அமெரிக்க தேர்தல் 2016; ரஷ்யாவினால் நிதியுதவி செய்யப்பட்ட விளம்பரங்களை கண்டறிந்தது கூகுள்
2017-10-10 11:55:42 | General

2016 ஆம் ஆண்டின் அமெரிக்க அதிபர் தேர்தலின் போக்கை மாற்றும் ஒரு முயற்சியில், ரஷ்ய உளவாளிகள் பல்லாயிரக்கணக்கான டாலர்கள் செலவில் விளம்பரம் செய்ததை கூகுள் கண்டறிந்துள்ளது என ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.


'வாஷிங்டன் போஸ்ட்' நாளிதழால் மேற்கோள் காட்டப்பட்ட வட்டாரங்கள் , இந்த விளம்பரங்கள் கூகுள் நிறுவனத்தின் தளங்களான யூடியூப் மற்றும் மின்னஞ்சல் தளமான ஜீமெயில் உட்பட கூகுள் நிறுவனத்தின் அனைத்து தளங்களிலும், தவறான செய்திகளை பரப்பும் நோக்கத்தில் செய்யப்பட்டவை என்று கூறின.


பேஸ்புக்கில் விளம்பரங்களை வாங்கிய, மாஸ்கோவிற்கு தொடர்புடைய, நிறுவனத்தில் இருந்து இந்த விளம்பரங்கள் வந்ததாக தெரியவில்லை என்று அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.


கூகுளின் அமைப்பை துஷ்பிரயோகம் செய்ய நடத்தப்பட்ட முயற்சிகளை தான் விசாரித்து வருவதாக அந்நிறுவனம் தெரிவிக்கிறது.

இந்த ஆண்டின் துவக்கத்தில், அமெரிக்க அதிபர் தேர்தலை, டொனால்ட் டிரம்பிற்கு சாதகமாக திசை மாற்ற ரஷ்யா முயன்றதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்தது.
இந்தக் குற்றச்சாட்டுகளை ரஷ்யா பலமாக மறுத்திருக்கிறது. அதிபர் டிரம்ப்பும், தனக்கும் ரஷ்யாவிற்கும் எந்த உள்கூட்டும் இல்லை என்றார்.


இந்த விவகாரம், அமெரிக்காவின் நாடாளுமன்றக் குழுக்கள் மற்றும் நீதித்துறையின் விசாரணையில் உள்ளது.

கூகுள் நிறுவனம், ஒரு லட்சம் டாலர்கள் மதிப்பிற்கு குறைவாக செய்யப்பட்ட ஒரு தொகுதி விளம்பரங்கள் பற்றிய விவரங்களை ஆராய்ந்து வருவதாக, இந்த விசாரணைக்கு நெருங்கிய வட்டாரங்கள் கூறின.


" அரசியல் ரீதியாக இலக்கு வைக்கப்பட்ட விளம்பரங்கள் மீது வரம்புகள் விதிப்பது, இனம் மற்றும் மதத்தின் அடிப்படையில் இலக்கு வைக்கப்பட்டு தயாரிக்கப்படும் விளம்பரங்களைத் தடுப்பது போன்ற கடுமையான விளம்பரக் கொள்கைகளை நாங்கள் வைத்திருக்கிறோம்.

எங்கள் அமைப்புகளை துஷ்பிரயோகம் செய்ய எடுக்கப்பட்ட முயற்சிகள் பற்றி ஆழமாக ஆராய்ந்து வருகிறோம். ஆய்வாளர்கள் மற்றும் பிற நிறுவனங்களுடன் இணைந்து இயங்கி, நாங்கள் இப்போது நடந்து வரும் விசாரணைகளுக்கு உதவி செய்வோம்" என்று ஒரு அறிக்கையில் கூகுள் கூறியது.


திங்கட்கிழமை பேசிய மைக்ரோசாப்ட் நிறுவனம், அமெரிக்க அதிபர் தேர்தலுக்காக தனது ' பிங்' தேடும் பொறியிலும் மற்ற தளங்களிலும், ரஷ்யர்களால் ஏதேனும் விளம்பரம் வாங்கப்பட்டுள்ளதா என தானும் விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளது.


அதன் செய்தித் தொடர்பாளர் ஒருவர், தற்போது இதற்கு மேல் எந்த கருத்தும் கூற முடியாது என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.


ரஷியாவால் நிதியுதவி செய்யப்பட்டு, பிரிவினை கருத்துக்களை சமூக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் ஊக்குவிக்க கூடிய பிரசாரங்களை தனது தளத்தில் கண்டறிந்துள்ளதாக, செப்டம்பர் மாதத்தில் பேஸ்புக் தெரிவித்துள்ளது.


இரண்டு ஆண்டு கால கட்டத்தில், ஒரு லட்சம் டாலர்கள் செலவில் 3 ஆயிரம் விளம்பரங்கள், மே 2017 வரை வெளிவந்துள்ளதாக பேஸ்புக் குறிப்பிட்டுள்ளது.


பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பர்க், இந்த தகவல்களை பேஸ்புக், அமெரிக்க விசாரணை அதிகாரிகளிடம் அளிக்கும் என்று பின்பு தெரிவித்திருந்தார்.

TOTAL VIEWS : 164
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
g2hiu
  PLEASE ENTER CAPTA VALUE.