தமிழக மக்களின் கண்ணீருடன் விடை பெற்றார் 'அம்மா'
2016-12-06 18:48:27 | General

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் உடல், சென்னை மெரீனா கடற்கரையில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

கடந்த செப்டம்பர் 22ம் தேதி முதல் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

இந்நிலையில், முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து, உடனடியாக அவர் சிகிச்சை பிரவில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுவதாக கூறப்பட்டது.

இந்நிலையில், நேற்று திங்கட்கிழமை இரவு 11.30 மணியளவில் ஜெயலலிதா இறந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி மஹாலில் வைக்கப்பட்டது.

ஜெயலலிதாவின் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல் காந்தி, ஆந்திர முதல்வர் சந்திராபாபு நாயுடு, ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக், கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா, கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன், பாஜக தலைவர் வெங்கய்யா நாயுடு, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மத்திய பிரதேசம் சவுராஜ் சிங் சவுகான், மஹாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்ட தேசிய தலைவர்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

அதேபோல், தமிழகத்தில் இருந்து தமிழக எதிர்கட்சித் தலைவரும், திமுக பொருளாளருமான முக ஸ்டாலின், கனிமொழி, தேமுதிக தலைவர் விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பொன். ராதாகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஜி ராமகிருஷ்ணன், தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், குஷ்பூ உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

சினிமா துறையினரை சேர்ந்த ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த், சிவக்குமார், கவுண்டமனி, செந்தில், நடிகர் சங்க தலைவர் நாசர், விஷால், சரத்குமார், கார்த்தி, ராதரவி, சத்யராஜ், விஜயகுமார் உள்ளிட்ட பலரும் இறுதி அஞ்சலியில் கலந்து கொண்டனர்.


மேலும், தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான அதிமுக தொண்டர்களும், பொதுமக்களும், பிற கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளும் ஜெயலலிதா உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பிறகு ஜெயலலிதாவின் உடல் தங்க பேழையில் வைக்கப்பட்டு மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். சமாதி அருகே அடக்கம் செய்வதற்கு கொண்டு வரப்பட்டது.

பின்னர் அவருக்கு ராணுவ மரியாதை செலுத்தப்பட்டது. முப்படை வீரர்கள் ஜெயலலிதாவிற்கு இறுதி மரியாதை செலுத்தினர். பின்னர், ’புரட்சித்தலைவி செல்வி ஜெ.ஜெயலலிதா’ என்று பொறிக்கப்பட்ட சந்தன பேழையில் ஜெயலலிதாவின் உடல் வைக்கப்பட்டு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

ஜெயலலிதாவிற்கு அவருடைய தோழி சசிகலா அவர்கள் இறுதிச் சடங்குகளை செய்தார். பின்னர், 12 வீரர்கள் 5 முறை வானத்தை நோக்கி முழங்க சுட்டனர். 60 குண்டுகள் முழங்க அவருக்கு முழு அரசு மரியாதை செலுத்தப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

TOTAL VIEWS : 1844
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
m6kht
  PLEASE ENTER CAPTA VALUE.