தம்புள்ள பிரதேசத்தில் நேற்று முன்தினம் புதன் இரவு பெய்த கடும் மழை காரணமாக நிகவடவன பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள், வீடுகள், முஸ்லிம் ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் நிகவடவன முஸ்ஸிம் வித்தியாலயம் என்பவற்றுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் பிரதேசவாசிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர்.

நிகவடவன முஸ்லிம் பள்ளிவாசலுக்குள் வெள்ள நீர் புகுந்ததைத் தொடர்ந்து வணக்க வழிபாடுகளை மேற்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர் நோக்க நேர்ந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இப்பிரதேசத்தில் 22 வீடுகள், 6 வர்த்தக நிலையங்கள் என்பவற்றுக்குள்ளும் நீர் புகுந்ததால், பலர் அயல் வீடுகள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் தஞ்சம் புகுந்தனர்.

மழையுடனான காலநிலை தொடர்ந்தும் நீடிக்குமாயின், முஸ்லிம் மக்களின் நோன்புக் கடமைகளுக்கு அது பலத்த இடையூறாக அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை,வெள்ளம் பெருக்கெடுத்ததால் ஏ9 வீதியும் உள் வீதிகள் பலவும் நீரில் மூழ்கியதால் வீடுகள், வர்த்தக நிலையங்கள் என 40 இற்கும் மேற்பட்டவை நீரில் மூழ்கியுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

தம்புள்ள நகரில் சுற்றுலா ஹோட்டல் ஒன்றின் பிரதான நுழைவாயில் வளாகம் மற்றும் தனியார் வாகனத் தரிப்பிடம் என்பன நீரில் முற்றாக மூழ்கியதுடன் சீகிரிய, பளூட்டாவ பிரதேசத்தில மதகு ஒன்று உடைப் பெடுத்து வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. தம்புள்ள எத்தாபெந்திவௌ பிரதேசத்தில் மின்னல் தாக்கத்தினால் வீடொன்று எரிந்து சேதமாகியிருப்பதாகவும் அனர்த்த மத்திய நிலையம் தெரிவித்தது.

இதேவேளை நேற்று முன்தினம் மாலையில் 114 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியிருக்கும் நிலையில், கண்டலம நீர்த்தேக்கம் நிரம்பி வழிகின்றமை குறிப்பிடத்தக்கது.

(Visited 30 times, 1 visits today)