இளையதம்பி தம்பையா

சில மாதங்களுக்கு முன்பு வரை புதிய அரசியல் யாப்பொன்றை உருவாக்குவது தொடர்பாக பரபரப்பான கருத்து மோதல்கள் இடம்பெற்றன. மத்திய வங்கி பிணைமுறி ஊழல், உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் முடிவுகள் என்பன அரசியல் யாப்பிற்கான இடைக்கால அறிக்கையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்கான தடையாகின. அல்லது அரசியல் யாப்பிற்கான இடைக்கால அறிக்கையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தாது கைவிட வசதியாகக் கொள்ளப்பட்டன.

அரசியலமைப்பிற்கு பாராளுமன்ற வழிகாட்டல் குழு கடந்த வியாழக்கிழமை கூடி புதிய அரசியலமைப்பை ஆக்குவதற்காக தயாரிக்கப்பட்ட இடைக்கால அறிக்கை, ஆறு உபகுழுக்களின் அறிக்கை, இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதத் தொகுப்பு என்பவற்றை தொகுத்து பொதுவான அறிக்கையொன்றை தயாரிப்பதற்காக நிபுணர்கள் குழுவொன்றை நியமிப்பது என்றும் அக்குழுவின் அறிக்கை ஒரு மாத காலத்திற்கு பெற்றுக் கொள்ளப்பட வேண்டுமென்றும் தீர்மானிக்கப்பட்டது. அவ்வறிக்கையை பெற்றுக் கொண்டு வழிகாட்டல் குழுவின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படலாம்.

அடுத்த கட்ட நடவடிக்கைகள் எத்தனை, அவை எவ்வளவு காலத்திற்குள் எடுக்கப்படும் என்பது பற்றி திட்டவட்டமாக எதுவும் தீர்மானிக்கப்படவில்லை.

இவ்வாறான சூழ்நிலையில்தான் ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பதற்காக அரசியல் யாப்பிற்கு 20 ஆவது திருத்தச் சட்டத்தை கொண்டு வருவதற்கான தனிநபர் பிரேரணையை ஜே.வி.பி. பாராளுமன்ற சபாநாயகரிடம் சமர்ப்பித்துள்ளது. புதிய அரசியல் யாப்பை கொண்டு வருவதற்கான சாத்தியங்கள் இல்லாதபடியால் தாங்கள் 20 ஆவது திருத்தத்தை கொண்டு வருவதாக ஜே.வி.பி. யினர் கூறுகின்றனர்.

நல்லாட்சி அரசாங்கத்தை அமைப்பதாக கூறி ஆட்சியை பெற்றுக் கொண்டவர்கள் புதிய அரசியல் யாப்பை கொண்டுவருவதாக வாக்குறுதி அளித்தனர். நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பு அதிகாரப்பகிர்வு அல்லது அதிகார கையளிப்பு தேர்தல் முறை மாற்றம் என்பவற்றை பிரதானமாக கொண்டே புதிய அரசியல் யாப்பு கொண்டு வரப்படும் என்றே கூறப்பட்டது.

பொதுமக்கள் கருத்தறியும் அறிக்கை, அரசியல் கட்சிகளின் அறிக்கை, நிபுணர்களின் அறிக்கை என்று பலவாறு பேசப்பட்ட போதும் மிகவும் சிறிய மாற்றங்களுடன், பாரிய தெளிவின்மைகள், குழப்பங்கள் வழிவகுத்த இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
அதில் அதிகாரப்பகிர்வு அர்த்தமுள்ளதாக இடம்பெறவில்லை.

