வடக்கு அமைச்சர்கள் நீக்கப்படுவார்களா?; முதலமைச்சர் விக்னேஸ்வரன் இன்று முக்கிய முடிவு
2017-06-14 09:16:45 | General

த.வினோயித்


வடமாகாண அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக அமைச்சர்கள் தன்னிலை விளக்கத்தை வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனிடம் வழங்கியுள்ள நிலையில், இன்று புதன்கிழமை நடைபெறவுள்ள வடமாகாண சபையின் விசேட அமர்வில் உறுப்பினர்களின் கருத்துக்களை அறிந்து முதலமைச்சர் தீர்மானம் ஒன்றை எடுக்கவுள்ளார்.


வடமாகாண சபையின் 4 அமைச்சர்கள் மீதும் குற்றச்சாட்டுக்கள் 
சுமத்தப்பட்டிருக்கும் நிலையில் அதிக குற்றச்சாட்டுக்களை கொண்டிருக்கும் விவசாயம் மற்றும் கல்வித் துறைகளுக்கான அமைச்சர்கள் மீது முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா? இல்லை மாகாண அமைச்சரவையை 
(4 பேரையும்) கலைத்து புதிய அமைச்சர்களை முதலமைச்சர் தனது அதிகாரத்தின் மூலம் தெரிவு செய்யவுள்ளாரா? என மாகாணசபை உறுப்பினர்கள் மத்தியில் கேள்விகள் எழுந்துள்ளன.

வடமாகாண சபை அமைச்சர்கள் மீது மாகாண சபையின் ஆளுங்கட்சியினரால் பல குற்றச்சாட்டுக்கள் தொடர்ச்சியாக சுமத்தப்பட்டுவந்தன. இந்நிலையில், இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரிப்பதற்கான விசாரணைக் குழு ஒன்றை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் நியமித்திருந்தார். இந்த விசாரணைக்குழு தீவிர  விசாரணைகளை நடத்தி பலதரப்பிடமிருந்தும் கருத்துகளைப் பெற்ற நிலையில் கடந்த மாதம் 19 ஆம் திகதி முதலமைச்சரிடம் தனது இறுதி அறிக்கையை கையளித்திருந்தது. 


மேற்படி அறிக்கையை கடந்த 6 ஆம் திகதி நடைபெற்ற வடமாகாணசபையின் 94 ஆம் அமர்வில் முதலமைச்சர் சபைக்கு சமர்ப்பித்திருந்ததுடன், மேற்படி அறிக்கை தொடர்பாக அமைச்சர்கள் சில குறைபாடுகளை கொண்டிருப்பதனாலும், உறுப்பினர்களின் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலுமே இந்த விசாரணைக் குழு அமைக்கப்பட்டதனால் உறுப்பினர்களின் கருத்துகளை அறிவதுடன், குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் அமைச்சர்களின் தன்னிலை விளக்கங்களையும் பெற்று அதன் பின்னர் நடவடிக்கை எடுப்பதாக மு தலமைச்சர் கூறியிருந்தார். 


இதனடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்ட அமைச்சர்கள் தமது தன்னிலை வி ளக்கங்களை எழுத்து மூலமாக முதலமைச்சருக்கு நேற்று செவ்வாய்க்கிழமை சமர்ப்பித்திருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து இன்றைய தினம் உறுப்பினர்களின் கருத்துக்களை அறிவதற்கான விசேட அமர்வு நடைபெறவுள்ளது.

இந்த அமர்வில் உறுப்பினர்களின் கருத்துக்களை அறிந்தபின்,  குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட அமைச்சர்கள் மீது முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா? அல்லது முழுமையாக அமைச்சரவையை கலைத்து புதிய அமைச்சர்களை தெரிவு செய்வாரா? என உறுப்பினர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. 


மேலும் அமைச்சரவையைக் கலைத்து புதிய அமைச்சர்களையே முதலமை ச்சர் தெரிவு செய்ய வேண்டுமென பல உறுப்பினர்கள் மத்தியில் கருத்துக்கள் நிலவுகின்றன. இதேவேளை அமைச்சரவையை முழுமையாக கலைப்பதற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகள்  பூரண ஆதரவைத் தெரிவித்துள்ள அதேநேரம், முழு அமைச்சர்களையும் மாற்றுவதற்கு இலங்கை தமிழரசுக் கட்சி கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறது.


இதேநேரம் ஆயிரக்கணக்கில் போராளிகளும் இலட்சக்கணக்கில் பொது மக்களும் உயிர்நீத்த போராட்டத்தின் ஒரு கட்டமாக உருவாக்கப்பட்ட வடக்கு மாகாண சபையில், 30 வருட தியாகங்களை உதாசீனம் செய்வது போல ஒரு சிலர் வந்து ஊழல், மோசடிகளை செய்து அந்தத் தியாகங்களை கொச்சைப்படுத்த ஒரு போதும் இடமளிக்க கூடாதெனவும்  பொது அமைப்புகள் பலவும் வற்புறுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 

TOTAL VIEWS : 707
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
f7oqe
  PLEASE ENTER CAPTA VALUE.