ரொஷான் நாகலிங்கம்

ஆழ்கடல் மற்றும் எல்லை தாண்டிய மீன்பிடிச் சட்ட மீறல்கள் இன்றுவரையில் மத்திய அரசின் சட்ட நடைமுறையில் தான் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியதாக இருக்கிறது என்று தெரிவித்த வடமாகாண மீன்பிடித்துறை அமைச்சர் கந்தையா சிவநேசன்; மேற்படி பிரச்சினைக்கு ஒருங்கிணைந்த செயற்பாடுகள் மூலம் தான் நடைமுறையில் தீர்வுகளைக் காண முடியும் என்றும், மாகாண நியதிச் சட்டங்கள் அங்கீகாரத்தினைப் பெற்றதன் பின்பு சில விடயங்களை மாகாண நிர்வாகம் கையாள முடியும் எனவும் தெரிவித்தார்.

தினக்குரலுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கேள்வி: வடமாகாண மீன்பிடி மீனவர்கள் பிரச்சினைகளுக்கு மாகாண அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன?
மீன்பிடி நியதிசட்டம் தயாரிப்பு பணிகள் எந்த அளவில் உள்ளது?

பதில்: மாகாண மட்டத்தில் மீன்பிடி அமைச்சு செயற்பாடுகளை விஸ்தரிப்பதற்கு ஏற்றவகையில் வடக்கு மாகாண மீன்பிடி பிரிவு ஆரம்பிக்கும் செயற்பாடுகள் இறுதிகட்டத்தில் உள்ளது. மாகாண மீன்பிடி நியதிச்சட்ட வரைபு தற்போது மாகாண நியதிசட்டகுழுவின் கையில் உள்ளது. தொழில்நுட்ப ரீதியான விடயங்கள் முடிவுறுத்தப்பட்டதின் பின்பு மாகாணசபையில் வெகுவிரைவில் அங்கீகரிக்க முன்வைக்கப்படும்.

மாகாண மீன்பிடி விரிவாக்க செயலணி வெகுவிரைவில் நியமிக்கப்படும். இதன்மூலம் மாவட்ட ரீதியான நிர்வாக அலகு ஆரம்பிக்கப்படும். மாகாண பொதுசேவைகள் ஆணைக்குழு இவற்றிற்கான ஆளணிகளை நியமிக்க வெகுவிரைவில் நியமனங்களைக் கோரவுள்ளது.

இதுவரையில் மத்திய ஊழியர்களின் உதவியுடன்தான் மாகாண மீன்பிடியலகு தனது செயற்பாடுகளை கொண்டு நடத்தியுள்ளது. வடக்கு மாகாண மீன்பிடி பிரிவு ஆரம்பிக்கபட்ட பின்னர் மாகாண உத்தியோகத்தர்களும் இந்த சேவையில் இணைவார்கள். இதுவரையில் நன்னீர் மீன்பிடியினை மேம்படுத்த, விசேட பயிற்சிகள், மீன்குஞ்சு விநியோகம், சமூக மேம்பாட்டு வசதிகளை ஏற்படுத்தல், வர்த்தக நோக்கிலான மீன்வளர்ப்பு முறைகளை ஏற்படுத்தல், ஏற்றுமதி சந்தைவாய்ப்புகளை தொடர்புபடுத்தல் மற்றும் மத்திய அரசின் சேவைகளும் வளங்களும் அடிமட்ட நன்னீர் மீனவ சமூகங்களுக்கு கிடைப்பதினை உறுதிசெய்தல் என்பன முக்கிய செயற்பாடுகளாக உள்ளன.

கேள்வி: வடக்கு மீன்பிடி கொள்கையினை அமைச்சு மேற்கொள்ளுமா?

பதில்: மாகாண பொதுக்கொள்கையினை உருவாக்குவதிற்காக, துறைசார்ந்த அறிவியலாளர்களின் சேவைகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. வெகுவிரைவில் மாகாணத்திற்கான கொள்கை வரைபு ஒன்றினை முன்வைக்கவுள்ளோம். இதன்மூலம் அபிவிருத்தி மற்றும் நிர்வாக செயற்பாடுகள் ஒருங்கிணைக்கப்பட்ட பாதையில் செல்ல நெறிப்படுத்தப்படும். நவீன உலகவளர்ச்சிக்கு ஏற்ற வகையில் எமது தொழில்களை மேம்படுத்த இந்த வழிகாட்டல் கொள்கையும் தத்துவங்களும் வரப்பிரசாதமாக அமையும் என்பது எனது நம்பிக்கையாகும்.

கேள்வி: இழுவைப்படகினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சட்ட நடவடிக்கைகள் எடுக்காமல் அமுல்படுத்தாமல் இழுத்தடிப்பது தொடர்பில் என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளவுள்ளீர்கள்?

