தமிழ்மணி மானாமக்கீன்

ஒரு ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் அடிக்கடி ஒலித்து ரகிக்க வைத்த ஒரு மலையாளப் பாடல்:
‘கடலினக்கரை போனோரே காணா பொன்னினைப் போனோரே போய் வரும் போல் எந்து கொண்டு வரும் பதினாலாம் ராவிலே…’. பெருங் கவிஞர் வயலார் எழுதிய பாடல். மே 03ஆம் திகதி இந்தியத் தேசிய திரைப் பட விழாவில் பின்னணிப் பாடகருக்கான தேசிய விருது பெற்ற கே. ஜே. ஜேசுதாஸ் பாட வட இந்திய சலீல் சவுத்ரீ இசையமைத்தது. படம் ‘செம் மீன்’ (இரால்)

மீன் பிடிக்கக் கடலுக்குப் பவுர்ணமி இரவில் செல்லும் மீனவர் கோஷ்டியை
நோக்கி ஒரு பாட்டுக்காரன் கடற்கரையிலிருந்து பாடும் பாடல் அது. ”மது” என்ற நடிகர் பாடி நம்மைச் சொக்க வைப்பார். இன்றைக்குக் கேட்பவர்களும் சொக்கிப் போவார்கள்! படமும் அப்படிப்பட்டது தான்!

பழைய சங்கதி ஒன்றை இரைமீட்டக் காரணம், அன்று அரை நூற்றாண்டுக்கு முந்தியே தமிழ்த் திரைப்படங்களிலிருந்து வேறுபட்டுப் போய் ஒரு தனிமுத்திரை பதித்துக் கொண்ட கேரள கரை யோரத்துத் திரைத்துறையினர் இந்த 2017 2018களில் கூட வேறுபட்டு நின்று கொண்டிருக்கிற அதிசயத்தைச் சுருக்கமாகச் சொல்லவே!

2018.மே.03ல் டெல்லியில் நிகழ்ந்த 65 ஆம் திரைப்பட தேசிய விருது விழாவில்,சிறந்த இந்திய நெறியாளருக்கான விருதினை ‘ பாய நகம்’ மலையாளப் பட இயக்குநர் ஜெயராஜ் பெற, சிறந்த கேரளப் பிராந்தியப் படமாக ‘தொண்டி முதலும் தீர்க் சாட்சியும் அடைய முன் குறித்தது போல் கே.ஜே.ஜேசுதாசுக்கு பின்னணிப் பாடகருக்கான தேசிய விருது கிடைக்க
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டிருக்கிற நடிகர் பஹத்பாஸில் துணை நடிகருக்கான விருதுபெற கேரளத்திரையுலகம் கொடிகட்டிப் பறக்கிறது

இந்தப்பின்னணியில் அதன் தற்போதைய வளர்ச்சியை சற்று ஆய்வுக்குள்ளாக் கினால் ஒர் அதிசய சங்கதியை அறிய முடிகிறது.

”அறிமுக இயக்குனர்கள்” என்போர் விருதுகளைத் தாங்களும் பெற்று தன் படத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கும் கௌரவம் பெற வழி அமைத்துள்ளது தனித்துவமான தகவல்.

இதற்கு 2017ஆம் ஆண்டுக்கான கேரள அரசின் திரைப்பட விருது விழா விருதுகள் நல்ல எடுத்துக்காட்டு.

டேக் ஒஃப் என்ற படம் இளம் இயக்குநர் மகேஷ் நாராயணனை சிறந்த அறிமுக இயக்குநர் விருது பெறச் செய்துள்ளது.

ஒட்டமுறி வெளிச்சம் இளம் இயக்குநர் ரிஜி நாயருக்கு ‘சிறந்த படம் அளித்தவர், என்ற பட்டத்தைப் பெற வடிகால் வெட்டியுள்ளது.

இவர்களைப் போல இன்னொரு இளம் இயக்குநரான வி.சி அபிலாஷ் ஆலொருக்கம் படத்தை இயக்கி 300க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் திகழ்ந்த இந்திரன்ஸ் என்ற அறுபது வயதுக்காரருக்கு சிறந்த நடிகர் விருது பெற ஏணியாக ஆகிவிட்டார்.