இருப்பின் அதிகாரப்பகிர்வு கிடைக்கும் என்று இலங்கை தமிழரசு கட்சியினர் கூறினார். அவர்களின் நீண்டகால கோரிக்கையான வடக்கும், கிழக்கும் இணைக்கப்பட்ட சமஷ்டி ஆட்சிமுறையை கைவிடுவதற்கு ஒப்பான வகையிலேயே தமிழரசு கட்சியினர் இடைக்கால அறிக்கையை ஏற்றுக்கொண்டனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் இயங்கும் தமிழரசு கட்சியின் அறிக்கையாக சமர்ப்பிக்கப்பட்டு இடைக்கால அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளதின்படி இரண்டு பெரிய கட்சிகளும் (ஐ.தே.கட்சி, சு.கட்சி) அதிகாரப் பகிர்வு பற்றி உடன்பாட்டிற்கு வரும்போது தமிழரசுக் கட்சி அல்லது த.தே. கூட்டமைப்பு அதனது நிலைப்பாட்டை மீள் பரிசீலனை செய்யும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் அர்த்தம் வடக்கு கிழக்கு இணைப்புடன் கூடிய சமஷ்டி ஆட்சி என்ற நிலைப்பாட்டை கைவிட அல்லது அந்நிலைப்பாட்டில் இருந்து இறங்கி வர தயார் என்பதாகும். இக்கருத்து தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கின்றபோதும் கடும் போக்கு சிங்கள தேசியவாதிகள் புலிகள் இயக்கம் ஆயுதம் ஏந்தி பெற்றுக் கொள்ள முடியாத தமிழீழத்தை த.தே. கூட்டமைப்பு புதிய அரசியல் யாப்பின் மூலம் பெற்றுக் கொள்ளப் போவதாக பிரசாரம் செய்து வருகின்றனர்.

இடைக்கால அறிக்கை தொடர்பாக நல்லாட்சி அரசாங்கம் எனப்படும் மைத்திரி ரணில் அரசாங்கத்தில் அங்கம் வகிப்போரிடம் ஒருமித்த நிலைப்பாடில்லை. மைத்திரிக்கும் ரணிலுக்குமிடையில் கூட கருத்து முரண்பாடுகள் இருந்ததை அறியக் கூடியதாக இருந்தது. பொதுஜன அபிப்பிராய வாக்கெடுப்பிற்கு விடப்படும் தேவை ஏற்படாத விதத்தில் அரசியல் யாப்பை மாற்றுவது பற்றிய ஜனாதிபதி மைத்திரிபால அக்கறை கொண்டுள்ளார் என்பது தெளிவு.

அதாவது 1978 ஆண்டு யாப்பின் படி பொதுஜன அபிப்பிராய வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு மாற்ற வேண்டிய உறுப்புரைகளில் கைவைக்காது திருத்தங்களை மேற்கொள்வதையே அவர் விரும்பினார். அதன்படியே 19 ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதில் பிரதமரை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் இல்லாமல் செய்யப்பட்டது குறித்து தற்போது கவலை கொண்டுள்ளார். அதாவது பிரதமர் ரணிலை பதவி நீக்க தனக்கு அதிகாரம் இல்லை என்பது குறித்து தற்போது கவலையடைபவராக மைத்திரி காணப்படுகிறார்.

ஒரு முறைக்கு மேல் தான் ஜனாதிபதியாக இருக்கமாட்டேன் என்று கூறிய மைத்திரி அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் போட்டியிடுவதற்கான விருப்பத்தை தற்போது தெரிவித்துவருகிறார். இதனால் மைத்திரி அவரது அதிகாரங்களை மேலும் குறைப்பதற்கு கூட விரும்பமாட்டாத நிலையில் முழுமையாக ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கு இணங்கப்போவதில்லை. எனவே அவரின் ஆதரவு தெரிவிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜே.வி.பி.யின் 20 ஆவது திருத்தச் சட்ட பிரேரணைக்கு ஆதரவளிக்கப்போவதில்லை.

பிரதமர் ரணிலை பொறுத்தவரையில் அவர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை அடையும் இலக்கை கொண்டவராகையால் அவர் மனப்பூர்வமாக ஜே.வி.பி.யின் பிரேரணைக்கு ஆதரவளிக்கமாட்டார். அவர் ஜனாதிபதி மைத்திரியின் அதிகாரங்கள் பிரயோகிக்கப்படுவதற்கு எதிர்ப்பை தெரிவித்தாலும் ஜனாதிபதி முறையை முற்றாக ஒழிக்க விரும்பமாட்டார்.

