பா. கிருபாகரன்

அரசும் தனியார் போக்குவரத்துத்துறையினர், தனியார் வர்த்தகர்களும் தமது பணப்பெட்டிகளை நிரப்ப மக்களை பணயம் வைத்து ஆடும் சூதாட்டமே எரிபொருள் விலைச் சூத்திரம்.

கடந்த சில வருடங்களாகவே நாடு முழுவதும் எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி ஏறுமுகமாகவே உள்ளது. நாட்டை சுட்டெரித்த வெயிலின் கொடுமை சற்று ஓய்ந்து விட்ட போதும் அதனைவிட விலைவாசி உயர்வுகள் தற்போது மக்களை சுட்டெரிக்கத் தொடங்கியுள்ளன. நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலையுயர்வு தற்போது மிகப்பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளதால் அப்பாவி மக்கள் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர்.

கடந்த 10 ஆம் திகதி நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலையை அரசு சடுதியாக அதிகரித்ததன் மூலமே இந்நிலைமை நாட்டில் ஏற்பட்டுள்ளது. அரசினால் திட்டமிடப்பட்ட எரிபொருள் விலை சூத்திரமொன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அது அங்கீகரிக்கப்பட்டதனால், கடந்த 10 ஆம் திகதி நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரித்தது.

அரசின் இந்த புதிய விலை சூத்திரத்திற்கு அமைவாக ஒக்டோன் 92 ரக பெற்றோல் 20 ரூபாவாலும், ஒக்டோன் 95 ரக பெற்றோல் 20 ரூபாவாலும் ஓட்டோ டீசல் 14 ரூபாவாலும் , சுப்பர் டீசல் 9 ரூபாவாலும், மண்ணெண்ணெய் 57 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த எரிபொருட்களின் விலை அதிகரிப்பே தற்போது நாட்டின் அனைத்து விடயங்களிலும் பெரும் தாக்கத்தை செலுத்தியுள்ளதன் மூலம் அனைத்து மக்கள் நுகர்வுப் பொருட்களும் பகிரங்கமாகவும், மறைமுகமாகவும், விலைகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.

உலக சந்தையில் எரிபொருட்களுக்கு ஏற்பட்டுள்ள விலை அதிகரிப்புக்கு அமையவே இலங்கையில் புதிய சூத்திரத்திற்கு அமைய எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. கடந்த அரசாங்கத்தில் எரிபொருட்களுக்கு வழங்கப்பட்ட விலைகளிலும் பார்க்க குறைவான விலையே தற்போது அமுல்படுத்தப்பட்டிருப்பதாகவும் அரசு சுட்டிக்காட்டுகின்றது.

எனினும் பாமர மக்களின் அத்தியாவசியப் பொருளான மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றுக்கு 57 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கு அரசு விசித்திரமான காரணமொன்றை கூறியுள்ளது. அதாவது மண்ணெண்ணெயின் விலை கடந்த அரசில் 106 ரூபாவாக இருந்த நிலையில் நாம் அதனை 44 ரூபாவாக்கினோம்.

ஆனால் மண்ணெண்ணெய் விலை குறைவடைந்ததினால் அதன் பாவனை வரலாற்றில் என்றுமில்லாத வகையில் 48% ஆல் அதிகரித்திருந்தது. மண்ணெண்ணெயின் மலிவு விலையினை காரணமாகக் கொண்டு பஸ் சாரதிகள் மற்றும் கனரக வாகன சாரதிகள் டீசலுடன் மண்ணெண்ணெயைக் கலந்து பயன்படுத்தியதே அதன் நுகர்வு திடீரென அதிகரித்தமைக்கான காரணம்.

