இரு யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கொலை கைதான ஐவரின் விளக்கமறியல் 30 வரை நீடிப்பு
2017-05-16 17:46:32 | General

க.ஹம்சனன்


துப்பாக்கிச் சூடு நடத்தி இரு பல்கலைக்கழக மாணவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைதான முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஐவரையும்  எதிர்வரும் 30 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். 
நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கடந்த வருடம் அக்டோபர் மாதம் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் மீது காங்கேசன்துறை வீதி கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கு அண்மையில் வைத்து பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் அவர்கள் உயிரிழந்தனர்.


இச்சம்பவம் தொடர்பில் அச்சந்தர்ப்பத்தில் அவ்விடத்தில் கடமையில் இருந்த யாழ்.பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த 5  பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். அத்துடன் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர் வழங்கிய தகவலுக்கமைய துப்பாக்கி ரவைகளும் அவ்விடத்தி
லிருந்து மீட்கப்பட்டிருந்தன. 


இவ்வாறான நிலையில் குறித்த 5  பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் எதிராக யாழ்.நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருவதுடன், இது தொடர்பான விசாரணையை குற்றப்புலனாய்வுத் திணைக்களம்  மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை (16)  குறித்த வழக்கானது யாழ்.நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது. இதன்போது பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாகியிருந்தார்.

அவர் தனது வாதத்தில் குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸ் திணைக்கள விசாரணை என்ற பெயரில் முல்லைத்தீவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வீண் தலையீடு செய்வதாக மன்றுக்கு எம்மால் தெரியப்படுத்தப்பட்டிருந்தது. இது தொடர்பில் மன்றானது குறித்த பொலிஸ் அதிகாரியை மன்றில் தோன்றி விளக்கமளிக்குமாறும் பணித்திருந்தது. 


எனினும் இதுவரையான காலப்பகுதியில் அவ்வாறு எந்தவிதமான விளக்கத்தையும் குறித்த பொலிஸ் அதிகாரி மன்றுக்கு வழங்கவில்லையே என  வினவியிருந்தார். 
இதனைத் தொடர்ந்து குறித்த விடயம் தொடர்பாக நீதிவான் குறித்த பொலிஸ் அதிகாரியை மன்றில் தோன்றி விளக்கமளிக்குமாறு கூறப்பட்ட கட்டளையின் அத்தாட்சிப் பத்திரத்தை பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்தரணிக்கு வழங்குமாறு உத்தரவிட்டதுடன், இது தொடர்பாக மேலதிக நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்தரணிக்கு அறிவுறுத்தியிருந்தது. 


இதனைத் தொடர்ந்து குறித்த வழக்கு விசாரணையை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை ஒத்திவைத்ததுடன் அதுவரை குறித்த 5  பொலிஸ் உத்தியோகத்தர்களையும் விளக்கமறியலில் வைக்கவும் நீதிவான் உத்தரவிட்டார். 


இதேவேளை குறித்த 5 பொலிஸ் உத்தியோகத்தர்களும் தமக்கு சட்டத்தரணிகளை பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுவதாகக்  கூறி இவ் வழக்கை கொழும்பு நீதிமன்றுக்கு மாற்றுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்திருந்த வழக்கானது இம் மாதம் 29 ஆம் திகதி விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.  இதிலும்  பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆஜராகவுள்ளார். 

 

TOTAL VIEWS : 1446
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
zl9zo
  PLEASE ENTER CAPTA VALUE.