ரொஷான் நாகலிங்கம்

ரசாங்கம் காணாமற் போனோர் காரியாலயத்தை அமைத்தமைக்குக் காரணம் சர்வதேச அமுத்தத்திலிருந்து தன்னைப் பாதுகாத்துத் தப்பித்துக் கொள்வதற்கென காணாமற் போனோரை தேடியறியும் குழு தெரிவித்துள்ளது.

இந்தக் காரியாலயத்தின் தகவலை அறிந்து கொள்ளும் சட்டத்தின் ஊடாக தகவல் அறியமுடியாது மற்றும் விசாரணையில் குற்றவாளியாகக் காணப்பட்ட வரை சட்டத்தின் முன் நிறுத்தமுடியாமை போன்றவற்றால் இது கண்துடைப்புக்காக அமைக்கப்பட்டுள்ளது என்பது வெளிப்படையாகின்றதெனவும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அந்த அமைப்பின் பணிப்பாளர் சுந்தரம் மகேந்திரன் வழங்கிய நேர்காணல் வருமாறு.

கேள்வி :கடந்த அரசாங்க காலத்தில் உங்கள் அமைப்பு எதிர்கொண்ட சவாலை தற்போதும் எதிர்நோக்குகின்றீர்களா?

மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிகாலத்தில் மிகமோசமான மனித உரிமை மீறல்கள்இடம் பெற்று வந்தன. இதனை வெளிக்கொணர்ந்து நீதியை நிலைநாட்ட 2006ஆம் ஆண்டு எமது அமைப்பு உருவாக்கப்பட்டது. இந் நிலையில் மனித உரிமை மீறலுக்கு எதிராக பலபோராட்டங்களை நாம் முன்னெடுத்ததோடு காணாமல் போனோர்தொடர்பான ஆவணங்களைச் சேகரித்து ஆவணமயப்படுத்தி சர்வதேச மனிதஉரிமை ஆணைக்குழுவிற்கு அனுப்பிவைத்தோம்.

அத்துடன் நேரில் சென்று சாட்சியமும் வழங்கினோம். அதேநேரம் வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் செய்த போராட்டத்தின் விளைவாக நகரப்புறங்களில் காணாமல் போகச் செய்தலை யுத்த காலத்தில் ஓரளவிற்குக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்ததையிட்டு எமது அமைப்பு பெருமையடைகின்றது.

இதேவேளை கடந்தகாலப் போராட்டத்தின் விளைவாக தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த நிலையில் இழுத்தடித்துக் காணாமல் போனோர் தொடர்பான காரியலயத்தை அமைத்தது. இது ஒரு திருப்புமுனை எனக் கூறலாம். அரசாங்கம் சர்வதேச அழுத்தத்தில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ளவும் அதில் இருந்து தப்பித்துக்கொள்ளவும் எடுத்த முயற்சியாகவும் அமைந்துள்ளது. இது எமது செயற்பாட்டிற்கும் கிடைத்த வெற்றியாகும். கடந்தகாலத்தில் வீதியில் இறங்கி போராட்டங்களை நடத்தியவர்கள் தற்போது அமைதி காத்து அரசாங்கத்தை பாதுகாக்கச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். எனினும் நாம் காணாமல் போனோர்தொடர்பாக உண்மையை கண்டறியும் வரை போராட்டத்தைத் தொடருவோம்.

கேள்வி : காணாமல் போனோர் தொடர்பான காரியாலயம் தொடர்பில் உங்கள் நிலைப்பாடு என்ன?

இந்த அமைப்பில் பாரிய குறைபாடுகள் உள்ளன. காணாமற் போனோர் தொடர்பில் விசாரணை செய்து ஒருவர் குற்றவாளியாக அடையாளப் படுத்தப்பட்டபின் சட்டத்திற்கு முன் அவரை நிறுத்தும் அதிகாரம் இந்த அமைப்புக்கில்லை.

அதேநேரத்தில் தகவல் அறிந்துகொள்ளும் சட்டமூலத்தின் ஊடாக தகவல் அறியமுடியாத அமைப்பாக இது இருக்கின்றது. எனவே இது கண்துடைப்புக் காரியாலயமாக இருப்பதாக நாம் கருதுகின்றோம். பாதிக்கப்பட்ட தரப்பினர் இதனை வன்மையாக எதிர்க்கின்றமைக்கு நியாயம் இருக்கின்றது. கடந்தகாலங்களில் பல ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட்ட போதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிட்டவில்லை.

