ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்களில் 30 இற்கும் மேற்பட்டோர் அரசாங்கத்தில் இருந்து வெளியேறவுள்ளதாகவும் எங்களுடன் இணைந்துகொண்டு பயணிக்க வருமாறு அவர்களுக்கு அழைப்பு விடுப்பதாகவும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து பேசிய அவர் தற்போதைய அரசு 2015 ஆம் ஆண்டு பொறுப்பேற்ற போது மக்களுக்கு முக்கிய உறுதிமொழிகளை வழங்கியி ருந்தது. ஆனால் தற்போது அந்த வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யாக்கப் பட்டு மக்களை ஏமாற்றியுள்ளது.

அதேபோல பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையின் போது ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்களுக்கு முக்கிய வாக்குறுதிகளை வழங்கினார். இதன்படி ஆட்சி மறுசீரமைப்பை தங்களுக்கேற்ப மேற்கொண்டு பின்வரிசை உறுப்பினர்களை ஏமாற்றியுள்ளார்.

தற்போது ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பாரிய முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் பின் வரிசை உறுப்பினர்கள் 30 க்கும் மேற்பட்டவர்கள் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியில் அமரவுள்ளதாக ஐ.தே.க. பின்வரிசை எம்.பி.சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார்.

எனவே நாங்கள் உங்களை வரவேற்க தயாராகவுள்ளோம். எங்களுடன் இணைந்து பயணிக்க வருமாறு அழைப்பு விடுக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.

(Visited 57 times, 1 visits today)