மலேசியாவில் ஜன.6ஆம் திகதி ரஜினி-கமல் சந்திப்பு?
2018-01-02 11:53:46 | General

ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்குவதாக அறிவித்து, அதற்கான ஏற்பாடுகளை தீவிரமாகத் தொடங்கியுள்ள நிலையில், மலேசியாவில் வரும் 6ஆம் திகதி ரஜினிகாந்த்-கமல்ஹாசன் சந்திப்பு நடக்க உள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்குள் தனிக்கட்சி தொடங்கி, 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். ரசிகர்களை ஒருங்கிணைக்கும் வகை யில் நேற்று பிரத்யேக இணையதளத்தையும் தொடங்கியுள்ளார்.

ரஜினியின் அரசியல் வருகைக்கு அரசியல் தலைவர்கள் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்தனர். சமீபகாலமாக அரசியலில் அதிக கவனம் செலுத்தி வந்த நடிகர் கமல்ஹாசன், ரஜினியின் அரசியல் வருகை குறித்து என்ன கூறப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

இந்த நிலையில், ரஜினியின் அரசியல் வருகை வெளியான சிறிது நேரத்தில் கமல் தன் ட்விட்டர் பக்கத்தில், ‘‘சகோதரர் ரஜினியின் சமூக உணர்வுக்கும், அரசியல் வருகைக்கும் வாழ்த்துக்கள்! வருக வருக’’ என்று தெரிவித்தார். இதற்கு ரஜினியும் நன்றி தெரிவித்தார்.

‘தி இந்து’ தமிழ் நாளிதழ் கடந்த செப்டம்பரில் நடத்திய ‘யாதும் தமிழே’ விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட கமலிடம், ‘‘நீங்கள் தனிக்கட்சி ஆரம்பித்து, அதில் ரஜினி இணைந்தால் என்ன பதவி கொடுப்பீர்கள்?’’ என்று ஒரு ரசிகர் கேள்வி எழுப்பினார். அதற்கு கமல், ‘‘ஆண்டிகள் கூடி மடம் கட்டிய கதை.

கற்பனையின் எல்லைக்கே போய்விட்டார். மக்களிடம் இருந்து எனக்கு சமிக்ஞை கிடைக்கட்டும். அவர் வரட்டும் பேசலாம். உங்களோடு இணைபவன் அவருடன் இணைய மாட்டேனா? அவருடன் பேசமாட்டேன் என்று நினைக்கிறீர்களா? இல்லை அவரிடம் பேசுவதை உங்களிடம்தான் சொல்வேன் என்று நினைக்கிறீர்களா?’’ என்று பதில் அளித்தார்.

இருவருமே வெளியே நட்பு பாராட்டினாலும், யார் முதலில் என்ற எண்ணம் உள்ளுக்குள் இருப்பதாக நெருக்கமானவர்கள் கூறுகின்றனர். ‘2.0’ படத்தில் வில்லனாக நடிக்க முதலில் கமலைத்தான் இயக்குநர் ஷங்கர் அணுகினார். அதற்கு வாய்ப்பு இல்லை என்று கமல் விலகிவிட்டார்.

அதேபோல, அரசியலுக்கு வந்தால் தன் நிலை என்ன என்பது குறித்து நெருக்கமான சிலரை வைத்து ரஜினி சர்வே எடுக்குமாறு கூறியுள்ளார். அதில் அவருக்கு சாதகமாகவே முடிவுகள் வந்த நிலையில், திடீரென்று கமல் பரபரவென்று அரசியல் விமர்சனங்கள் உள்ளிட்டவற்றின் மூலம் அரசியலில் முன்னெடுக்கத் தொடங்கினார்.

இந்த நிலையில், யாருக்கு ஆதரவு அதிகம் என்று மீண்டும் சர்வே எடுக்கச் சொல்லியிருக்கிறார் ரஜினி. அதன் முடிவுகள் என்ன என்பது ரஜினிக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே தெரியும் என்கிறார்கள்.

இதற்கிடையில், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நட்சத்திரக் கலைவிழா மலேசியாவில் வரும் 6ம் தேதி பிரம்மாண்டமாக நடக்க உள்ளது. இதில் ரஜினி, கமல் இருவரும் பங்கேற்கின்றனர். ரஜினியின் அரசியல் அறிவிப்புக்குப் பிறகு, முதல் முறையாக இருவரும் சந்தித்துப் பேச உள்ளனர்.

இதற்காக, ‘விஸ்வரூபம் 2’ படப் பணிகளுக்காக அமெரிக்காவில் இருக்கும் கமல், அங்கிருந்து நேரடியாக மலேசியா வருகிறார். கலை நிகழ்ச்சி முடிந்த பிறகு, அங்கிருந்து அமெரிக்கா செல்கிறார்.

தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் போட்டிக் கதாநாயகர்களாக விளங்கிய ரஜினியும், கமலும் அரசியலில் ஒன்றுகூடி பயணிக்கப் போகிறார்களா? தனித்தனி வழியில் பயணம் அமையப் போகிறதா என்பது மலேசிய சந்திப்பில் தெரியவரும்.

TOTAL VIEWS : 147
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
jqmd4
  PLEASE ENTER CAPTA VALUE.