டாக்டர் ராம்குமார்

பதின்ம பருவத்தில் ஆணுக்குப் பெண் மேலும் பெண்ணுக்கு ஆண் மேலும் ஈர்ப்பு வருவதன் இரகசியம் உடலுக்குள் ஏற்படும் இரசாயன மாற்றங்களின் அறிவியல் பற்றிப் பார்ப்போம்.

ஆண்களைப் பொறுத்தவரை 9 வயதில் இருந்து 14 வயதுக்குள் பருவமடைதல் நிகழ்கிறது. 9 வயதுக்கு முன்பே பருவமடைதலுக்கான மாற்றங்கள் ஆணுடலில் ஏற்படுகிறது என்றால் அது பிரச்சினைதான்.

அது Pre matured நிலையாகப் பார்க்கப்படுகிறது. 14 வயதுக்கு மேல் முதிர்ச்சிக்கான மாற்றங்கள் ஆணுடலில் ஏற்படாவிட்டால் அவர்களுக்கு ஏதோ ஓமோன் பிரச்சினை இருக்கிறது என்று புரிந்துகொள்ளலாம்.

ஆண் குழந்தைகளுக்கு 9 வயதுக்கு முன்பே முதிர்ச்சிக்கான மாற்றங்கள் தென்படுகிறதென்றால் கண்டிப்பாகக் கவனிக்க வேண்டும். ஓமோன் சிகிச்சை மூலம் குறிப்பிட்ட வயது வரை முதிர்ச்சியை தள்ளிப் போடலாம்.

இதனால் பாதிப்பு எதுவும் இல்லை. சிறு வயதில் முதிர்ச்சிக்கான மாற்றங்கள் உடலில் உருவானால் அது தன் வயது குழந்தைகளிலிருந்து விலகியிருக்கச் செய்யும். இது ஒருவித மன உளைச்சலையும் ஏற்படுத்தும்.

இதைத் தவிர்க்க ஓமோனைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் உதவும். முதிர்ச்சிக்கான வயதில் அவற்றை நிறுத்தி விட்டால் வழக்கமான மாற்றங்கள் உடலில் ஏற்பட்டு முதிர்ச்சி அடைவார்கள். 14 வயதுக்கு மேலும் முதிர்ச்சிக்கான மாற்றங்கள் அவர்கள் உடலில் ஏற்படாத பட்சத்தில் அவர்களும் ஓமோன் மருத்துவரை அணுகி தீர்வு காணலாம்.

முதிர்ச்சி சமயத்தில் ஆண் குழந்தைகளின் குரலில் மாற்றம் ஏற்படும். தோள்கள் விரிவடையும். உடல் வலிமை அடைவதோடு, வேகமான வளர்ச்சியும் காணப்படும். உடலில் இருந்து வெளியேறும் வியர்வை வாசனையில் மாற்றம் ஏற்படும்.

உடலில் முடி வளர்ச்சி மற்றும் ஆணுறுப்பும் வளர்ச்சி அடையும். ஆண் முதிர்ச்சி அடையும்போது விந்து வெளியேற்றம் மூலம் அவர்கள் புரிந்துகொள்ளலாம். டெஸ்டோஸ்டீரான் ஓமோன் இன்னும் பல மாயங்களை அவர்களுக்குள் நிகழ்த்தும்.

பெண்களுக்கு 8 வயதில் இருந்து 13 வயதுக்குள் பருவமடைதல் நடக்கிறது. 8 வயதில் இருந்து பருவமடைதலுக்கான மாற்றங்களை அவர்கள் சந்திக்கின்றனர். பெண் குழந்தைகளுக்கும் குறிப்பிட்ட வயதுக்கு முன்னர் முதிர்ச்சிக்கான மாற்றங்கள் உடலில் காணப்படும்போது கவனிக்க வேண்டும். இன்றைய உணவுமுறை மற்றும் கூடுதல் எடை காரணமாக இது போன்ற பிரச்சினைகளை சந்திக்கின்றனர்.

மிகக் குறைந்த வயதில் மாதவிடாய் மற்றும் உடல் வளர்ச்சிகளும் தொந்தரவாக அமையும். அந்த வயதில் தனது மாதவிடாய் சிரமங்களைக் கடப்பதும் கடினம் ஆகும். முன்கூட்டியே முதிர்ச்சிக்கான மாற்றங்கள் இருப்பின் தொடக்கத்திலேயே ஓமோனுக்கான மருந்துகள் மூலம் தள்ளிப் போடலாம். அதேபோல் பெண்கள் 14 வயதுக்கு மேலும் முதிர்ச்சிக்கான மாற்றங்கள் இன்றி இருந்தால் உடனடியாக ஓமோன் மருத்துவரை அணுகி தீர்வு பெறலாம்.

பருவமடையும் பெண்ணின் உடலில் ஈஸ்ட்ரோஜென், புரோஜெஸ்ட்ரான் ஆகிய இரண்டு ஓமோன்களும் இணைந்து உடல், மனம் இரண்டிலும் மாயங்களை நிகழ்த்துகின்றன. பெண்களுக்குள் குறைந்தளவு டெஸ்டோஸ்டீரான் ஓமோன் இருக்கும்.
அதிக உடல் எடை காரணமாக பி.சி.ஓ.டி பிரச்சினைகள் இந்தப் பருமடையும் காலத்திலும் வரலாம். புரோஜெஸ்ட்ரான், ஈஸ்ட்ரோஜென் ஓமோன் 15 நாட்களுக்கு மாற்றி மாற்றி ஆதிக்கம் செலுத்தும். இதன் அடிப்படையிலேயே மாதவிடாய் நாட்கள் தீர்மானிக்கப்படுகிறது.

தைரோய்ட் ஓமோன் மாற்றங்களும் பெண்களின் முதிர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. தைரோய்ட் ஓமோனில் பிரச்சினை உள்ள பெண்கள் பருவமடையத் தாமதம் ஆகலாம். இது குறித்து கவலைப்படத் தேவையில்லை. உரிய ஓமோன் சிகிச்சைகள் எடுத்துக் கொள்வதன் மூலம் இதற்கும் தீர்வு காண முடியும்.

அதாவது, ஓமோன்களின் செயல்பாடு வயதுக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும். இந்த ஓமோன் மாற்றங்கள்தான் ஆண் பெண் உடலில் மூளையில் தோன்றும் எண்ணங்களுக்கும் காரணமாகிறது.

ஓமோன் மாற்றங்கள், பருவமடைதல் என்பதெல்லாம் இனப்பெருக்கத்துக்கான தகுதியை உடல் அடைவதே என்று புரிந்துகொள்ளலாம். இந்தத் தகுதியை அடைந்த உடல் தனக்கான இணையைத் தேடும் இயல்பான தேவையே உயிர் ஈர்ப்பு விசையாக இயங்கி அன்பு சார்ந்த குழப்பங்களை உருவாக்குகிறது.

எதிர்ப்பாலின் மீதான விருப்பங்கள் மாறுகிறது. நட்பு காதலாக பரிணாமம் அடைவது இந்த நிலையில்தான். ஆணுக்கு பெண்மீதும் பெண்ணுக்கு ஆண் மீதும் ஈர்ப்பு ஏற்படுவது உயிரியற்கை.

இதற்கெல்லாம் நம்மை நாம் குற்றவாளிகளாகப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. அப்படி உங்கள் மனதுக்குள் ஆவல் தோன்றினால் சிரித்து விடுங்கள். அடடா நாம் சரியான வயதில் சரியான வளர்ச்சியை எட்டி விட்டோம் என்று மகிழுங்கள்.

(Visited 191 times, 1 visits today)