இலங்கை கிரிக்கெட் சபையின் உப தலைவர் தர்மதாச விலகுகிறார்
2017-06-27 15:32:11 | General

இலங்கைக் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கிரஹாம் போர்ட் அணியை விட்டு வெளியேறிய நிலையில், கிரிக்கெட் சபையின் உபதலைவர் ஜெயந்த தர்மதாசவும் தமது பதவியை விட்டு விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக சிலோன் ருடே பத்திரிகை மேலும் கூறுகையில்; 


கிரிக்கெட் சபையில் சர்வதேச கிரிக்கெட் தொடர்பான விடயங்களை உப தலைவர் ஜெயந்த தர்மதாசவே கையாள்வதற்கு நியமிக்கப்பட்டுள்ளார். ஆனாலும் இலங்கை அணியின் சர்வதேச விவகாரங்கள் தொடர்பான எந்தவொரு விடயமும் அவருக்குத் தெரியாமல் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அண்மைக்காலமாக அவர் விசனமடைந்திருந்தார். 


இதையடுத்தே தனது பதவியிலிருந்து வெளியேறுவதற்கு அவர் முடிவு செய்துள்ளதாகவும் இதுபற்றி அவர் கிரிக்கெட் சபைக்கு அறிவிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


சம்பியன் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் இலங்கை அணி மிக மோசமான தோல்வியை சந்தித்ததையடுத்து ஜெயந்த தர்மதாச தனது பதவியிலிருந்து விலகுவது தொடர்பாக கிரிக்கெட் சபைக்கு அறிவித்திருந்தபோதும் அது தொடர்பாக கிரிக்கெட் சபை எந்தப் பதிலையும் தெரிவிக்கவில்லை. 


இந்த நிலையில், இலங்கை அணி நாடு திரும்பிய பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலும் இவர் கலந்து கொள்ளவில்லை. மேலும் கடந்த வெள்ளிக்கிழமை இவர் கிரிக்கெட் சபையில் இவரது அறையில் இருந்த சகல உடைமைகளையும் எடுத்துக்கொண்டு சென்றுவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


கிரிக்கெட் சபையின் முன்னாள் தலைவராக இருந்த இவர், இலங்கை கிரிக்கெட்டின் முன்னேற்றத்திற்கு பல்வேறு வழிகளிலும் உழைத்து வந்தார். ஆனால் தற்போதைய கிரிக்கெட் சபையின் நிர்வாகத்தில் அதிருப்தி கொண்டே இவர் தனது பதவியிலிருந்து விலகுவதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

TOTAL VIEWS : 255
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
rxa4t
  PLEASE ENTER CAPTA VALUE.