பதில்: ஆழ்கடல், மற்றும் எல்லை தாண்டிய மீன்பிடி சட்ட மீறல்கள் இன்றுவரையில் மத்திய அரசின் சட்ட நடைபடி முறைமையில்தான், தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டியது, தற்போதைய நிலமையாகும். இந்த ஒருங்கிணைந்த செயற்பாடுகள் மூலம்தான் நடைமுறையில் தீர்வுகளை காணமுடியும். மாகாண நியதிசட்டங்கள் அங்கீகாரத்தினை பெற்றதின் பின்பு சிலவிடயங்களை மாகாண நிர்வாகம் கையாளமுடியும். தற்போதுள்ள சட்டங்களை அமுல்படுத்தும் தார்மீக கடமையானது மத்திய அரசின் நிர்வாகபொறிமுறைக்கு மட்டுமே உரித்தானதாகும். இதனை செயற்படுத்துவதற்குரிய மட்டங்களில் எமது அழுத்தத்தினையும், அதன் தேவைப்பாடுகளையும் தெளிவுறுத்திக் கொண்டிருக்கின்றோம்.

கேள்வி: வடக்கில் காடு அழிப்பு, பறவை விலங்கு சரணாலயம், மகாவலி அபிவிருத்தி, வெளிநாட்டவர்க்கு காணி வழங்கல் குறித்து தங்கள் நிலைப்பாடு என்ன?

பதில்: முப்பது வருடங்களுக்கு மேற்பட்டதான யுத்த சூழலில் இருந்து மக்கள் மட்டுமில்லாமல் நிலங்களும் தமது விடுதலையினை பெற்றுக் கொண்டிருக்கின்றது. குடியிருந்தவர்கள் இடம்பெயர்ந்ததினால் ஏற்பட்ட விளைவுதான், எமது பழமையான கிராமங்கள் காடுபத்திப்போவது. இதனை வனத்திணைக்களம் தமக்கு மட்டுமான முன்னிலைப் படுத்தலாகவோ, வசதியாகவோ அல்லது விசேட உரிமையாகவோ எடுக்க முடியாது. ஏற்கனவே யுத்தத்திற்கு முன்னர் அடையாளம் காணப்பட்ட வனப்பகுதிகள் வனங்களாக பராமரிப்பதில் எவருக்கும் முரண்பாடுகள் எழவில்லை. மாறாக பழமையான குடியிருந்த நிலங்களை வனப்பகுதிக்கு என கைக்கொள்வது என்பது ஒரு ஆக்கிரமிப்பாகவே கருதவேண்டியுள்ளது.

இதேபோன்றதொரு நிலைமைதான் மாகாவலி விஸ்தரிப்பு திட்டத்திலும் உள்ளது. நீரே வடக்கிற்கு வராத மகாவலிக்காக, நிலங்கள் கையகப்படுத்துவதும், இனப்பரம்பல் பண்புகளை மாற்றி அமைக்கும் நோக்கில் காணிகளுக்கும் விஸ்தரிப்பு திட்டங்களுக்கும் பயனாளிகளை தெரிவு செய்வதும், தேசிய நல்லிணக்கத்திற்கு மிகவும் குந்தகமானது.
பறவைகள் மற்றும் விலங்குகள் சரணாலயம் என்பது இயற்கைக்கு மிகவும் முக்கியமானதுதான் அத்துடன் இது சர்வதேச மட்டத்தில் நற்பெயரையும் ஏற்படுத்தும், ஆனாலும் மக்களின் வாழ்விடங்களையும், தொழில் ஆதாரங்களையும் சீர்குலைத்து அல்லது பறித்து இவற்றினை அமைப்பதாக கூறுவது நாகரிகமடைந்த எந்தவொரு சமூகமும் செய்யக் கூடாதது… செய்யவும் முடியாதது. இவ்வாறு நாகரிகமற்றவர்களாக நடப்பதும் தேசிய நல்லிணக்கத்திற்கு மிகவும் குந்தகமானது.

இதேபோன்று சர்வதேச முதலீட்டாளர்கள் மற்றும் பெரிய அளவிலான தொழில் முயற்சியாளர்கள் மாகாணத்தில் நிலங்கள், கடல்பிரதேசங்கள் போன்ற வளங்களை நீண்டகால குத்தகைக்கு கோரும்போது மாகாண காணி ஆணையாளர் மற்றும் மாகாணத்தின் பிரதிநிதிகளை உட்பட்டதான குழுவுடன் கலந்தாலோசித்து பொதுநிலையில் திட்டங்கள் செயற்படுத்தும் போது இவையெல்லாம் தேசிய நலன்களைப் பேணுவதுடன், உற்பத்தித் திறனையும் மேம்படுத்தும். இதுவும் தேசிய நல்லிணக்கத்திற்கான சிறந்த நடபடிமுறையாகும் என்பதும் எனது கருத்தாகும்.

தேசிய கொள்கை மற்றும் தேசிய தேவைகள் போன்றவற்றிற்கு, பிராந்திய மற்றும் மாகாண அரசுகளுடன் கலந்து பேசி இணக்கப்பாட்டுடன் வனம், சரணாலயம் போன்ற திட்டங்களை செயற்படுத்தும் போது தேசிய நல்லிணக்கத்திற்கு மாறாக அமையாது என்பதுடன், மேற்படி திட்டங்கள் வினைத்திறனாகவும், தேசிய உற்பத்தி மற்றும் விளைவுகளில் உச்சப்புள்ளியினை அடையவும் முடியும். வெளிப்படைத் தன்மை மற்றும் தகவலறியும் உரிமைகள் என்பனவும் அடிப்படை உரிமைகளாக உள்ள நிலைமைகளில் இவ்வாறானதொரு மாற்றங்கள்தான் நிர்வாக செயற்பாடுகளை மேம்படுத்தும்.

(Visited 66 times, 1 visits today)