நாட்டை பிரிக்க முயல்கின்றீர்கள்; முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் அஸ்கிரிய பீடம்
2017-09-11 10:51:50 | General

அரசியல் ரீதியாக நாட்டை பிரிப்பதற்கு நாங்கள் முயற்சிப்பதாகவும் பிரிவினை பற்றி பேசக் கூடாதெனவும் அஸ்கிரிய பீடத்தினர் தங்களிடம் கூறியதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


கண்டிக்கு நேற்று முன்தினம் சனிக்கிழமை வருகைதந்த முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையிலான குழுவினர், அன்றைய தினம் மல்வத்தை மகாநாயக்க தேரர் வண. திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல சித்தார்த்த தேரரை சந்தித்து ஆசிபெற்றுக்கொண்டதுடன்,  அவருடன் நாட்டு நிலைமை குறித்து கலந்துரையாடியிருந்தனர். 

இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணியளவில் அஸ்கிரிய பீடாதிபதி மகாநாயக்கர் வரகாகொட ஞானரத்ன தேரர் தலைமையிலான குழுவினரைச் சந்தித்து முதலமைச்சர் தலைமையிலான குழுவினர் கலந்துரையாடினர். 


அஸ்கிரிய மகா விகாரையில் சுமார் ஒரு மணிநேரம் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இதைத் தொடர்ந்து இந்த சந்திப்புத் தொடர்பாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறுகையில்;


தனிப்பட்ட முறையில் அஸ்கிரிய பீடாதிபதியுடன் பேச முடியவில்லை. அவர்களில் 12 முதல் 14 பேர் வரையிலான பிக்குகள் சந்திப்பில் கலந்துகொண்டனர். பிரித் ஓதி எங்களை ஆசீர்வதித்ததுடன் தற்போதைய நாட்டு நிலைமைகள் தொடர்பாக சில கருத்துகளை தெரிவித்தனர். 


அண்மையில் தாங்கள் யாழ்ப்பாணம் வந்தபோது பல்வேறு தரப்பினரையும் மத பெரியார்களையும் சந்திக்கக் கூடிய வாய்ப்பிருந்ததாகவும் அங்கு , இந்த நாட்டில் பௌத்த மதத்தை முதன்மைப்படுத்துவதில் தங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லையென அவர்களினால் பலரும் கூறியதாகவும் தெரிவித்தனர். 


அத்துடன், அரசியல் ரீதியாக நாங்கள் நாட்டை பிரிக்க முயற்சித்ததாகவும் பிரிவினை பற்றி பேசக் கூடாதெனவும் நாங்கள் எப்போதுமே பிரிவினை பற்றி பேசுவதாகவும் தெரிவித்ததுடன்,  நாட்டை ஒற்றுமைப்படுத்த வேண்டுமே தவிர பிரிவினையை தூண்டக்கூடாதெனவும் கூறியதுடன், பல்வேறு விடயங்கள் குறித்தும் அவர்கள் கருத்துகளை முன்வைத்தனர். 


இவற்றுக்கு நான் பதிலளித்தேன். நீங்கள் கூறும் எல்லாவற்றையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனாலும் சிலவற்றை ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கின்றது. 


நாம்  அரசியல் ரீதியாக நாட்டைப் பிரிக்க முயற்சிப்பதாக நீங்கள் கூறுகின்றீர்கள். அதனை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. இந்த நாடு எப்போதுமே ஒருமித்து இருக்க வேண்டும் என்பதில் நாம் மிகுந்த கவனமாக இருக்கின்றோம்.

 
இந்த நாட்டில் நாங்கள்தான் பெரும்பான்மை இனம் எனக் கூறினீர்கள். அதனை நாம் புரிந்துகொண்டு நடக்கவேண்டும் என்ற ரீதியிலும் கருத்துகளை முன்வைத்தீர்கள். ஆனால், வடக்கில் நாம் பெரும்பான்மை இனம் என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். நாம் ஒருபோதும் பிரிவினையை தூண்டவும் இல்லை. நாட்டைப் பிரிக்க முயற்சிக்கவும் இல்லை. 


