கணபதி சர்வானந்தா

கிந்த சிந்தனை மரணித்துப் போகவில்லை. அது மீண்டும் உயிர்பெற்று எழும் என்ற சைகைகளைக் கடந்த காலங்களில் நடைபெற்ற பல சம்பவங்கள் எமக்கு உணர்த்தியிருக்கின்றன. அதனால்தானோ என்னவோ அரச அதிகார மட்டங்களில் அவர் பற்றிய எதிர்ப்பலைகள் மிகவும் பலமற்றதாகவே காணப்படுகின்றது. ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பதவியில் இருந்து கொண்டு அரசாங்கத்திற்குச் சவாலாகப் பல விடயங்களை முன்னிறுத்துவதென்பதை நாம் சாதாரணமானதாக எடைபோட்டுவிட முடியாது.

பல விடயங்களில் அவர் தொடர்பானவர்கள் பலரைக் குற்றவாளியாகக் கண்டபோதும் அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் அரசு எடுப்பதற்குத் தயங்குகிறது. ஏனெனில், மஹிந்தா மீண்டும் ஆட்சிக்கு வரலாம் என்ற எதிர்பார்ப்பே அதற்குக் காரணம் எனலாம்.

கடந்தவாரம் கொழும்பு அதி நவீன சொகுசு வாய்ந்த சங்கீர்லா ஹோட்டலில் நடைபெற்ற விஜயத்மஹா மன்றம் எனும் மக்கள் சந்திப்பு இதை மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது. கடந்த காலங்களில் மிகவும் சர்ச்சைக்குரியதாகப் பேசப்பட்டதோடு மட்டுமல்லாது, சைனா தேசத்தோடு தொடர்புடையது எனவும் சங்கீர்லா ஹோட்டல் கருதப்படுகிறது. அதன் நிர்மாணத்திற்காக அரச காணியை வழங்கியதோடு அதற்குரிய அனுமதியையும் கொடுத்தவர் மகிந்த ராஜபக்ஷ. அதன் திறப்பு விழாவில் கலந்து கொண்ட மகிந்தவுக்கு ஜனாதிபதி மைத்திரிக்குக் கொடுக்கப்படாத வரவேற்பு அளிக்கப்பட்டு, அதன் முகாமையாளர் மகிந்த ராஜபக்ஷவை, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ என விழித்துச் செங்கம்பள வரவேற்பும் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விஜயத்மஹா மன்றத்தின் தலைமைப் பொறுப்பை, கடந்த அரசாங்கத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும், எதிர்வரும் 2019 ஜனாதிபதித் தேர்தலில் ஒரு போட்டியாளராகக் களமிறக்கப்படுவார் என பரவலாக எதிர்பார்க்கப்படும் கோத்தாபய ராஜபக்ஷ ஏற்றிருக்கின்றார். அந்த மக்கள் மன்றத்தில் உயர் தொழில் சார் நிபுணர்கள், உயர் நிலை வர்த்தகர்கள் இராஜதந்திரிகள், மதகுருமார்கள் மற்றும் அரசியல்வாதிகள் என ஏறத்தாழ 2000 பேர்வரை கலந்து கொண்டிருக்கிறார்கள். அங்கே அவர்களுக்கு அன்பான உபசரிப்பும் நடைபெற்றிருக்கிறது.

2030 இல் புலமையாளர்களால் ஈர்க்கப்படுகின்ற இலங்கை என்றதே அந்த மன்றத்திற்குரிய கருப்பொருள். அதாவது எல்லா நிலைகளையும் அறிவியலால் உயர்த்துவது. இலங்கையில் அறிவினூடாக ஒரு பொருளாதார மறுமலர்ச்சியைக் காண்பது. அதற்குரிய புலமையாளர்களை உருவாக்குவது அல்லது இனங்காணுவது என்று கூடச் சொல்லலாம். அந்த மன்றத்திலே அறிவையும், ஆற்றலையும் பற்றிப் பேசியிருக்கிறார்கள். ஐக்கியத்தைப் பற்றிப் பேசி இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அரசியலைப் பேசவே இல்லை.

எனவே இதுவும் ஒரு புதுவித அரசியல் எனலாம். ஐக்கிய இலங்கையினூடாக ஒரு புதிய பொருளாதாரக் கொள்கை அல்லது ஒரு புதிய பொருளாதார மறுமலர்ச்சி என்பதை இலக்குவைத்து அந்த விஜயத்மஹா மன்றம் செயற்படும் என்று கோத்தாபய உறுதிபடக் கூறி இருக்கிறார். சிங்கள தேசியத்தையும், சிங்கள ஒருமைப்பாட்டையும், பௌத்தத்திற்கு முதன்மையையும் வலியுறுத்துபவர்கள் என முன்னர் இனங் காணப்பட்ட பலர் இந்தக் கூட்டத்திற்குச் சமூகமளித்திருந்தனர். எனவே, அந்த மன்றத்தில் ஐக்கிய இலங்கையினூடாக ஒரு பொருளாதார மறுமலர்ச்சி என்று கோத்தாபய குறிப்பிட்ட விடயம் சாத்தியமா? என்ற கேள்வியும் இங்கே எழாமலில்லை.

