இறுதிப்போரில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான தகவல்களை அரசாங்கம் வெளியிட வேண்டும் என்று சர்வதேச மன்னிப்பு சபை கோரியுள்ளது.

போர் முடிவடைந்து 9 வருடங்களாகியுள்ள நிலையில், படையினரிடம் சரணடைந்தவர்களின் பட்டியலை அரசாங்கம் வெளியிட வேண்டும். நூற்றுக்கும் அதிகமான விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் படையினரிடம் சரணடைந்தனர் என காணாமல் போனோரின் உறவினர்கள் வழங்கியுள்ள தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அவர்கள் அனைவரும் காணாமல் போயுள்ளனர் என மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

தற்போது காணாமல் போனதாக கூறப்படும் அவர்களுக்கு அன்று தலைமை தாங்கி சென்ற வணக்கத்துக்குரிய தந்தை பிரான்ஸிஸ் ஜோசப்பும் உள்ளடங்குவதாக மன்னிப்பு சபை குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறான நிலையில், போரினால் பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதன் மூலமே அவர்களின் மனக்காயங்களுக்கு நீதியை பெற்றுத்தரமுடியும் என்றும் மன்னிப்புசபை தெரிவித்துள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு காணாமல் போனோரின் உறவினர்கள் விடுத்தக்கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, இது தொடர்பில் தேசிய பாதுகாப்பு சபைக்கு தாம் உத்தரவிடுவதாக தெரிவித்திருந்தார் என்பதையும், சர்வதேச மன்னிப்புசபை சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 20 times, 1 visits today)