எமது மக்களும் இந்த நாட்டில் சம உரிமையுடன் வாழ வேண்டும் என்பதனையே நாம் விரும்புகின்றோம். எமது மக்களின் விருப்புக்களை மட்டுமே  நாம் பேசுகின்றோம். அதே நேரம் முழு நாட்டினது ஒற்றுமை பற்றி நாம் எல்லா இடத்திலும் கூறி வருகின்றோம். 


முழு நாடும் ஒற்றுமையாகவும் தற்போது இருப்பதைப் போன்று பிரிவினையில்லாது இருக்க வேண்டுமானால், இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வொன்று காணப்படவேண்டியதன் அவசியம் குறித்து அவர்களுக்கு மிகச் சுருக்கமாக விளக்கிக் கூறினேன். 


அத்துடன் இந்த நாடு ஒற்றையாட்சியின் கீழ் நீடிக்க வேண்டுமானால் சமஷ்டி முறையிலான தீர்வு அவசியம் என்று அண்மையில் உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்ததையும் இங்கு சுட்டிக்காட்டி, நாம் ஏன் சமஷ்டி முறையை கோருகின்றோம் என்பதனையும் அது நாட்டை ஒற்றுமைப்படுத்தி பிரிவினையை ஏற்படுத்தாத ஒன்று எனவும் வலியுறுத்தி கூறினேன். 


மேலும் சமஷ்டியை நாம் கோருவது பிற்காலத்திலேயேதான். ஆனால், அதற்கு முன்னர் நாட்டில் சமஷ்டியைக் கோரியது கண்டிய இராஜ்ஜியமே. முன்னாள் பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா சமஷ்டி கோரியது குறித்தும் ஏன் அவர் கோரினார்? என்பது குறித்தும் விளக்கமளித்ததுடன், எத்தனையோ ஆண்டுகள் கழித்துதான், நாடு பிரிவதனை தடுப்பதற்காக தமிழர்கள் சமஷ்டி கோரிக்கையை முன்வைப்பதாகவும் சுட்டிக்காட்டினேன். 


இந்த நிலையில் யாழ்ப்பாணம் சென்றுவந்தபோது, வடபகுதி மக்களின் பிரச்சினைகளை தெரிந்துகொண்டதாகவும் மக்களின் பிரதிநிதிகள் என்ற ரீதியில் அவர்களின் பிரச்சினைகளை தீர்க்க நாங்கள் நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்ட அஸ்கிரிய பீடத்தினர், இரு தரப்பு மக்களிடையேயும் பரஸ்பர ஒற்றுமை, நல்லிணக்கம் இருக்கவேண்டுமென தெரிவித்தனர்.இதனையே நாங்களும் வலியுறுத்துவதாகவும் அதற்கு மதத்தலைவர்கள் என்ற ரீதியில் தங்கள் பீடம் உதவ வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டேன். 


மேலும் அரசியல் யாப்பு தொடர்பாக எங்களிடையே வித்தியாசம் இருப்பதையும் அவர்களுக்கு விளக்கிக் கூறினேன்.  அவர்களும் செவிமடுத்தனர். 
எனவே, இந்தச் சந்திப்பு மிகவும் நன்மையானது எனவும் வருங்காலத்தில் இவ்வாறான சந்திப்புகள் தொடர்வதன் மூலம் தமிழ், சிங்கள மக்களிடையே புரிந்துணர்வை ஏற்படுத்தி, அதன் மூலம் நாட்டுக்கு நன்மை விளைவிக்கக் கூடிய காரியங்களை மேற்கொள்ளலாம் எனவும் தெரிவித்ததாகவும் விக்னேஸ்வரன் கூறினார். 
இந்தச் சந்திப்பில் விக்னேஸ்வரனுடன் வடமாகாண அமைச்சர் திருமதி அனந்தி சசிதரனும் கலந்துகொண்டார். 

TOTAL VIEWS : 865
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
tuy9h
  PLEASE ENTER CAPTA VALUE.