தொலை நோக்குப் பார்வையில் இலங்கை 2030 என்ற விடயமும் இங்கே தொடப்பட்டிருந்தது. அதாவது 2030 ஆண்டளவில் இலங்கை எப்படி இருக்க வேண்டும் என்று தான் காணுகின்ற கனவைப் பற்றி கோத்தாபய ராஜபக்ஷ மனம் திறந்து பேசினார். அந்த மன்றத்தினூடாக அதைச் செயற் படுத்தப் போவதாகவும் சூழுரைத்திருக்கிறார். கனவைக் காண்கின்ற அந்தக் கனவானின் பிரசன்னம் அரசியலில் இல்லாது அந்தக் கனவு முழுமைபெறாது. எனவே அந்த அரசியல் அரியணையை எட்ட இந்த விஜயத்மஹா மன்றம் ஒரு கருவியா இருக்கப் போகிறது என அரசியல் அவதானிகள் சுட்டிக் காட்டுகின்றனர். அடுத்துவரும் தேர்தலை இலக்குவைத்து ராஜபக்ஷ குழுமம், அரசியலைப் பேசாத அரசியல் எனும் ஒரு புதிய உத்தியைக் கையாளத் தொடங்கி இருப்பதாக அவர்கள் கருதுகின்றனர்.

இந்த அறிவுச் சங்கமத்தில் மதிநுட்பம் மிக்க செயற்பாடுகளையும் அதில் புலமையாளர்களின் பங்களிப்பு பற்றியும் அதிகம் பேசப்பட்டிருக்கிறது. மதி நுட்பம் மற்றும் தொழில் நுட்பம் சார்ந்து இயங்கக் கூடிய விரைவான பொருளாதார வளர்ச்சி கொண்ட சமூகத்தை நிலைநிறுத்துவது, சரியானதொரு கொள்கையை வகுப்பதை வற்புறுத்தவது மட்டும் போதாது. அதனை விரைவாக நடைமுறைப் படுத்தக் கூடிய திறமையாளர்களை இனங்காணுவது அல்லது உருவாக்குவது, ஆரோக்கியமற்ற பொருளாதார வளர்ச்சியை சட்ட ஒழுங்குடன் சிறந்த தரத்திற்கு உயர்த்துவது, சமூகமயப்படுத்தப்பட்ட திறந்த சந்தைப் பொருளாதார கொள்கையினூடாக ஒரு பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்துவது. உள்ளூர் மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களை ஊக்குவிப்பது, இலங்கையின் கலாசார, பண்பாட்டு விழுமியங்களை மதிக்கக்கூடியவர்கள் எனக் கருதும் சர்வதேச வியாபாரப் பங்காளர்களையும் முதலீட்டாளர்களையும் ஊக்குவிப்பது, பொருளாதார வளர்ச்சிக்குத் தடைக்கல்லாக இருக்கின்ற அரசு சார்ந்த துறைகளில் காணப்படும் ஊழலை ஒழிப்பது, தேசிய ஒருமைப்பாடு மற்றும் நாட்டை நேசித்தல் என்ற விடயங்களை வலியுறுத்துவது, அதாவது இலங்கையிலுள்ள ஒட்டுமொத்த சமூகத்தை இன, மத, மொழி என்ற பாகுபாடுகளுக்கு அப்பால் ஒரு ஒருமைப்பாடுடைய தளத்திற்கு நகர்த்துவது என்ற அடிப்படை அம்சங்களை வலியுறுத்தியே அங்கு வந்திருந்த வளவாளர்கள் பேசினர்.