19 ஆவது திருத்தம் காரணமாக மீண்டும் ஒரு முறை ஜனாதிபதியாக முடியாதவராக இருக்கும் மகிந்த ராஜபக்ஷ பிரதமராகி அப்பதவியினூடாக நிறைவேற்று அதிகாரங்களை பிரயோகிக்க விரும்பும் நோக்கில் ஜனாதிபதி முறையை நீக்க வேண்டும் என்று கூறலாம். ஆனால் இன்றைய சூழ்நிலையில் ஜே.வி.பி.யின் பிரேரணைக்கு ஆதரவாக மகிந்தவும் அவரது அணியினரும் இருப்பதாக காட்டிக் கொண்டாலும் அதனை முற்றாக நிறைவேற்ற ஆதரவளிப்பார்களா என்பது சந்தேகமே.

ஜே.வி.பி.யின் பிரேரணை அல்லது ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கான முனைப்பை பயன்படுத்தி மைத்திரியுடன் மகிந்த பேரப் பேச்சிற்கு செல்ல வாய்ப்பு இருக்கிறது. அதாவது மகிந்தவிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் எதிராக இருக்கும் ஊழல் மோசடி சாட்டுதல்களிலிருந்து விடுபாட்டுரிமையை பெற்றுக் கொள்ளவும், அவர்களின் அரசியல் வாய்ப்புகளை உறுதி செய்து கொள்ளவும் மைத்திரியுடன் பேரப்பேச்சுக்கு செல்லாம். அப்பேரப்பேச்சு மைத்திரி மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதை மகிந்த ஏற்றுக் கொள்ளும் நிலைவரை போகலாம்.

மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பாக விசாரித்த நீதியரசர் பத்மன் சூரசேனவின் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டிருக்கின்ற போதும் அது இன்னும் பகிரங்கப்படுத்தப்படவில்லை. அதனை வெளியிடும்படி யாரும் வற்புறுத்துவதாகவும் இல்லை.

அவ்வறிக்கை பகிரங்கப்படுத்தப்பட்டால் மகிந்த ஆட்சிக்கால விவகாரங்களின் உண்மை வெளிவரலாம்.

உள்ளூராட்சி தேர்தல் காலத்தில் மத்திய வங்கி பிணை முறி மோசடி பற்றிய விசாரணை அறிக்கை வெளியிடப்பட்டதால் பிரதமர் ரணில், ஐ.தே.க. கட்சியினரும் பெரும் அசௌகரியத்திற்குள்ளாக்கப்பட்டாலும் , ஜனாதிபதி மைத்திரிக்கு நன்மை கிடைக்கவில்லை மாறாக அவருக்கும் பாதிப்பே ஏற்பட்டது.

எனவே மகிந்த காலத்து விடயங்கள் பற்றிய விசாரணை அறிக்கையை வெளியிட்டு மேற்கூறப்பட்டவாறாக அவருக்கு மீண்டும் பாதிப்பு ஏற்படுவதை மைத்திரி விரும்பமாட்டார். ஏனெனில் மகிந்த அரசாங்கத்தில் அமைச்சர் என்ற ரீதியில் மைத்திரியும் அக்காலத்து விவகாரங்களுக்கான பொறுப்பைத் தட்டிக்கழிக்க முடியாது.

இந்தத் போக்கில் மகிந்த காலத்து விவகாரங்கள் பற்றிய விசாரணை அறிக்கை மகிந்த மைத்திரி பலப்பரீட்சையில் மைத்திரியன் அரசியல் எதிர்காலத்தை உறுதி செய்து கொள்ள பேரப்பேச்சிற்கு தகுந்த ஆவணமாக பயன்படுத்தப்படலாம்.

புதிய அரசியல் யாப்பைக் கொண்டு வருவதற்கு சாத்தியமில்லாதபடியாலேயே ஜே.வி.பி. ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கான 20 ஆவது திருத்தப் பிரேரணையை கொண்டு வருவதாக கூறினாலும் அது நிறைவேற்றப்படுவதற்கான சாத்தியங்கள் இல்லை.

ஏனெனில் அதனை நிறைவேற்ற பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு ஆதரவு கிடைக்கப் போவதுமில்லை. அதற்கு பொதுஜன அபிப்பிரய வாக்கெடுப்பில் வெற்றி கிடைக்கும் என்பதும் சாத்தியமில்லை.

