டாக்டர் ச. முருகானந்தம்

இளநீர் தாகசாந்திக்கு மாத்திரமன்றி உடலின் ஆரோக்கியத்திற்கும் உகந்த பானம் என்பதை அறிவீர்கள். இந்த வெயில் காலத்தில் இளநீர் அருந்தும் போது அகோரம் குறைந்து உடலில் புத்துணர்ச்சி தோன்றுவதை உணர்ந்திருப்பீர்கள். பகல் நேர வேலைக் களைப்பிற்கும் இளநீர் சிறந்தது.

இதனால் தான் மனிதன் ஆரோக்கியமாக வாழ இயற்கை அளித்த வரப்பிரசாதங்களில் ஒன்று எனக் கருதப்படுகின்றது. இதை சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் பருகலாம். தினமும் ஓர் இளநீர் பருகி வந்தால் உடல் ஆரோக்கியம் பேணப்படும்.

இளநீரில் உள்ள சத்துகள்

ஒருவருக்குத் தேவையான விட்டமின்கள், தாதுப் பொருட்கள் அடங்கிய நுண்போசனைகள் இளநீரில் அடங்கியுள்ளன. முக்கிய சத்துகளாக விட்டமின் சி, புரதம், அமினோ அமிலங்கள், கல்சியம், பொற்றாசியம், கரோட்டிணைட்கஸ் உள்ளிட்ட எலக்ரலைட்ஸ் பொலினோல், குளுக்கோஸ் என்பன கலந்த திரவமாகக் கிடைக்கிறது.

முன்னர் இளநீர் அருந்தும் வழக்கம் பரவலாக இருந்தது. போத்தலில் அடைத்த பானங்கள் அறிமுகமாகி விளம்பரப்படுத்தப்பட்ட பின்னர் பலரும் அவற்றையே நாடுகின்றனர்.

இளநீர் இயற்கையாகவே குளிர்மையாக உள்ளது. போத்தலில் அடைத்துவரும் பானங்களைப் போல குளிரூட்ட வேண்டியதில்லை. செயற்கையான பழரசங்கள் மற்றும் குளிர்பானங்களை விட இயற்கையிலேயே கிடைக்கும் இளநீரில் நிறைவான சத்துகள் இருப்பதுடன், உடலுக்குத் தீங்கான, அடிமைப்படுத்தக் கூடிய இரசாயனங்கள் , நிறமூட்டிகள் என்பன கலக்கப்பட்டிருப்பதில்லை.

இளநீரில் இயற்கையாகவே உடலை சுத்திகரிக்கக் கூடிய பொருட்கள் உள்ளன. இதனால் உடற் கழிவுகளை அகற்றுவதிலும் சலத்தொற்று ஏற்படுவதை தடுப்பதிலும் பங்காற்றுகிறது. சிறுநீரக கற்கள் தோன்றாமல் பாதுகாப்பதுடன், கல் தோன்றியவர்களில் அதை அகற்றுவதிலும் பயன்படுகிறது.

இளநீரைப் பருகி வருவதனால் உடலுக்குக் கிடைக்கும் நன்மைகள் பல. பல்வேறு தொற்று நோய்களையும் பரவா நோய்களையும் இது தடுக்கின்றது.

இளநீரால் கிடைக்கும் நன்மைகள்

இது சிறந்த பானமும் ஊட்டமுள்ள ஆகாரமும் ஆகும். உடலிலுள்ள கழிவுப் பொருட்களை சுத்திகரிக்கிறது. சிறுநீரக கற்கள், தொற்று ஏற்படுவதைத் தடுக்கின்றது, இளநீரிலுள்ள கனியங்கள் இரத்த அழுத்தத்தை சீராக பேணுகின்றன. இதய சம்பந்தமான பிரச்சினைகளை குறைக்கின்றது, எலக்ரலைட்டுகளை பராமரித்து உடலின் க.ஏ ஐ பேணுகிறது.

இளநீரிலுள்ள ஒமேகா 6 கொழுப்பு அமிலம் நோயெதிர்வு சக்தியை அதிகரிக்கிறது. இளமையையும் புத்துணர்ச்சியையும் பேணுகின்றது. இதில் நார்ச்சத்தும் இருப்பதால் சமிபாட்டை இலகுவாக்குகிறது. இதனால் கொழுப்பு, சீனி சத்துக்கள் உறிஞ்சப்படுவதை கட்டுப்படுத்துகிறது, இளநீர் சமிபாட்டுத் தொகுதியின் ஆரோக்கியத்தை பேணுகிறது, கர்ப்பிணிப் பெண்களுக்கு இளநீர் சிறந்த பானமாகும்.

இதில் மிதமான ஊட்டச்சத்துகள், நுண் போசனைகள் இருப்பதால் தாய்க்கும் கருவிலுள்ள சேய்க்கும் ஊட்டமளிக்கின்றது. நோய்வாய்ப்பட்டிருப்பவர்களுக்கு இளநீர் சிறந்த மாற்று ஆகாரமாகும்.

நீரிழிவு நோயாளர்கள் இளநீர் பருகலாமா?

நீண்டகாலமாக நீரிழிவு நோயாளர்கள் இளநீரைப் பருகக்கூடாது என்ற நிலைப்பாடு இருந்து வந்ததை அறிவீர்கள். ஆனால், அண்மைய ஆய்வுகள் நீரிழிவு நோயாளர்களும் மட்டுப்படுத்திய அளவில் இளநீரைப் பருகலாம் என்று தெரிவிக்கின்றன. இன்னொருபடி மேலாக குருதிக் குளுக்கோஸின் அளவை சீராக பேணுவதற்கும் இளநீர் ஏற்றதொரு பானம் என மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இளநீரில் ஒப்பீட்டளவில் குளுக்கோஸ் குறைந்த அளவிலேயே இருக்கின்றது. அத்துடன், நார்ப்பொருளும் இருப்பதனால் இளநீர் பருகுவது நீரிழிவு நோயாளர்களுக்கு தீங்களிக்காது. குறிப்பாக நீரிழிவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவர்கள் ஒரு கிளாஸ் இளநீர் அருந்தலாம். குருதிக் குளுக்கோஸின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்காமல் இருப்பவர்கள் இளநீரை தவிர்க்கலாம். மற்றும்படி இளநீர் நீரிழிவு நோயாளருக்கும் உகந்த பானம் தான்.

(Visited 221 times, 1 visits today)