இந்த விஜயத்மஹா மன்றத்தின் வளவாளர்களாக வித்யா ஜோதி கலாநிதி பந்துல விஜேரத்ன, கலாநிதி நாலக கொடஹேவ, 99 எக்ஸ நிறுவுனர் மனோ சேகரம் இரெண்டா ஜினிகே, பேராசிரியர் றோஹான் குணரத்ன மூத்த விரிவுரையாளர் கலாநிதி முகமட் இஸ்மத் றம்ஷி ஆகியோர் பொருளாதாரத்தைப் பற்றி வெவ்வேறான தலைப்பில் தமது உரையை அமைத்துக் கொண்டனர். இவர்கள் அனைத்தும் ஒரு புதிய பொருளாதாரக் கொள்கையை நோக்கி இலங்கையை நகர்த்த வேண்டிய தேவை பற்றி வலியுறுத்துவதாக அமைந்திருந்தது. இந்தக் கூட்டத்தில் ராஜபக்ஷ குடும்பத்தினருடன், தினேஸ் குணவர்த்தன, பிரபல வர்த்தகர்களான ஹரி ஜெயவர்த்தன, மெரில் பொனான்டோ ஆகியோரும் கலந்து கொண்டனர்.
ஒரு நாட்டின் பொருளாதாரம் என்பது வெறுமனே கொள்கைகளாலும், திட்டங்களாலும், உற்பத்திகளாலும், முதலீடுகளாலும் மற்றும் ஏற்றுமதிகளாலும் கட்டி எழுப்பப்படுவதல்ல. பொருளாதாரம் என்பது தகுதிவாய்ந்த பன்முக ஆழுமைகளைக் கொண்டவர்களால் நிர்மாணிக்கப்பட வேண்டியதொன்று என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும், அவர் சகோதரரான முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோத்தாபய ராஜபக்ஷவும் அம் மன்றத்திலே தெரிவித்திருக்கின்றனர்.

ஒரு ஆரோக்கியமான சமூகம் நாம் என்பதற்குரிய அடையாளம் என்னவாக இருக்கலாம்? என்ற கேள்வியையும் அம் மன்றத்திலே எழுப்பி, சோசலிச ஜனநாயகத்தை சுவாசிக்கின்றவர்களாக மக்கள் இருக்க வேண்டும். தரமான சட்டங்களால் அவர்கள் ஆழப்பட வேண்டும். மக்களால் ஏற்கத்தக்க நீதித்துறை அவர்களுக்கு நீதி வழங்க வேண்டும். அபாயமற்ற மற்றும் உத்தரவாத முடைய பாதுகாப்புச் சூழலில் அமைந்த வாழ்க்கைமுறையில் அவர்கள் வாழவேண்டும். அத்துடன் அவர்கள் வாழ்க்கைக்கேற்ற சூழலும் அதனை உறுதிப்படுத்தக் கூடியதான பாதுகாப்பு அமைப்பும் அவர்களுக்கு வழங்கவேண்டும். இவை அனைத்தும் ஒருங்கிணையப் பெற்றால் மாத்திரமே எமது சமூகத்தை நாம் ஒரு ஆரோக்கியமான சமூகம் எனலாம் என்று அந்தக் கேள்விக்குரிய பதிலையும் தந்திருக்கிறார் கோத்தாபய ராஜபக்ஷ.

முடிவுரையில் கோத்தாபய பேசும்போது;

எமது நாட்டின் தேசியத்தை வலுப்படுத்தச் சரியான தருணமிது.நாட்டிலுள்ள எல்லா சமூகத்தவர்கள் நலனும் தனித்தனியாக கவனத்திற்குட்படுத்தப்படுகின்ற அதேவேளை இன, மத, மொழி என்ற வேறுபாடுகளைக் கடந்தவர்களாக ஒரு குடையின் கீழ் நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு, எமது கரங்களிலேயே இலங்கையின் எதிர்காலம் தங்கியிருக்கிறது என்ற உணர்வோடு பயணிக்க வேண்டிய பொறுப்பு எங்கள் அனைவருக்கும் உண்டு என்று வலியுறுத்தினார்.

நல்ல எண்ணங்களை அடிப்படையாகக் கொண்டு இது போன்ற செயற்திட்டங்கள் முன்னெடுக்கப் படுமானால் அது ஒரு ஆரோக்கியமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றது எனது கருத்து. இந்த விஜயத்மஹா மன்றம் புலமைசார் இலங்கையைப் பற்றியே அதிகம் பேசி இருக்கிறது. அரசியல் பேசாத அரசியல்வாதிகளின் கூட்டாகக் கூட இதைப்பார்க்கலாம். முக்கியமாக அந்த மன்றத்திலே கலந்து கொண்டவர்களின் பின்னணிபற்றியும் கடந்தகால செயற்பாடுகள் பற்றியும் தெரிந்து கொண்டால் விஜயத்மஹா மன்றத்தில் பேசப்பட்ட விடயம் எந்த அளவிற்கு ஒரு பரந்துபட்ட ஐக்கிய இலங்கையை சாத்தியப்படுத்தும் என்ற விளக்கத்தை இலகுவில் பெற்றுவிடலாம். அறிவால் அறிவைப் பெருக்கி அறிவு ரீதியாக நாட்டை நகர்த்துவதென்பது ஒரு ஆரோக்கியமான விடயம். எதிலும் அரசியல் கலப்பில்லாது பார்த்துக் கொள்வோம். அதுவே ஆரோக்கியமான ஐக்கிய இலங்கையை நிலைநிறுத்தும்.

(Visited 139 times, 1 visits today)