இவர்கள் மூவரும் வெவ்வேறு ஆளுமைகளைக் கொண்டிருந்தவர்கள்.டேக் ஆப் மகேஷ் நாராயணன் ஆரம்பத்தில் பட எடிட்டர். ஒட்டமுறி வெளிச்சம், ரிஜி நாயர் குறும்படங்களையும் ஆவணப் படங்களையும் இயக்கிக் கொண்டிருந்தவர் பெரிய திரையில் இது முதல் படம். அபிலாஷோ, தன் சினிமா அறிவு கொண்டு நேரிடையாகவே களம் இறங்கியவர்.

இவர்களில் முன்னைய இருவரும் தாங்கள் கௌரவங்கள் அடைந்ததுடன் , தங்கள் படங்களில் சம்பந்தப்பட்ட சிலருக்கும் கௌரவங்கள் பெறச் செய்துள்ளனர்

டேக் ஆக் மகேஷ் சிறந்த அறிமுக இயக்குநர் என்பதுடன், நடிகை (பார்வதி மேனன்) சிறந்த கலை இயக்குநர் (விருதை சந்தோஷ்ராமன்) சிறந்த பின்னணி இசை (விருதை கோபி சந்தர்) மூன்றையும் தன் படத்திற்குச் சொந்த மாக்கியுள்ளார்.

ஒட்டமுறி வெளிச்சம், ரிஜி நாயர் சிறந்த படம் வழங்கியவர் என்ற கௌரவத்துடன் சிறந்த நடிகைக்காக தேர்வாளர்கள் (ஜுரிகள்) விசேட விருது (வினிதா கோஷி) சிறந்த குணச்சித்திர நடிகை (பாலி வில்சன்) சிறந்த படத் தொகுப்பு (அப்பு பட்டாத்திரி) என தன் சகாக்களுக்குப் பெற்றுக் கொடுத்துள்ளார்.

ஏற்கெனவே திறமை மிகுந்த இளம் இயக்குநர்களால் நிரம்பி இருக்கும் மலையாள சினிமா உலகம் தற்போது வெற்றிகளை வாரிக்குவித்துள்ள அறிமுக இயக்குநர்களின் வருகையால் மேலும் புத்துணர்ச்சியைப் பெற்றுள்ளது.

இவர்கள் புதுப்புது சிந்தனைகளோடும் புதிய கதைக்களத்தோடும் திரைக்கதையில் வித்தியாசத்தோடும் களத்தில் இறங்குவதால் கதாநாயகர்களாக வலம் வருவோர் குறிப்பாக முன்னணியில் உள்ளோர் அறிமுகமாகும் புதியவர்களின் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார்கள்.

மம்முட்டி என்ற ‘முகம்மது குட்டி’ மலையாள சுப்பர் ஸ்டார். இவர் கையில் ஐந்து படங்கள். இதில் இரண்டை அறிமுக இயக்குநர்களே இயக்குகிறார்கள். ஷரத் சந்தித் ஒருவர், ஷாஜிபகுர் மற்றவர்.மற்றொரு உச்ச நடிகரான மோகன்லாலும் தன் பங்குக்கு அறிமுக இயக்குநர் ஒருவரை அணுகி இருக்கிறார். அவர் நடிக்கும் மூன்றில் ஒன்று வி.ஏ.ஸ்ரீ குமார் மேனன் என்ற புதியவரால் இயக்கம்.

பிருத்விராஜ் என்ற முன்னணிக் கதாநாயகரும், ரணம் என்ற தன் படத்தை கதாசிரியர் இணை இயக்குநராக இருந்த நிர்மல் சகா தேவ் என்பவருக்குக் கொடுத்திருக்கிறார். மேலும் இரு படங்களை ரோஷிணி தினகர் எஸ் மகேஷ் இயக்கவுள்ளனர்.

இவர்களைப் போலவே முன்னணி நடிகர்களான திலீப், ஜெய்ராம் ,பிஜு மேனன் முதலானோர் படங்கள் ரதிஷ் அம்பாட் ரமேஷ் பிசரோடி பிரமோத் மோகன் ஆகிய புதியவர்களால் இயக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. தமிழ்ப்படத்துறையிலும் இந்தப் போக்கு மிக மெதுவாக எட்டிப்பார்ப்பது போல் தோன்றுகிறது. நிலைமையை இன்னும் சற்றுப் பொறுத்து கள ஆய்வு
செய்து பதிவிடலாம்.

(Visited 39 times, 1 visits today)