மக்கள் விடுதலை முன்னணி ஜே.வி.பி நாட்டின் நியாயம் மற்றும் சமூக
நீதிக்காக போராடும் அரசியல் கட்சி எனவும் தாம் விடுதலைப் புலிகளை போன்று நாட்டை பிரிக்கவும் நாட்டை அழிக்கும் செயற்பாடுகளிலும் ஈடுபடவில்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் அமைப்பும் மக்கள் விடுதலை முன்னணியும் பயங்கரவாத அமைப்புகள் என நேற்று முன்தினம் புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியிருந்தமை தொடர்பில் பதிலளிக்கும் போதே விஜித ஹேரத் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து ஊடகங்களுக்கு அவர் மேலும் கூறுகையில்;

“பிரா” என்ற பெயரில் இலங்கையில் இயங்கிய கொடிய ஆயுதக் குழுவிற்கு தலைமை தாங்கிய ராஜித சேனாரத்ன போன்றோர் இப்படி பேசுவது கேலிக்குரியது. மக்கள் விடுதலை முன்னணி அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக நாட்டில் அரசியலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி கட்சியை தடை செய்தார்.

எனினும் தொடர்ந்தும் மக்கள் விடுதலை முன்னணி அரசியலில் ஈடுபட்டது. இதனை தடுத்து நிறுத்த அன்றைய அரசாங்கம் பல்வேறு ஆயுதக் குழுக்களை உருவாக்கி மக்கள் விடுதலை முன்னணியை அடக்க முயற்சித்தது.

போர் முறைகளை பயன்படுத்தி மக்கள் விடுதலை முன்னணியை கட்டுப்படுத்த ஜே.ஆர். ஆட்சிக்காலத்தில் இயங்கிய குழுவே பிரா அமைப்பு. இந்த அமைப்பின் தலைவராக ராஜித சேனாரத்னவே செயற்பட்டார்.
இவர்கள் நாட்டின் இளைஞர்களை ஆங்காங்கே கொலை செய்தனர். இதற்கான பொறுப்பை ராஜித சேனாரத்ன ஏற்க வேண்டுமெனவும் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்

(Visited 42 times, 1 visits today)