ஜே.வி.பி. ஒரு அரசியல் நடவடிக்கையாக கொண்டு வரும் பிரேரணை மகிந்த மைத்திரி அணிகளுக்கிடையே முரண்பாட்டை பேணுவதற்கும் மைத்திரி ரணில் முரண்பாட்டை தணிப்பதற்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது எனலாம். தமிழ், முஸ்லிம் , மலையக கட்சிகள் ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கு விருப்பம் கொண்டிருக்கவில்லை.

ஆனால் ஜனாதிபதி முறை ஒழிப்பு என்ற அரசியல் விவகாரத்தை எவ்வாறு கையாள்வது என்பது பற்றிய தெளிவை கொண்டிருப்பதாகவும் தெரியவில்லை. இரண்டு பெரிய கட்சிகளுக்குள்ளும், இடையிலும் இருக்கும் குழப்ப நிலையில் ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு என்ற விடயத்திலும் அடக்கப்படும் தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் அரசியல் கோரிக்கைகளை முன்நகர்த்த முடியும்.

புதிய அரசியல் யாப்பை கொண்டு வருவதற்கான கோரிக்கையையும், அதன் உள்ளடக்கத்தில் அதிகாரப்பகிர்வு உட்பட ஜனநாயக உரிமைகள் என்பவை இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்தள்ள முடியும். அதற்கான தந்திரோபாயங்கள் பற்றி சிந்திக்க வேண்டும்.

புதிய அரசியல் யாப்பிற்கான பாராளுமன்ற வழிகாட்டல் குழுவில் அதிகாரப்பகிர்விற்கு பொறுப்பாக இருக்கும் சித்தார்த்தன் எம்.பி. ஒன்றுமே நடக்கப்போவதில்லை என்று நம்பிக்கை இழந்த கருத்துக்களை வெளியிடுகிறார்.

சுமந்திரன் எம்.பி.யும், எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனும் இன்னும் நம்பிக்கை இருப்பதாக கூறிவருகின்றனர். சுமந்திரனை கேள்விக்குட்படுத்துவது மட்டும் புதிய அரசியல் யாப்பைக் கொண்டுவராது, நியாயமான அதிகாரப்பகிர்வைக் கொண்டுவராது சுமந்திரனே எல்லாவற்றையும் போட்டு உடைத்துவிட்டார் என்ற பழியை போடுவதற்கு ஆதாரங்களை சேகரிக்காது தமிழ் தரப்பின் அனைவரும் அரச கட்டமைப்பிற்குள்ளும் வெளியிலும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

புதிய அரசியல் யாப்பு விடயத்தில் தமிழ் மக்கள் சார்பில் சுமந்திரனுக்கு மட்டும் பதிலிப்பத்திரம் கொடுக்கப்படவில்லை என்பதை நினைவில் கொள்வது நல்லது. அவர் பற்றி இருக்கும் அரசியல் விமர்சனங்கள் வலுவானதாகவும் செல்லுபடியானதாகவும் இருக்கலாம் என்பதற்காக 13 ஆவது திருத்தச்சட்டம் முறையாக அமுல்படுத்தப்படாமைக்கும் அவர்தான் பொறுப்பு என்று கூறும் அளவிற்கு எமது அரசியல் விமர்சன அறிவு தாழ்ந்து விடக்கூடாது.

அதேபோன்று தனிநபர் பிரேரணைகளினூடாக அரசியல் யாப்பிற்கான திருத்தங்களைக் கொண்டவரமும் முடியாது. ஜே.வி.பி. 20 ஐ கொண்டு வருவதைப் போன்று அமைச்சர் மனோ கணேசன் மொழி உரிமைக்காக 21 ஆவது திருத்தத்தைக் கொண்டு வரப்போவதாக கூறியுள்ளார். நாளை த.தே. கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் வடக்கு கிழக்கு இணைந்த சமஷ்டி ஆட்சி முறையை ஏற்படுத்த 22 ஆவது திருத்தத்தைக் கொண்டுவரப்போவதாக கூறலாம்.

இவ்வாறான அரசியல் வைரஸ் தொற்றுக்களை விட நியாயமான சமூக நீதியையாவது நிலைநாட்டக் கூடிய மக்கள் ஜனநாயகத்தை உறுதி செய்யக் கூடிய புதிய அரசியல் யாப்பே தேவை.

(Visited 24 times, 1 visits today)