கடும் விரக்தியில் கப்டன் சந்திமல்
2017-11-29 09:36:40 | General

இந்திய அணியுடனான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி படுதோல்வியடைந்தமை தொடர்பாக கடும் ஏமாற்றமடைந்துள்ள இலங்கை அணிக் கப்டன் தினேஷ் சந்திமல், கடும் விரக்தியில் கருத்துகளையும் தெரிவித்துள்ளார்.

அண்மைக் காலமாக இலங்கை அணி பல தோல்விகளைச் சந்தித்து வருகிறது. நாமேன் தோல்வியடைகிறோம் என்பது குறித்து மைதானத்துக்கு வெளியே பயிற்சியின்போதும் ஓய்வறையிலும் நீண்டநேரமாக கலந்தாலோசிக்கிறோம். இலங்கை மண்ணில் இந்திய அணியிடம் 3 0 என டெஸ்ட் தொடரை இழந்தபோது அது குறித்து தீவிரமாக ஆராய்ந்தோம்.

நாம் விட்ட தவறுகள் என்ன? அந்தத் தவறுகளை எப்படித் திருத்திக்கொள்வது? எப்படியெல்லாம் இந்திய அணியுடன் விளையாட வேண்டுமென்றெல்லாம் மைதானத்திற்கு வெளியே பல தடவைகள் ஆராய்ந்து அவற்றைத் திருத்தியமைப்பது தொடர்பாகவும் பல்வேறு திட்டங்களை முன்வைத்ததுடன், அவற்றை அமுல்படுத்துவது குறித்தும் ஆலோசித்திருந்தோம்.

ஆனாலும், கடந்த போட்டியில் அவை எவையும் அமுலாகவில்லை. நாம் சிந்தித்தற்கும் பேசியதற்கும் மாறாகவே எமது ஆட்டம் அமைந்திருந்தது. துடுப்பாட்டமும் பந்து வீச்சும் மிக மோசமாக இருந்தன. களத்தடுப்பு சிறப்பாக இருந்தபோதிலும் மோசமான துடுப்பாட்டத்தாலும், மோசமான பந்து வீச்சாலும் படுதோல்வியைத் தழுவும் நிலை ஏற்பட்டது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று துடுப்பாட்டத்திற்கு மிகவும் சாதகமான ஆடுகளத்தில் முதலில் ஆடி 200 ஓட்டங்களையே பெற்றோம். இது எதற்குமே உதவாது. குறைந்தது 400 ஓட்டங்களையாவது பெற்றிருந்தால்தான் வலுவான இந்திய அணியுடன் ஓரளவு தாக்குப் பிடித்திருக்க முடியும். ஆனால், எமது துடுப்பாட்ட வீரர்களோ வரிசையாக போவதும் வருவதுமாக இருந்தார்களே தவிர, ஒருவர்கூட நிமிர்ந்து நின்று ஆடவில்லை.

எமது திட்டத்திற்கு மாறாகவே எமது செயற்பாடுகள் இருந்தன. இந்திய அணியுடன் சவாலளிக்கக் கூடிய விதத்தில் எம்மால் ஆட முடியவில்லை. மைதானத்திற்கு வெளியே அதிகம் பேசுகிறோம். கடுமையான பயிற்சிகளை எடுக்கின்றோம். ஆனால், விளைவுதான் பூச்சியமாக இருக்கின்றது.

இந்தத் தோல்வியால் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளேன். அடுத்த போட்டியிலாவது வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் அனைத்து வீரர்களும் செயற்பட வேண்டும் எனவும் சந்திமல் தெரிவித்தார்.

 

TOTAL VIEWS : 148
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
i5lcl
  PLEASE ENTER CAPTA VALUE.