அதனாலேயே தற்போது மண்ணெண்ணெயின் விலையை அதிகரிக்க வேண்டியேற்பட்டுள்ளது என அரசாங்கம் கூறுகின்றது.
ஆனால், அரசாங்கத்தின் எரிபொருள் விலையேற்றத்திற்கான காரணங்களை ஜே.வி.பி. யின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரட்ணாயக்க முற்றாக நிராகரிப்பதுடன், எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு அரசின் தேவையற்ற செலவீனங்களே காரணமெனவும் குற்றஞ்சாட்டுகின்றார்.

சர்வதேச எரிபொருள் தட்டுப்பாடு ரூபாவின் விலை வீழ்ச்சி என்ற காரணிகளை இந்த அரசாங்கம் எரிபொருள் விலையேற்றத்திற்கு காரணமாக கூறுகின்றது. இதில் ஓரளவுதான் உண்மையுள்ளது. மேலும், ஒவ்வொரு லீற்றர் பெற்றோல் மற்றும் டீசல் வழங்கவும் பாரிய நஷ்டத்தை எதிர்கொண்டே மக்களுக்கு அதனை விநியோகிப்பதாகவும் கூறுகின்றது. இது அப்பட்டமான பொய்.
கச்சா எண்ணெயை வெளிநாட்டிலிருந்து கொண்டுவந்து அதனை சுத்திகரித்து கொலன்னாவை உள்ளிட்ட எண்ணெய்க்

குதங்களிலிருந்து அவற்றை பெற்றோல் நிலையங்களுக்கு விநியோகிப்பதற்கு அரசாங்கத்திற்கு குறைந்த செலவே ஏற்படுகின்றது. அதாவது ஒக்டோன் 92 வகைப் பெற்றோலுக்கு லீற்றர் ஒன்றுக்கு அரசாங்கத்திற்கு 72 ரூபா மட்டுமே செலவாகின்றது. ஆனால் அரசாங்கம் தற்போது அதன் விலையை 137 ரூபாவாக்கியுள்ளது.

இதில் அரசு ஒரு லீற்றர் மூலம் 65 ரூபா வரி அறவிடுகின்றது. அதேபோன்றே சகல எரிபொருட்களுக்கும் அரசு தேவையானளவுக்கு வரியை அறவிடுகின்றது. தனது பாரிய அமைச்சரவை செலவு மற்றும் தனது அரசில் இடம்பெறும் கோடிக்கணக்கான மோசடிகளை ஈடு செய்வதற்காகவே அரசு இவ்வாறு வரிகளை அறவிட்டு மக்களின் தலையில் சுமையை ஏற்றுகின்றது என்பதே பிமல் ரட்ணாயக்கவின் குற்றச்சாட்டு.

ஆனால் அரசு இதற்கு வேறு விதமாக விளக்கமளிக்கின்றது. அதாவது, 2014 மகிந்த ஆட்சிக் காலத்தில் ஒக்டோன் 92 ரகப் பெற்றோல் 157 ரூபாவாக இருந்தது அதனை நாம் 20 ரூபாவால் குறைத்து 137 ரூபாவாக்கினோம். ஒக்டோன் 95 ரகப் பெற்றோல் 158 ரூபாவாக இருந்தது அதனை 10 ரூபாவால் குறைத்து 148 ரூபாவாக்கினோம்.

ஓட்டோ டீசல் 111 ரூபாவாக இருந்தது அதனை 95 ரூபாவாக்கினோம். சுப்பர் டீசல் விலை 133 ரூபாவாக இருந்தது அதனை 110 ரூபாவாக்கினோம். மண்ணெண்ணெய் 106 ரூபாவாக இருந்தது அதனை 44 ரூபாவாக்கினோம். தற்போது 3 வருடங்களின் பின்னரே விலையை அதிகரித்துள்ளோம். இந்த விலை அதிகரிப்புக் கூட மகிந்த ஆட்சிக் காலத்தின் விலையைவிட பெரிதாக இல்லை எனக் கூறுகின்றது.