இருந்தபோதும் பாதிக்கப்பட்ட தரப்பினர் இந்த காரியாலயத்திலும் தங்களது முறைப்பாட்டைப் பதிவு செய்வது அவசியம். இதன்மூலமே அரசாங்கத்திற்கு அழுத்தத்தை பிரயோகிக்க முடியும். இல்லையேல் காணாமற் போனோர் தொடர்பில் முறைப்பாடு எமக்கு கிடைக்கவில்லை. எனவே, காணாமற் போனோர் இல்லையெனக் கதை முடிந்துவிடும். மேலும், அரசாங்கம் காணாமல் போனோர் தொடர்பில் உண்மைநிலையைத் தெரிவிக்காமற் போகுமாயின் சர்வதேச அழுத்தத்தைப் பியோகிக்க இந்த முறைப்பாடுகள் உந்துதலாக இருக்கும்.

கேள்வி :பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையின் நிலை என்ன?

காணாமற் போனவர்கள் தொடர்பாக அரசாங்கம் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்து வந்திருக்கின்றது.

ஜனாதிபதி காணாமல் போனவர்கள் எவரும் இல்லை யெனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க காணாமல் போனோர் 7000 எனவும் கூறுகின்றார், முன்னைநாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச 4000 எனக்கூறுகின்றார். இருந்த போதும் பரணகம ஆணைக்குழு தனது அறிக்கையில் 24000 பேர் காணாமற் போயுள்ளமை தொடர்பில் தமக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் ஒருசில காணாமற் போதலுக்கு அரச பாதுகாப்பு பிரிவினர் நேரடியாகவும் மறைமுகமாகவும் செயற்பட்டு இருக்கின்றார்கள் என்ற உண்மையை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் செனல் 4 அலைவரிசையில் காட்டப்பட்ட ஆவணப்படங்களைப் பரிசீலனை செய்யவேண்டும் எனவும் கூறியுள்ளதோடு, யுத்தக்காலகட்டத்தில் மனித உரிமை மீறல்கள் இடம் பெற்றுள்ளதாகவும் இதுதொடர்பானவிசாரணை அவசியம் எனவும் பரிந்துரை செய்துள்ளார். இது தொடர்பாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்காதது துரதிர்ஷ்டவசமானது என நீண்ட போராட்டம் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் பதிலில்லாமல் உள்ளமை குறித்து
எண்ணுகின்றோம்.

கேள்வி :காணாமற் போனோர் தொடர்பில் நீண்ட போராட்டம் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் பதிலில்லாமல் உள்ளமை குறித்து…

உண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்ட விடயங்களுக்கும் தற்போது செயற்பாட்டுக்குமிடையில் பாரிய முரண்பாடுகள் காணப்படுகின்றன. 62 இலட்சம் மக்களின் அபிலாசைகள் அனைத்தையும் காட்டிக்கொடுத்துள்ளார். ஜனாதிபதியுடன் இருந்து புகைப்படம் எடுத்துக்கொண்ட பிள்ளை காணாமல் போயிருப்பதை கூட கருத்தில் எடுத்து விசாரணைகள் முன்னெடுத்ததாக தெரியவில்லை.

காணாமற் போனவர்கள் தொடர்பான போராட்டங்களை முன்னெடுத்தவர்கள் அமைதிபேணுவதோடு, அதற்கு எதிரான விமர்சனங்களை தற்போது வெளியிடுகின்றனர். இது கவலைதருகின்ற விடயமாகும். சிலர் காணாமற் போனவர்கள் தொடர்பான பொறுப்புக்களை பொறுக்காமல் தட்டிக்கழித்து வருகின்றனர்.

இது தமிழ் மக்களுக்குச் செய்யும் காட்டிக் கொடுக்கின்ற துரோகமாகும். இந் நிலையில் எமது அமைப்பு காணாமற் போனவர்களுக்கான நீதி, உண்மைநிலை கண்டறியப்படும் வரை தொடர்ந்துஅரசாங்கம் தமிழ் மக்களின் மனங்களை வென்று நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமாயின் காணாமற் போனோர் தொடர்பில் உண்மைநிலையை வெளிப்படுத்த வேண்டும். அப்போதுதான் இது நல்லாட்சியாக இருக்கும்.

(Visited 39 times, 1 visits today)