உள்ளூராட்சிசபைத் தேர்தல் ஜனவரியில்
2017-09-20 09:29:20 | General

பா.கிருபாகரன், டிட்டோகுகன்


உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை எதிர்வரும் ஜனவரி மாதத்தில் நடத்தவே உத்தேசிக்கப்பட்டிருப்பதாக நேற்று செவ்வாய்க்கிழமை சபையில்
 தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, டிசம்பர் மாதத்தில் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை நடைபெறவுள்ளதையும் கிறிஸ்துமஸ் பண்டிகை வரவிருப்பதையும் இதற்கான காரணமாக சுட்டிக்காட்டினார். 


பாராளுமன்றத்தில் நேற்று விசேட அறிக்கையொன்றை விடுத்து உரையாற்றும் போதே இந்த விடயங்களை குறிப்பிட்ட பிரதமர் விக்கிரமசிங்க, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அல்லது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அன்றி வேறு கட்சியொன்றின் சார்பில் போட்டியிட்டால் ஜனவரி முடிவில் ஒருவர் கூட கட்சியில் இருக்க மாட்டார்கள் என்று ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரை நோக்கியும் தெரிவித்தார். 


அதுமட்டுமல்லாது, ஐக்கிய தேசியக் கட்சிக்கோ அல்லது சுதந்திரக் கட்சிக்கோ தேர்தலை ஒத்திவைக்கும் எந்த அவசியமும் கிடையாது என்றும் அவர் இதன்போது கூறினார். பிரதமர் விக்கிரமசிங்க இங்கு மேலும் பேசுகையில்;


எதிர்வரும் உள்ராட்சி மன்ற தேர்தல்கள் யாவும் புதிய தேர்தல் முறைமையின் பிரகாரம் நடத்துவதற்கு பாராளுமன்றத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுவரை விகிதாசார முறையின் பிரகாரமே தேர்தல்கள் நடத்தப்பட்டன.

எனினும், தொகுதிவாரி முறைமை மற்றும் விகிதாசார முறைமை ஆகிய இரண்டும் கலந்த கலப்பு முறைமையொன்றின் கீழ் இனி தேர்தல்கள் நடைபெறவிருக்கின்றன. 
இந்த புதிய தேர்தல் முறைமைக்கு பெரும்பாலான அரசியல் கட்சிகள் தத்தமது இணக்கத்தை தெரிவித்துள்ளன.

அரசாங்கத்தினதோ அல்லது பெரும்பான்மை தரப்பினதோ கருத்துக்களை மட்டுமே கருத்திற் கொள்ளாது அனைத்து தரப்பினரும் திருப்திப்படக் கூடிய தேர்தல் முறைமையொன்று குறித்தே கவனம் செலுத்தப்பட்டது. தேர்தல் தொகுதியொன்றுக்கு பொறுப்பான உறுப்பினர் ஒருவரை தெரிவு செய்யும் முறைமையொன்றை அறிமுகப்படுத்துவதே எமது நோக்கமாகும். 


சிறுபான்மை மற்றும் சிறு கட்சிகளுக்கு அநீதி ஏற்படாத வகையிலும் அதேபோல், பெண்கள் பிரதிநிதித்துவத்தை பேணும் வகையிலும் புதிய தேர்தல் முறைமை உருவாக்கப்பட்டுள்ளது. 


இது தொடர்பில் சகல தரப்பினரதும் அபிப்பிராயங்களை பெறப்பட்டதுடன், அதற்கு சற்றுக் காலம் எடுத்தது. எனினும், தேர்தலை இவ்வாறு காலம் தாழ்த்துவதாக சிலர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். விருப்பு வாக்கு முறைமை நாட்டிற்கு பெரும் பாதிப்பாக அமைந்துள்ளதாக முன்னர் கோமிட்டவர்களே இன்று தத்தமது அரசியல் இலாபங்களுக்காக இந்த குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். 


தேர்தலை ஒத்திவைக்கும் தேவை ஜனாதிபதி தலைமையிலான சுதந்திரக் கட்சிக்கோ அல்லது எமது ஐ.தே.க.வுக்கோ கிடையாது. புதிய தேர்தல் முறைமைக்கு பாராளுமன்றத்தின் அனுமதி கிடைத்துள்ளமையால் அதன் பிரகாரம் தேர்தலை நடத்துவதற்கான சட்ட சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 


உள்ராட்சி தேர்தல் தொடர்பில் கடந்த வாரம் நான் கட்சித் தலைவர்களை சந்தித்து பேசியிருந்தேன். தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் என்பதே அனைவரினதும் அபிப்பிராயமாக இருந்தது. 


எதிர்வரும் நவம்பர் மாதம் வரவுசெலவுத் திட்ட விவாதம் நடைபெறவுள்ளதுடன், டிசம்பர் மாதம் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை நடைபெறவுள்ளது. அத்துடன், நத்தார் பண்டிகையும் டிசம்பர் மாதம் வரவுள்ளது. சாதாரண தரப் பரீட்சையை காலம் தாழ்த்த முடியாதென கல்வி அமைச்சர் தெரிவித்துவிட்டார்.

ஆகவே, இவற்றிற்கு தடங்கல் ஏற்படாத வகையில் எதிர்வரும் ஜனவரி மாதம் தேர்தலை நடத்துவது உகந்ததாக இருக்கும் என்று கட்சி தலைவர்கள் அபிப்பிராயம் வெளியிட்டுள்ளனர். இந்த யோசனை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், வரவுசெலவுத் திட்டம், சாதாரண தரப் பரீட்சை மற்றும் நத்தார் பண்டிகைக்கு இடையூறு ஏற்படாத வகையில் ஜனவரி மாதத்தில் தேர்தலுக்கான திகதியை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கிறோம். 


ஆளுந்தரப்பும் எதிர்த்தரப்பும் உடன்படக் கூடிய வகையிலேயே இந்த தேர்தல் முறைமை தயாரிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அல்லது சுதந்திரக் கட்சி அன்றி வேறு கட்சியில் (ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர்) போட்டியிட்டால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு அங்கத்துவம் இழக்க நேரிடும். பெப்ரவரி மாதத்தில் எமக்கு இடையூறு இன்றி செயற்படலாம் என்று தெரிவித்தார். 


இதேநேரம், எதிர்வரும் அக்டோபர் மாதத்தில் 3 மாகாண சபைகளின் பதவிக்காலம் முடிவடையவுள்ளதாகவும் டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி தேர்தல் நடத்த முடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கூறியுள்ளதாகவும் இதன்போது குறுக்கீடு செய்து சுட்டிக்காட்டிய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எம்.பி., எந்த தேர்தல் நடத்தப்படும் என்றும் கேள்வி எழுப்பினார். 


இதற்கு பதிலளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, டிசம்பர் மாதமளவில் தேர்தல் நடத்த முடியுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்திருந்ததாகவும் தேர்தலை வரவுசெலவுத் திட்டத்திற்கு முன்னரா அல்லது பின்னரா நடத்துவது என்பதை அவரே முடிவு செய்ய வேண்டும் என்றும் அடுத்த பாராளுமன்ற அமர்வின் போது கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டி இது தொடர்பில் ஆராய முடியும் என்றும் தெரிவித்தார்.   

 

TOTAL VIEWS : 718
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
q4jwy
  PLEASE ENTER CAPTA VALUE.