இலங்கையை வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்தது சிம்பாப்வே
2017-07-11 09:37:30 | General

இலங்கை அணிக்கு எதிராக வரலாற்றில் முதல் தடவையாக சிம்பாப்வே அணி சர்வதேச ஒருநாள் போட்டித் தொடரை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.


அம்பாந்தோட்டை சூரியவௌ மைதானத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற 5 ஆவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் மூன்று விக்கெட்டுக்களினால் வெற்றி பெற்ற சிம்பாப்வே அணி இந்த வரலாற்றுச் சாதனையை அதுவும் இலங்கை மண்ணில் படைத்துள்ளது. 

5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் தலா இரு போட்டிகளில் வெற்றி பெற்ற நிலையில் நேற்றைய தினம் 5 ஆவதும் இறுதியுமான போட்டி பெரும் பரபரப்புக்கு மத்தியில் நடைபெற்றது. 


நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாப்வே அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது. இதையடுத்து துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணிக்கு சிம்பாப்வே பந்து வீச்சாளர்கள் கடும் நெருக்கடியைக் கொடுத்தனர். இதனால் இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்து இறுதியில் 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 203 ஓட்டங்களையே பெற்றது. 


துடுப்பாட்டத்தில் அசேல குணரத்ன  59, தனுஷ்க குணதிலக்க  52 ஆகியோர் அரைச்சதம் அடித்தனர். கப்டன் மத்தியூஸ் 24 ஓட்டங்களையும் சமீர ஆட்டமிழக்காது 18 ஓட்டங்களையும் பெற்றனர். 


பந்துவீச்சில் சிகந்தர் ரஷா  3, கிரீமர்  2 விக்கெட்டுக்களை கைப்பற்றினர். 
இதையடுத்து இலகுவான இலக்கை நோக்கி அதிரடியாக ஆடிய சிம்பாப்வே அணி ஓட்டங்களை வேகமாக குவித்தது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரரான மசகட்ஷா அரைச்சதம் அடித்து 73 ஓட்டங்களையும் மிரே 43 ஓட்டங்களையும் முஸ்கந்த 37 ஓட்டங்களையும் பெற்ற நிலையில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் தனஞ்செய அடுத்தடுத்து 4 விக்கெட்டுக்களை கைப்பற்ற இலங்கை அணிக்கும் ஓரளவு வெற்றி வாய்ப்பு நிலை ஏற்பட்டது. 


எனினும், சிகந்தர் ரஷா சிறப்பாக ஆடி ஆட்டமிழக்காது 27 ஓட்டங்களைப் பெற சிம்பாப்வே அணி 38.1 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 204 ஓட்டங்களைப் பெற்று 3 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று தொடரை 32 என்ற ரீதியில் கைப்பற்றி இலங்கை மண்ணில் வரலாற்று சாதனை படைத்தது. 

TOTAL VIEWS : 306
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
ohg8t
  PLEASE ENTER CAPTA VALUE.