அரசின் இந்தக் கூற்று ஓரளவுக்கு ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதாக இருந்தாலும், இந்த எரிபொருட்களின் விலை அதிகரிப்பை சாட்டாக வைத்துக் கொண்டு தனியார் வர்த்தகர்ளும், தனியார் போக்குவரத்துத் துறையினரும், போட்டி போட்டுக் கொண்டு பஸ் கட்டணங்களையும், அத்தியாவசியப் பொருட்களின் விலைகளையும் அதிகரிப்பது பாரிய அநீதியாகவுள்ளது.

இந்த எரிபொருள் விலை அதிகரிப்பின் பெறுபேறாக தனியார் பஸ் கட்டணங்கள் 12.5 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி ஆட்டோவின் ஆரம்பக் கட்டணம் 50 ரூபாவிலிருந்து 60 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சோற்றுப் பார்சல் ஒன்று 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இடியப்பம் ஒன்று கூட ஒரு ரூபாவால் விலை அதிகரிக்கப்பட்டுள்ளன. இவை மட்டுமன்றி சகல பொருட்களும் உணவு வகைகளும் விலை அதிகரிக்கப்பட்டுவருகின்றன. அதுபோன்று ஏற்கனவே பால்மா, எரிவாயு போன்ற விலைகளும் அதிகரிக்கப்பட்டுவிட்டன.

எரிபொருட்களின் விலை அதிகரிப்பிற்கு ஏற்பவே ஏனைய பொருட்களின் விலைகள், பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்படுகின்றனவா என்பதே இங்குள்ள பிரச்சினை. பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பில் அகில இலங்கை தனியார் பஸ் நிறுவனங்களின் சம்மேளனம் கூறுகையில் அரசின் இந்த எரிபொருள் விலை அதிகரிப்பினால் நாளந்தம் குறுந்தூர பஸ் சேவைகளுக்கு 1,200 ரூபாவும், தூர சேவை பஸ்களுக்கு 2,200 ரூபாவும் நஷ்டமேற்படுகின்றது என்கிறது.

இது தொடர்பில் சாதாரண கணக்கொன்றை பார்ப்போம்.

கொழும்பிலிருந்து மொரட்டுவவரை ஒரு பஸ் சேவையிலீடுபடுகின்றது என்று வைத்துக்கொள்வோம். அந்த பஸ் ஒருநாளைக்கு கொழும்பிலிருந்து மொரட்டுவைக்கு 5 தடவைகளும், மொரட்டுவையிலிருந்து கொழும்பிற்கு 5 தடவைகளும் சேவையிலீடுபட்டால், ஆகக் குறைந்தது அந்த பஸ்ஸில் 1500 முதல் 2000 பயணிகள் வரை ஏறி இறங்குவார்கள்.

தற்போது, பஸ் அடிப்படைக் கட்டணம் 10 ரூபாவிலிருந்து 12 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால் இந்த சேவையிலீடுபடும் பஸ்ஸுக்கு ஒருநாளைக்கு 3000 முதல் 4000 ரூபாவரை மேலதிகமாக கிடைக்கவுள்ளது. ஆனால், அகில இலங்கை தனியார் பஸ் நிறுவனங்களின் சம்மேளனத்தின் கருத்துப்படி ஒருநாளைக்கு 1200 ரூபாவே நஷ்டம் ஏற்படுகிறது.

அப்படியானால் இந்த எரிபொருள் விலையேற்றத்தைப் பயன்படுத்தி ஒரு பஸ் மட்டுமே 1800 ரூபா முதல் 2800 ரூபாவரை மேலதிகமாக இலாபமீட்டுகின்றது. ஒரு பஸ்ஸுக்கே இவ்வளவு இலாபமென்றால் ஒருநாளைக்கு எத்தனை பஸ்கள் இவ்வாறு சேவையிலீடுபடும்? அவர்களின் இலாபத்தையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் கொழும்பு மொரட்டு பஸ் சேவையில் மட்டும் ஒருநாளைக்கு பல இலட்சம் ரூபா மக்களிடமிருந்து எரிபொருள் செலவு அதிகரிப்பு என்ற பெயரில் சூறையாடப்படுகின்றது.
தூர சேவை பஸ்களுக்கு 2200 ரூபா நஷ்டம் ஏற்படுவதாக அந்த சம்மேளனம் கூறுகிறது.

