாதனங்களான மாஸ்க், கிளவுஸ், ஷý அணிவதை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு செய்து வந்தால் எலிக் காய்ச்சல் போன்ற உயிர்க்கொல்லி நோய்களின் பாதிப்புகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்”.

 

(Visited 45 times, 1 visits today)