இதற்கும் ஒரு கணக்குப் பார்ப்போம்.

உதாரணமாக கொழும்பு யாழ்ப்பாணம் சேவையிலீடுபடும் பஸ்ஸொன்றில் ஒரு பயணிக்கு எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு முன்னர் 1300 ரூபா அறவிடப்பட்டது. தற்போது 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 1400 ரூபா அறவிடப்படுகின்றது. இவ்வாறு சேவையிலீடுபடும் அதிசொகுசு பஸ்ஸொன்றில் 45 முதல் 49 ஆசனங்கள் வரையுள்ளன.

இந்த 100 ரூபா அதிகரிப்பின் மூலம் 4,500 ரூபா முதல் 4,900 ரூபா வரை கூடுதலாக அறவிடப்படுகின்றது. இதில் எரிபொருள் அதிகரிப்பினால் ஏற்படும் 2200 ரூபா நஷ்டத்தைக் கழித்தால் 2300 ரூபாமுதல் 2700 ரூபா வரை மேலதிக இலாபத்தை இந்த பஸ்கள் பெற்றுக்கொள்கின்றன.

இவர்கள் எரிபொருள் செலவு, வாகன உதிரிப்பாகங்களின் செலவு எனக் காரணங்கள் காட்டலாம். ஆனால், அவற்றிற்கான செலவுகளையும் விட அதிகளவையே சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இவர்கள் இலாபமாக ஈட்டிக் கொள்கின்றனர். இதேபோன்றே ஏனைய தனியார் வர்த்தகர்களும் தவித்த முயலடிக்கும் வகையில் தமது செலவுகளுக்கு மேலதிகமாக பெருமளவு பணத்தை இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மக்களிடமிருந்தே சூறையாடுகின்றனர்.

எரிபொருள் விலை அதிகரித்து விட்டதால் பொருட்களின் விலைகளை அதிகரிக்க வேண்டியுள்ளது. வாகன போக்குவரத்துக் கட்டணங்களை அதிகரிக்க வேண்டியுள்ளது எனக் கூறும் இவர்கள் கடந்த மகிந்த ஆட்சியிலிருந்த எரிபொருட்களின் விலை மைத்திரியின் ஆட்சியில் பெருமளவு குறைக்கப்பட்ட போதும், பொருட்களின் விலைகளையும் போக்குவரத்துக் கட்டணங்களையும் அதற்கேற்ற வகையில் குறைத்தார்களா? அந்த நேர்மை , மனிதாபிமானம் இவர்களிடம் இருந்ததா? எரிபொருட்களின் விலை அதிகரித்தால் அதை சாட்டாக வைத்து சகல பொருட்களின் விலைகளையும் அதிகரிக்கும் இவர்கள் எரிபொருட்களின் விலை குறைவடைந்தால் அதைப்பற்றி எதுவுமே அறியாதவர்கள் போல் நடந்து கொள்வார்கள்.

ஆகவே, எரிபொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தினால் பாதிப்புக்கள் ஒருபோதும் அரசுக்கோ அல்லது தனியார் போக்குவரத்து துறையினருக்கோ, வர்த்தகர்களுக்கோ ஏற்படுவதில்லை. அவர்கள் அந்த அதிகரிப்புக்கும் மேலாக மக்களிடமிருந்து கறந்துவிடுவார்கள்.

முற்று முழுதாக மக்களே பாதிக்கப்படுகின்றார்கள். வறிய மக்களிடமிருந்து இவ்வாறு வரி, விலை அதிகரிப்புகள் மூலம் கசக்கிப் பிழிந்து எடுக்கப்படும் பணம் அரசின் திறைசேரியை மட்டுமல்லாது முதலாளிகளின் பணப் பெட்டியையுமே நிரப்புகிறது.

இந்த விலையேற்றங்களினால், அரச ஊழியர்களை விட தனியார் துறை ஊழியர்களும், வறிய மக்களுமே மிக மோசமாகப் பாதிக்கப்படுகின்றனர். அரச ஊழியர்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு என்ற பட்டியலின் கீழ் குறிப்பிட்டதொரு காலத்திற்கு ஒருமுறை கொடுப்பனவுகள் உயர்த்தப்படும். ஆனால் இன்று பெருமளவானோர் தனியார் துறைகளிலேயே பணிபுரிபவர்களாக உள்ளனர்.

பொருட்களின் விலையேற்றத்திற்கு ஏற்ற வகையில் அவர்களின் சம்பளங்களும் உயர்த்தப்படும் அல்லது ஏதாவது விசேட கொடுப்பனவுகள் கொடுக்கப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அதேபோன்றே கூலித் தொழில் செய்பவர்களும் வறியவர்களும் தமது வருமானத்தை உயர்த்துவதற்கு வழியில்லாது திண்டாடுகின்றனர்.

பொருட்களின் விலை உயர்வை சமாளிக்க மக்கள் தமது மாதாந்த செலவுகளை கட்டுப்படுத்துவதற்கு தேவையானால் ஆடம்பர செலவுகளை தவிர்த்துவிடலாம், ஆனால் அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதை தவிர்க்க முடியாது. சமையல் எரிவாயு வாங்குவதையோ, பெற்றோல் டீசல்கள் கொள்வனவு செய்வதையோ அல்லது அன்றாட ஜீவனோபாயத்துக்கு தேவையான பொருட்கள் வாங்குவதையோ தவிர்க்க முடியாது.

ஆனால் இவ்வாறான பொருட்களுக்கே விலைகள் உயர்த்தப் படுவதால் மக்களால் எதுவும் செய்ய முடியாத ஒரு பரிதாப நிலையேற்படுகின்றது.

அரசு தனது தேவையற்ற செலவுகள், தவறான நிதி மற்றும் பொருளாதாரக் கொள்கைகள், ஏற்றுமதி இறக்குமதிக் கொள்கைகள் மட்டுமன்றி ஊழல் மோசடிகளிலும் ஈடுபடுவதாலேயே அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை அதிகரிக்க வேண்டியேற்படுகின்றது.

உதாரணமாக மக்களின் அத்தியாவசியப் பொருட்களுக்கான விலைகளை அதிகரித்துள்ள அரசு மதுபான வகைகளுக்கான வரிகளை குறைத்துள்ளது. இதன்மூலமும் மக்களை அதிகம் குடிக்க வைத்து வருமானத்தைப் பெறுவதே அரசின் நோக்கமாகவுள்ளது. தனது திறைசேரியை நிரப்ப ஒருபக்கம் மக்களிடம் வரிகள் மூலம் பகல் கொள்ளையடிக்கும் அரசு மறுபுறம் தனது பாரிய அமைச்சரவை மூலம் பல கோடிக்கணக்கான ரூபாக்களை அநியாயமாக செலவிடுகின்றது.

அதற்கு உதாரணமாக விவசாய அமைச்சுக்கு பெற்றுக் கொள்ளப்பட்ட ஒரு கட்டிடம் ஒன்று கடந்த 3 வருடகாலமாக பாவிக்கப்படாத நிலையில் அந்த கட்டிடத்திற்கு 3 வருட வாடகையாக 90 கோடியே 65 இலட்சம் ரூபா வழங்கியதைக் குறிப்பிட முடியும்.

அதேபோன்றே, ஊழல் மோசடிகள் மூலமும் அரசியல் வாதிகள் அமைச்சர்கள் தமது வருமானத்தை பெருக்கிக் கொள்கின்றனர்.
இந்த அரசின் இவ்வாறான செயலுக்கு எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட அன்றைய தினம் இடம்பெற்ற ஒரு மோசடியையும் உதாரணமாக கூறமுடியும். கடந்த 10 ஆம் திகதி நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டது.

இது தொடர்பாக எரிபொருள் களஞ்சிய சாலைகளுக்கு அரசினால் அறிவித்தல் கொடுக்கப்பட்ட நேரத்திலிருந்து அன்றைய தினம் நள்ளிரவு விலை அமுலுக்குவரும் வரையிலான காலப்பகுதியில் புதிய விநியோகம் மற்றும் அதற்கான விநியோக கேள்விகளை தற்காலிகமாக நிறுத்துமாறு கூறப்பட்டிருந்தது.

எனினும் அன்றைய தினம் பெற்றோலிய கூட்டுத்தாபன களஞ்சியசாலைகளான கொலன்னாவை மற்றும் முத்துராஜவல களஞ்சியசாலைகளிலிருந்து 74 எரிபொருள் கொள்கலன்கள் எரிபொருளை நிரப்பி எரிபொருள் நிலையங்களுக்கு விநியோகித்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது. கொலன்னாவை களஞ்சியசாலையிலிருந்து 55 எரிபொருள் கொள்கலன்களும், முத்துராஜவலவிலிருந்து 22 எரிபொருள் கொள்கலன்களும் இவ்வாறு கொண்டு செல்லப்பட்டதன் மூலம் அரசுக்கு ஒரு கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதனை பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்கமும் உறுதிப்படுத்தியுள்ளார்.
எரிபொருட்கள் விலை நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவிருந்த நிலையில் சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் பாரிய தொகையளவு எரிபொருள் கேள்வியை விடுத்திருந்தன எனத் தெரிவிக்கும் அமைச்சர் அர்ஜுன ஒருவாரமாக எரிபொருள் நிரப்பாமல் இருந்த சில எரிபொருள் நிலையங்கள் அன்றைய தினம் பெருமளவு எரிபொருளை நிரப்பியுள்ளதுடன், ஏற்கனவே பணம் செலுத்திய சில எரிபொருள் நிலையங்கள் எரிபொருளை பெறாத நிலையில் அன்றைய தினம் பதிவு செய்தவர்கள் எரிபொருளை பெற்றுள்ளனர் எனவும் இதுதொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இம் மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவித்தார்.

இவ்வாறு ஊழல் மோசடிகளால் ஊறித் திழைத்துள்ள அரசாங்கம் தனது வருமானத்தைப் பெருக்க அப்பாவி மக்களின் அடிவயிற்றில் அடிக்கின்றது என்றால் அரசுக்கு சளைத்தர்கள் நாங்களல்ல என போட்டிபோட்டுக் கொண்டு தனியார் போக்குவரத்து துறையினரும், தனியார் வர்த்தகர்களும் இந்த அப்பாவி மக்களிடமிருந்து பணத்தைப் பிடுங்கி தமது வயிற்றை வளர்க்கப் பார்க்கின்றனர்.

ஆனால் பாவப்பட்ட மக்கள்தான் தமது வருமானத்தைப் பெருக்க முடியாது அதற்கான வழிவகைகளும் இல்லாது விழிபிதுங்கி நிற்கின்றனர்.

எரிபொருள் விலைச் சூத்திரம் என்ற முறையில் அரசு தந்திரமாக மக்களிடமிருந்து காசைப் பிடுங்க அந்த சூத்திரத்தையே சூதாட்டமாக்கி தனியார் போக்குவரத்துத் துறையினரும் தனியார் வர்த்தகர்களும் தமது வருமானத்தைப் பெருக்க மக்கள் மட்டுமே அரசையும் தனியார் போக்குவரத்துத்துறையினர், தனியார் வர்த்தகர்களையும் நஷ்டங்களிலிருந்து பாதுகாக்கும் கேடயமாகவுள்ளனர்.

(Visited 38 times, 1 visits today)